Tuesday, April 24, 2012

எல்லைக் கோடுகள் தொடர்பான பிணக்குகள். இந்தியா-சீனா-பாக்கிஸ்தான்.


எண்பது வரையான எல்லைப் பிணக்குகள் உள்ளன. அவற்றில் மிக மோசமான எல்லை தொடர்பான முரண்பாடுகளை இந்தியா எதிர்கொள்வதாகவும் அறிந்தோம். இந்தியாவின் இமயமலை எல்லையை பிரிட்டிஷ் அரசு திபெத் அரசுடன் 1914ல் செய்த சிம்லா அக்கோட் (Simla Accord)என்ற உடன்படிக்கை மூலம் நிர்ணயம் செய்தது.
இந்தக் எல்லைக் கோடு மெக் மாகொன் லைன் (Mc Mahon Line) என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட இந்தியாவின் வெளியுறவுச் செயலர் சிம்லா உடன்படிக்கையை நிறைவேற்றினார். அவர் பெயரால் இந்தக் கோடு அழைக்கப்படுகிறது. இந்த எல்லைக் கோட்டை சட்டப+ர்வமானதாக இந்தியா ஏற்றுக் கொள்கிறது.
ஆனால் சீனா அதை ஏற்க மறுக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவுடன் பேச்சு நடத்தி எல்லை போடுவதற்கு திபெத்திற்கு இறைமை உரித்தும் தத்துவமும்
இல்லை என்று சீனா வாதிடுகிறது. திபெத் சீனாவுக்குச் சொந்தமானது அதற்கு உடன்படிக்கை செய்வதற்கு உரிமை இல்லை என்பது சீன நிலைப்பாடு.
1950ல் திபெத்தைக் கைப்பற்றிய சீனா இந்தியாவுக்குச் சொந்தமான அருணாசலப் பிரதேசத்தின் வட பகுதிக்கு உரிமை கோருகிறது. தான் உரிமை கோரும் பகுதியைச் சீன அரசு தெற்கு திபெத் என்று பெயரிட்டுள்ளது. இதனால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பகைமை உருவாகியுள்ளது.
மெக் மாகொன் எல்லைக் கோட்டை ஏற்க மறுக்கும் சீனா அந்தக் கோட்டின் தெற்கிலுள்ள அருணாசலப் பிரதேசத்தின் 90,000 சதுர கி.மீ நிலப்பரப்பிற்கு உரிமை கோருகிறது. இந்த நிலப்பரப்பிற்குத் தான் சீனா தெற்கு திபெத் என்று பெயரிட்டுள்ளது. அத்தோடு சீனா தயாரித்த வரைபடங்களிலும் இந்தப் பகுதி சீனாவுக்குச் சொந்தமாகக் காட்டப்பட்டுள்ளது.
1962ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்த போரின் போது 1834 தொடக்கம் இந்தியா வசமிருந்த அக்சாய் சீன்(Aksai Chin) என்ற 37,250 சதுர கி.மீ நிலப்பரப்பை சீனா கைப்பற்றியது. அதைச் சீனா தனது நாட்டோடு நிரந்தரமாக இணைத்துள்ளது.

பாக்கிஸ்தான் காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஆட்சி செய்கிறது. இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் நல்லுறவு ஏற்படுவதை காஷ்மீர் பிரச்சனை தடுக்கிறது. 1947 -1948ல் நடந்த இந்தியா –பாக்கிஸ்தான் போருக்குப் பிறகு காஷ்மீரை இந்தியாவும் பாக்கிஸ்தானும் பங்கு போட்டு ஆட்சி செய்கின்றன.
இந்தியா காஷ்மீரின் 43 விழுக்காட்டையும் பாக்கிஸ்தான் 37 விழுக்காட்டையும் சீனா 20 விழுக்காட்டையும் ஆட்சி செய்கின்றன. அது எப்படி என்று பார்ப்போம். இந்தியா ஆட்சி செய்யும் பகுதியில் ஜம்மு முழுவதும் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கும் லடாக் சியாச்செம் உறை பனிப் பகுதியும் அடங்குகின்றன..
பாக்கிஸ்தான் ஆட்சி செய்யும் பகுதியில் கில்கிற், பல்றிஸ்தான் ஆகியவற்றின் வடபகுதிகள் அடங்குகின்றன. இதை பாக்கிஸ்தான் விடுவிக்கப்பட்ட பகுதி என்ற அர்த்தத்தில் அசாத் (Azad) காஷ்மீர் என்று அழைக்கிறது
சீனா காஷ்மீரின் 20 விழுக்காட்டை ஆட்சி செய்கிறது. இதில் 1962ம் ஆண்டுப் போரில் கைப்பற்றப்பட்ட அக்சாய் சீன் பகுதியும் பாக்கிஸ்தான் சீனாவுக்கு நன்கொடையாகக் கொடுத்த டிரான்ஸ் கரக்கோரம் டிரைக்ற் (Trans Karakoram Tract) எனப்படும் ஷக்சாம் (Shaksam Valley) பள்ளத்தாக்கும் அடங்கும்.
அக்சாய் சீன் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி என்று சீன அரசு கூறுகிறது. தனது நாட்டோடு இணைப்பதற்காக அக்சாய் சீன் வரை ஒரு நெடுஞ்சாலையையும் உலங்கு வானூர்தித் தளத்தையும் சீனா அமைத்துள்ளது. மேலும் தனது இராணுவத்தையும் சீனா அக்சாய் சீனில் நிறுத்தியுள்ளது.
இந்திய அரசியல் சாசனத்தின் 370ம் சரத்து ஜம்மு காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்தை வழங்குகிறது. ஆனால் இந்திய மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட விசேட உரிமைகளை படிப்படியாக மீளப்பெற்றுள்ளது. இன்று மக்களின் எதிர்ப்பை முறியடிப்பதற்காக பெருமளவு இந்தியத் துருப்புக்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்று இந்திய அரசு பிரகடனஞ் செய்துள்ளது. இதைப் பாக்கிஸ்தான் ஏற்க மறுக்கிறது. ஜம்மு காஷ்மீர் உரிமைப் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிறது. மக்கள் கருத்துக் கணிப்பு மூலம் ஜம்மு காஷ்மீர் யாருக்குச் சொந்தம் என்று தீர்க்கப்படவேண்டும் என்று பாக்கிஸ்தான் வாதிடுகிறது.

www.Tamilkathir.com

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator