Monday, April 16, 2012

மன்னார்க் கடலில் டைனமைட் வெடித்ததில் படகு மூழ்கியது மீனவர் தப்பினர்

மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் ஞாயிறு மாலை நிகழ்ந்த வெடி விபத்தொன்றில் மீன்பிடிப்படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவதினம்  மாலை சுமார் 4 மணியளவில் மன்னார் நகரைச் சேர்ந்த 5 மீனவர்கள் சௌத்பார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களில் ஒருவர் படகில் இருந்தவாறு டைனமைட் வெடிபொருளைக் கொளுத்தி கடலுக்குள் வீச முற்பட்டதாகவும் அச்சமயம் அது தவறுதலாக படகினுள் வீழ்ந்து வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் படகில் இருந்த ஐந்து மீனவர்களும் உடன் கடலுக்குள் பாய்ந்து எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்டிருந்த சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியுடைய புத்தம் புதிய கண்ணாடி நார் இழைப்படகு பலத்த சேதத்திற்குள்ளாகி கடலில் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடலில் குதித்த ஐந்து மீனவர்களும் ஏனைய மீனவர்களால் பிறிதொரு மீன்பிடி படகில் ஏற்றப்பட்டு கரை திரும்பியுள்ளனர்.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/12903-2012-04-16-18-46-12.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator