Friday, April 20, 2012

3 இந்துப் பெண்களும் தங்கள் கணவர்களுடன் செல்வதற்கு பாக். உயர் நீதிமன்றம் அனுமதி

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தானில் முஸ்லிம்களைத் திருமணம் செய்து கொண்ட 3 இந்துப் பெண்களும் தங்கள் கணவருடன் செல்வதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதையடுத்து  தலைமை நீதிபதி அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ரிங்கிள் குமாரி, லதா குமாரி, ஆஷா குமாரி. இவர்கள் கடந்த மாதம் ஆளும் பாகிஸ்தானிய மக்கள் கட்சி பிரமுகரால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் இந்தப் பெண்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த மூன்று பெண்களை  நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் இந்து அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி தலைமையிலான பெஞ்ச் நேற்று விசாரித்தது. கடத்தப்பட்டதாக கூறப்படும் மூன்று பெண்களும் நீதிமன்றில் நேற்று பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். மூன்று பெண்களும் முஸ்லிம்களை மணந்து பெயர் மாற்றம் செய்து கொண்டு பர்தா அணிந்த நிலையில் நீதிமன்றுக்கு வந்தனர். தாங்கள் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக இவர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர். “உங்கள் விருப்பம் போல  எதிர்காலத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்” என கூறிய நீதிபதி இப்திகார் சவுத்ரி, “இந்தப் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு பொலிஸ் அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
தங்கள் பெண்களை மீண்டும் இந்துவாக உயர் நீதிமன்றம் அறிவிக்கும் என அப்பெண்களின் பெற்றோர் எதிர்பார்த்தனர். தீர்ப்பு மணமகள்களின் முடிவுக்கேற்ப இருந்ததால் பெண்களின் பெற்றோர் ஏமாற்றம் அடைந்தனர்.
source: http://www.thinakkural.com/news/all-news/world/13132-3---------.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator