Friday, May 25, 2012

ஜாதக கட்டம் சரியில்லாததால் முதல் இரவு தள்ளிப்போனது! வேதனையில் புதுமாப்பிள்ளை தற்கொலை!

ஜாதக கட்டம் சரியில்லாததால் முதல் இரவு தள்ளிப்போனது! வேதனையில் புதுமாப்பிள்ளை தற்கொலை! சென்னை திருவெற்றியூர் கிராமத் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 22). சென்னை புறநகர் மின்சார ரயிலில் கை முறுக்கு விற்று வந்தார். ரயிலில், அவரோடு சேர்ந்து கை முறுக்கு விற்ற ஒரு பெண்ணுக்கு பாலாஜியை பிடித்துப்போனது. தன் மகள் சித்ராவை பாலாஜிக்கு திருமணம் செய்து கொடுக்க அவர் முன்வந்தார். இதையடுத்து கடந்த 18ஆம் தேதி எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சித்ராவுக்கும், பாலாஜிக்கும் திருமணம் நடந்தது.
திருமணம் நடந்த அன்றே முதல் இரவு வைத்துக்கொள்ள பாலாஜி மிகவும் வேகம் காட்டினாராம். ஆனால், உள்ளூர் ஜோதிடர் பாலாஜிக்கு கட்டம் சரியில்லை என்று முதல் இரவை தள்ளிப்போட சொன்னாராம். இரண்டு நாட்கள் வரை பொறுத்துப்பார்த்த பாலாஜி, மீண்டும் முதலிரவுக்கு தயாராகி இருக்கிறார். அப்போதும் கட்டம் சரியில்லை என்று காரணம் காட்டி முதல் இரவை ஜோதிடர் தள்ளி வைத்திருக்கிறார்.
கடைசியாக நேற்று (!24.05.2012) முதல் இரவுக்கு நாள் சரியாக இருக்கிறது என்று ஜோதிடர் தெரிவித்ததால், முதல் இரவுக்கு ஏற்பாடு நடந்தது. பாலாஜியும் தயாரானார். இந்த சூழ்நிலையில் மீண்டும் கட்டம் சரியில்லை என்று வேறொரு ஜோதிடம் மூலம் சித்ராவின் தாயாருக்கு தகவல் போனது. இதனால் பாலாஜி அதிர்ச்சி அடைந்தார். இந்த முறையும் முதல் இரவு தள்ளிப்போகிவிடுமோ என்று மனம் நொந்தார். அலங்கரிக்கப்பட்டிருந்த முதல் இரவு அறைக்குள் நுழைந்தார். தான் அணிந்திருந்த பட்டுவேட்டியை தூக்குக்கயிறாக மாற்றி வீட்டில் உத்திரத்தில் தொங்கினார்.
பாலாஜி தூங்குகிறார் என்று காத்திருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் ஜன்னல் வழியாக பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். ஜாதகம், கட்டம் என்ற வட்டங்களில் சிக்கி ஒரு அப்பாவி இளைஞர் பரிதாபமாக உயிரை விட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
[Source: http://www.nakkheeeran.com/Users/frmNews.aspx?N=76357]

மன்னாரில் கரையொதுங்கிய சடலம்

மன்னாரில் கரையொதுங்கிய சடலம் மன்னார் பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள கடற்படையினரின் காவலரணுக்கு முன்பாக வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை காலை கரையொதுங்கியது. இந்த வயோதிபத்தாய் மன்னார் பெரிய கடையைச் சேர்ந்த செபமாலை றெசினா (வயது 76) என அவரது மகன் அடையாளம் காட்டியுள்ளார்.
இந்தப்பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவரெனவும் மன்னார் உப்பள கடற்கரை வீதியூடாக வீட்டிற்கு வரும் போது தவறி கடலில் விழுந்திருக்கலாம் என அவரது மகன் தெரிவித்தார்.
மன்னார் நீதிவான் ஏ.யூட்சன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்ட போதே வயோதிபத்தாயின் மகன் இவ்வாறு தெரிவித்தார்.
சடலத்தை பார்வையிட்ட நீதிவான் சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
[Source: http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=14649:2012-05-25-12-56-23&catid=54:local&Itemid=458]

மன்னாரில் றிசாட் பதியூதீனிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி!

மன்னாரில் றிசாட் பதியூதீனிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி!மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பிற்கு எதிராக அமைச்சர் றிசாட் பதீயுதீன் நாடாளுமன்றத்தில் அவதூராக பேசியமையினை கண்டித்து மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தினுள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டன நிகழ்வினை நடத்துவதற்கு மன்னார் நீதவான் ஏ.யூட்சன் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளார்.
குறித்த நிகழ்வு தொடர்பில் ஐந்து அருட் தந்தையர்களுக்கு எதிராக மன்னார் பொலிஸாரினால் கடந்த 23ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த மனு இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதவான் ஏ.யூட்சனினால் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த ஐந்து அருட் தந்தையர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்திருந்தமை, வீதி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த போகின்றமை மற்றும் அமைச்சர் றிசாட் பதீயுதீனின் கொடும்பாவி எரியூட்டப்பட போகின்றமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், "ஆலய வளாகத்தினுள் இடம்பெறுகின்ற எந்த நிகழ்வுகளையும் நிறுத்துவதற்கு நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. ஆனால் வீதியில் எவ்விதமான கண்டன ஆர்ப்பட்டங்களோ பேரணிகளோ நடத்தக்கூடாது" என உத்தரவிட்டார்.
குறித்த பேரணி வீதியில் இடம்பெறுகின்ற போது இரண்டு சமூகங்களுக்கு இடையில் பாரிய பிரிவினை ஏற்படக்கூடும் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினர். இந்த நிலையில் குறித்த நிகழ்வு ஆலய வளாகத்தினுள் மட்டுமே இடம்பெற வேண்டும் எனவும் அவை வீதிக்கு வெளியில் இடம்பெறக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.
குறித்த நிகழ்வின் போது மன்னார் பொலிஸார் பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் அந்நிய சக்திகள் குறித்த நிகழ்வில் வன்முறையினை தூண்டாத வகையில் பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் மன்னார் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

Thursday, May 24, 2012

மன்னார் ஆயரை புத்த பிக்குவுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரிஷாட் மன்னிப்பு கோர வேண்டும் :அடைக்கலநாதன் எம்.பி. _

மன்னார் ஆயரை புத்த பிக்குவுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரிஷாட் மன்னிப்பு கோர வேண்டும் :அடைக்கலநாதன் எம்.பி. _மன்னார் ஆயர் அதிவண இராயப்பு ஜோசப்பை தம்புள்ள பிக்குவுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இந்த பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் அத்துடன் அவர் இவ்வாறு பேசியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் நேற்று சபையில் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் அகதிகள் இன்று தமது விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அந்த வகையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அவர்களுக்கு ஆதரவாக நாளை வியõழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டøமøப்பும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தவிருக்கின்றுது. வீண் பேச்சுக்களை பேசி நோட்டை குட்டிச் சுவராக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே செல்வம் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஏற்றுமதி இறக்குமதி குறித்து இங்கு பேசப்படுகின்ற நிலையில் எமது நாட்டின் ஏற்றுமதிகள் அதிகரிக்கப்பட வேண்டுமானால் நாட்டிலுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்
எமது நாட்டில் அதிகமான வளங்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை மேம்படுத்த முடியாதிருப்பதன் காரணமே நாட்டிலுள்ள பிரச்சினைகள் தான்.
ஐக்கிய இலங்கைக்குள் சமாதானமாக எமது மக்கள் வாழ வேண்டும். அதற்கு நியாயமான அரசியல் தீர்வு வேண்டும். அரசியல் தீர்வொன்று வந்துவிட்டால் நாட்டில் பிரச்சினைகளுக்கு இடமிராது. அதேபோல் இராணுவத்துக்கும் அதிகமான நிதியினை ஒதுக்க வேண்டிய தேவையும் எழாது.
நாட்டை வளமாக்க வேண்டும் என்று சிந்திக்கின்ற அரசாங்கம் அதற்கான தடைகளை முதலில் நீக்க வேண்டும்.
புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனாலும் இராணுவப் பிரசன்னங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனால் நாட்டிலுள்ள பிரச்சினைகள் விஸ்வரூபமெடுக்கின்றன.
தம்புள்ளயில் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டபோது பௌத்த போதனைகளைப் போதிக்கும் பிக்கு ஒருவரே முன்னின்று செயற்படுத்தினார். இதனை நாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இவ்வாறான புத்த பிக்குவுடன் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பை ஒப்பிட்டு அமச்சர் ரிஷாட் பதியூதீன் இங்கு பேசியிருக்கின்றார்.
மன்னார் ஆயர் இந்நாட்டில் தீர்வு ஒன்று வர வேண்டும் என்று குரல் கொடுத்தவர். அவர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளித்தார் என்பதற்காக நான்காம் மாடியில் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
அவ்வாறான ஒருவரை புத்த பிக்குவுடன் ஒப்பிட்டுப் பேசியமை குறித்து வன்மையாகக் கண்டிக்கின்றோம். அது மாத்திரமின்றி அவ்வாறு பேசியமைக்காக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இந்த பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.
மேலும் இவ்வாறான நிலைமைகளே இனப்பிரச்சினை தீர்க்க முடியாமைக்கான காரணிகளாகும். எனவே வீண் பேச்சுக்களை பேசி நாட்டை குட்டிச் சுவராக்காது நியாயமான அரசியல் தீர்வொன்றை பெறுவதற்கு அரச கூட்டமைப்புடன் பேசித் தீர்க்க வேண்டும் என்றார். ___[Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=38246]



மன்னார் ஆயருக்கான மக்கள் ஆதரவுக் கூட்டத்தை நடாத்த முயன்ற 5 மதகுருமாருக்கு நீதிமன்றம் அழைப்பு:-

judge_CI.bmpமன்னார் தேவாலய சூழலில், மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு மக்கள் ஆதரவை தெரிவிக்கும் கூட்டம் ஒன்றை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பாடு செய்ய முன்நின்று செயற்பட்டனர் என காவற்துறையினர் கருதும் மன்னார் பிரதேசத்தில் உள்ள 5 கத்தோலிக்க மதகுருமாரை மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நேற்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இவர்கள் நாளைய தினம் காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் டெஸ்மன் குலாஸ், ஆயரின் உதவியாளர் விக்டர், வங்காலை ஜெயபாலன் குரூஸ், முருங்கன் அருள்ராஜ், மடு தேவாலயத்தின் நிர்வாகி எமலியானுஸ்பிள்ளை ஆகிய மதகுருமாருக்கே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி கூட்டம் காரணமாக பிரதேசத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையில் ஐக்கியமின்மை ஏற்படும், பிரதேசத்தின் அமைதிக்கு பங்கம் ஏற்பட காரணமாக அமையும், வாகன போக்குவரத்துக்கு தடையேற்படும், அமைச்சர் ஒருவரின் உருவபொம்மை எரிக்கப்படக் கூடும் ஆகிய காரணங்களின் அடிப்படையில் இந்த மதகுருமார் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் தேவலாய வளாகத்தில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது எனவும் வேறு இனங்களுக்கு இடையூறு ஏற்படாது எனவும் மன்னார் கத்தோலிக்க திருச்சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் வீதிகளில் பேரணிகளோ, ஊர்வலங்களோ ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் கூட்டத்தை நடத்துவதற்கு காவற்துறையினரிடம் அனுமதியை பெறவில்லை எனவும் திருச்சபை தெரிவித்தள்ளது.
[Source:http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/77917/language/ta-IN/article.aspx]


Tuesday, May 22, 2012

மன்னார் தனியார் பேருந்து நிலையத்தினுள் வேறு வாகனங்கள் உட்செல்லத் தடை

மன்னார் தனியார் பேருந்து நிலையத்தினுள் வேறு வாகனங்கள் உட்செல்லத் தடை மன்னார், தலைமன்னார் நிருபர்கள்:
மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தினுள் தமது சங்கத்துக்குச் சொந்தமான பதிவிலுள்ள பேரூந்துகளைத் தவிர வேறு எந்த வாகனங்களும் உட்பிரவேசிக்க மன்னார் நகர சபை தடைவிதித்துள்ளதாக மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் ரீ. ரமேஸ் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலங்களாக மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடங்களிலுள் முச்சக்கர வண்டி உட்படப் பல வாகனங்களும் உட்பிரவேசிக்கின்றமையினால் பயணிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து வந்ததோடு சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் இவற்றை கட்டுப்படுத்தும் முகமாக மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் மன்னார் நகர சபையுடன் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டது. இதனையடுத்து மன்னார் நகர சபையிடம் இவ்விடயம் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மன்னார் நகர சபையின் தலைவர் இந் நடவடிக்கையினை மேற்கொண்டார்.
இந்த நிலையில் தற்போது சங்கத்தின் சேவையில் ஈடுபடும் பேரூந்துகளைத் தவிர ஏனைய வாகனங்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் மன்னார் நகர சபையால் மன்னார் தனியார் போக்குவரத்துச் சாலையின் நுழைவாயிலில் அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
[Source: http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=14579:2012-05-22-08-20-51&catid=54:local&Itemid=458]

மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலய நவோதய பாடசாலை-

principal மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலய நவோதய பாடசாலை-மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலய நவோதய பாடசாலை வட மாகாணத்தில் மிகவும் பழைமை வாய்ந்த பிரபலமாகிய பாடசாலையாகும். இப்பாடசாலை மன்னார் நகரின் முதல் அரச பாடசாலையாகும்.1908 ஆம் ஆண்டு அரச தமிழ் கலவன் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. மும்மொழிகளையும் கொண்ட பாடசாலையாக விளங்கியது.
இப்பாடசாலையில் முஸ்ஸிம்,இந்து,கிறிஸ்தவம்,பௌத்தம் ஆகிய நான்கு மதங்களையும் கொண்ட ஒரே நேரத்தில் கல்வி கற்ற சிறப்பு மிக்க பாடசாலையாக திகழ்ந்தது. 1908 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இப்பாடசாலையின் அதிபராக எம்.வை மாஹீர் கடமையாற்றுகின்றார்.

-சாரணர்:
-மன்னார் நகரின் முதல் அரச கனிஸ்ட பாடசாலையாக இருந்த போது மாவட்டத்தின் முதல் சாரணியம் ஸ்தாபிக்கப்பட்டது.தற்போது சாரணியம் இப்பாடசாலையில் வளர்ச்சியடைந்துள்ளது.

-பான்ட் இசைக்குழு:
மாவட்டத்தில் முதல் பான்ட் இசை வாத்தியக்குழு இப்பாடசாலையிலேயே ஆரம்பிக்கப்பட்டு தேசிய மட்டத்தில் வெற்றியீட்டியுள்ளது.
-விளையாட்டு மைதானம்:
மாவட்டத்தின் பழம் பெரும் விளையாட்டு மைதானமாக இப்பாடசாலையின் விளையாட்டரங்கு திகழ்ந்து வருகின்றது.இந்த மைதானம் பல நூற்றுக்கணக்கான வீர வீராங்கனைகளை உருவாக்கி பெருமை சேர்த்துள்ளது.
-இப்பாடசாலையில் ஆராம்ப காலத்தில் இடம் பெற்ற விளையாட்டுப்போட்டி மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது அன்றைய காலங்களில் பதவியில் இருந்த பிரதமர்களும்,ஜனாதிபதியும் கலந்து கொண்டிருந்தனர்.

1949 ஆம் ஆண்டு இடம் பெற்ற பாடசாலை நிகழ்வில் அன்றைய பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்க,1953 ஆம் ஆண்டு இடம் பெற்ற நிகழ்வில் அன்றைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவை,1954 ஆம் ஆண்டு இடம் பெற்ற நிகழ்வின் போது பிரதமர் டட்லி சேனாநாயக்கா கலந்து கொண்டார். 1979 ஆம் ஆண்டு இடம் பெற்ற நிகழ்வில் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்தனா,1989 ஆம் ஆண்டு இடம் பெற்ற நிகழ்வில் அன்றைய ஜனாதிபதியாக இருந்த ஆர்.பிரேமதாஸ ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை சிறப்புக்கூறிய அம்சமாகும்.
இப்பாடசாலை பல பட்டதாரிகளையும், பல கல்விமாண்களையும், வைத்தியர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையம்,சமூதாயத்தலைவர்களையும், ஊடகவியளாலர்களையும் உருவாக்கியுள்ளது. இப்பாடசாலை சாதி,மத,பேதமற்ற நிலையில் மும்மத மாணவர்களையும் ஒன்று சேர்த்து பல சாதனைகளை புரிந்து வெற்றி நடை போட்டு வருகின்றது. இப்பாடசாலை தனது 104 வது வருடப்பூர்த்தியை (1908-2012) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதியை எதிர்பார்த்துள்ளது
[Source: mannarwin.com]

மன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தில் 600 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சி

மன்னார் கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தில் 600 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சி : மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள மன்னார் ஆயர் இல்லம் மற்றும் அப்பகுதி மக்களுக்குச் சொந்தமான சுமார் 600 ஏக்கர் காணியை அமைச்சர் ஒருவரின் சகோதரரால் அபகரிப்பதற்காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதீக்கப்பட்ட மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறித்த கட்டுக்காரன் குடியிருப்பு கிராமாத்தில் சுமார் 600 ஏக்கர் காணிகள் காணப்படுகின்றது.அவை மன்னார் ஆயரில்லத்திற்கும் கட்டுக்காரன் குடியிருப்பு கிராம மக்களுக்கும் சொந்தமானதாக காணப்படுகின்றது.
-இந்த நிலையில் கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் அமைச்சர் றிஸாட் பதீயுதினின் சகோதரர் ஒருவருக்கு விற்பனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
-கடந்த வாரம் கனரக வாகனங்களை பயண்படுத்தி காணிக்குள் உள்ள மரங்கள் வெட்டப்பட்தோடு காடுகளும் அழிக்கப்பட்டது.
இது தொடர்பில் கேட்ட போது தற்காலிக வீதி அமைப்பதற்காகவே காடுகள் வெட்டப்படுவதாக கூறினார்கள்.
எனினும் பாதீக்கப்பட்ட கிராம மக்களாகிய நாங்கள் மன்னார் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
பின் மன்னார் பிரதேசச் செயலாளர் கட்டுக்காரன் குடியிருப்பு கிராம சேவையாளரினுடாக காணியை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கட்டுக்காரன் குடியிப்பு கிராமத்தை சேர்ந்த குறித்த தனி நபரை தன்னிடம் வந்து சந்திக்குமாறு கூறியிருந்தார். அதனை உரிய நபரிடம் கிராம சேவையாளர் கூறிய போது குறித்த நபர் கூறியுள்ளார் நான் வர மாட்டேன்.அமைச்சர் தான் வருவார் என்று.
இந்த நிலையில் மன்னார் பிரதேசச்செயலாளர் குறித்த நபருக்கு மீண்டும் எழுத்து மூலம் அழைப்பானை விடுத்திருந்தார்.பின் அங்கு சென்ற குறித்த நபர் அமைச்சரின் சகோதரன் ஒருவரே குறித்த காணியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் மன்னார் பிரதேசச் செயலக அதிகாரிகளினால் அமைச்சரின் சகோதரருக்கு தொலைபேசியூடாக தொடர்பை ஏற்படுத்தியிருந்த போது குறித்த காணியை தானே பெற்றுக்கொள்ளவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த காணிக்காண ஆவனத்தை மன்னார் பிரதேசச் செயலகத்தில் கொண்டு வந்து சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளினால் கோரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை.இந்த நிலையில் குறித்த காணி அபகரிக்கப்படுகின்றமை தொடர்பில் மன்னார் ஆயர் உள்ளிட்ட குறித்த கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் தலைமன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும் தலைமன்னார் பொலிஸார் இது வரை முறைப்பாடுகளை மேற்கொள்ளவில்லை.தற்போது இரவு நேரங்களில் பலரை வைத்து காணிகளை சுற்றி வேளியடைக்கும் நடவடிக்கைகளும் இடம் பெற்று வருவதாக பாதீக்கப்பட்ட மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
[Source: http://www.seithy.com/breifNews.php?newsID=60512&category=TamilNews&language=tamil]

நானாட்டான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!

நானாட்டான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!நானாட்டான் விபத்தில் நானாட்டான் பிரதேச சபையின் அரச தரப்பு உறுப்பினர் உற்பட மூவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நானாட்டான் பிரதேச சபையின் அரச தரப்பு உறுப்பினர் பயணம் செய்த ஜீப் வாகனம் நேற்று திங்கட்கிழமை காலை கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த மூன்று பேரூம் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நானாட்டான்- அரிப்பு பிரதான வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த போது நேற்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்தின் போது படுகாயமடைந்த நானாட்டான பிரதேச சபையின் உறுப்பினர் மொஹமட் சகாப்தீன் அவருடைய மனைவி மற்றும் மைத்துனி ஆகிய மூன்று பேருமே படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நானாட்டான் பிரதேச சபையின் உறுப்பினர் மொஹமட் சகாப்தீன் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு இவரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக மன்னார் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ் விபத்து குறித்த விசாரனைகளை முருங்கன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
[Source: www.mannarwin.com]



voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator