Monday, April 16, 2012

'பலஸ்தீன தனி நாடு அமைவதற்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும்'

பலஸ்தீன தனி நாடு அமைவதற்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிக்கும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் பலஸ்தீன் தனி நாடு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பலஸ்தீன ஜனாதிபதி முஹமட் அபாஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இலங்கை வந்தடைந்தார்.

பலஸ்தீன ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ரெயிட் என்.ஏ.மலிக் உள்ளிட்ட குழுவினரும் இலங்கை வந்திருந்தனர்.



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பலஸ்தீன் ஜனாதிபதி முஹமட் அபாஸ் ஆகியோர் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் பேச்சு நடத்தினர்.

இதன்போது, அரசியல், பொருளாதார, சுற்றுலா மற்றும் உயர் கல்வி ஆகிய நான்கு துறைகள் தொடர்பாக இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டன.

இதனையடுத்து, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ரெயிட் என்.ஏ.மலிக் ஆகியோருக்கிடைலும் இரு தரப்பு பேச்சுவார்த்தை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் பலஸ்தீன் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ரெயிட் என்.ஏ.மலிக்,

"இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் விரிவடையும். அத்துடன் வலய மற்றும் சர்வதேச ரீதியில் இரு நாடுகளுக்கிடையிலான உறவும் மேலும் அதிகரிக்கும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை மேலும் அதிகரிப்பதற்கு இந்த இரண்டு ஒப்பந்தங்களும் உந்து சக்தியாக இருக்கும். அரசியல் தொடர்பு அதிகரிக்கப்படவுள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இணை வர்த்தக சங்கமும் அமைக்கப்படவுள்ளது" என்றார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பலஸ்தீன் தனி நாடு அமைவதற்கு உதவியாக அமையும் எதிர்பார்க்கிறீர்களா என ஊடகவியலாளரொருவர் வினவியதற்கு,

"பலஸ்தீன் தனி நாடு அமைவதற்கு இலங்கை ஏற்கனவே ஆதரவளித்துள்ளது. இந்த ஆதரவு எதிர்காலத்தில் தொடர்ந்து வழங்கப்படும்.

இந்த ஆதரவிற்காக ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்ட வேண்டிய அவசியமில்லை. குறித்த ஒப்பந்தங்கள் நாடுகள் என்ற அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவிட்டாலும் இலங்கை தொடர்ந்து பலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும்" என அமைச்சர் பீரிஸ் பதிளித்தார்.

அத்துடன் அமெரிக்கா அனுசரணையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிராக பஸ்தீன் உட்பட அரபு நாடுகள் செயற்பட்டமைக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


பலஸ்தீனத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அமைச்சர் பீரிஸிற்கு பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் இச்சந்திப்பின் போது அழைப்பு விடுத்தார்.

http://www.tamilmirr...6-14-08-18.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator