தம்புள்ள பிக்கு மிகவும் கேவலமான முறையில் நடந்துகொண்டது போல் மன்னார் ஆயரும் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது உயிரைக் கொடுத்தேனும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை செய்தே தீருவேன் என்றும் சூளுரைத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சூளுரைத்த அவர் மேலும் கூறியதாவது;
தம்புள்ளயில் ஒரு பிக்கு, மனிதன் செய்ய முடியாத வகையிலான மிகவும் கேவலமான வேலைகளை செய்தார். அவர் நேரில் சென்று பள்ளிவாசலை உடைத்தார். மிரட்டல்களை விடுத்தார். அதேபோன்று இப்போது மன்னார் ஆயரும் முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க வேண்டாமென பிரசாரம் செய்து வருகின்றார். முஸ்லிம்களுக்க யாரும் காணிகளை விற்றால் அவர்களை அடிப்பேன் என்றும் ஆயர் கூறி வருகின்றார்.
அத்துடன் மன்னாரில் காடுகளை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதாக ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் பிரதியை ஜனாதிபதி என்னிடம் தந்துள்ளார். நான் யாருடைய காணியையும் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இடம்பெயர்ந்த ஒரு இலட்சம் முஸ்லிம்களையும் மீள்குடியேற்றவே முயற்சிக்கின்றேன். என் உயிரைக்கொடுத்தாவது அவர்களை அந்த இடங்களில் மீள்குடியேற்றியே தீருவேன்.
முஸ்லிம்களை மீள்குடியேற்றும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்னின்று செயற்பட வேண்டும். ஆனால், அவர்கள் இப்படி நடந்து கொள்ளவில்லை. புலிகளால் விரட்டப்பட்ட ஒரு இலட்சம் மக்கள் இன்று புத்தளத்தில் தங்கியுள்ளனர். இவர்களை மீள்குடியேற்ற அனுமதிக்காது விட்டால் 20 இலட்சம் முஸ்லிம்களையும் ஒன்று திரட்டி புலிகளின் அநியாயங்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஒரு ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோருவேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சிங்கக் கொடியை ஏந்தியதால் அவர் இன்று கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார். சிங்கக் கொடி அவருக்கோ அல்லது எனக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ உரியதல்ல. இந்த நாட்டுக்குரியது. அதனை ஏந்தக்கூடாதென எப்படி சொல்ல முடியும்.
சம்பந்தன் சிங்கக் கொடி ஏந்துவதற்கு மாவை சேனாதிராஜா மன்னிப்புக் கோருகிறார். இது எந்தளவு வெட்கம் கெட்டவேலை. இதன் மூலம் இனவாதமே தூண்டப்படுகின்றது.
தமிழர்களின் போராட்டத்தை நான் எதிர்க்கவில்லை. அவர்களுக்குரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். அதேபோல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் தீர்வுகள் வேண்டும். தமிழரின் பிரச்சினை தொடர்பில் பேசும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் முஸ்லிம்கள் தொடர்பில் பேசத் தயாராயில்லை. இது பெரும் அநீதியானது.
Source: http://www.thinakkural.com/images/stories/ArtiImage/news/local/sri_polities/rishad_paduthn.jpg
No comments:
Post a Comment