Wednesday, April 25, 2012

இலங்கை அகதிகளின் உண்ணாவிரதம் 10வது நாளாகவும் நீடிக்கிறது


செங்கல்பட்டு அகதிகள் முகாமில் இலங்கை அகதி கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் இன்று 10வது நாளாக நீடித்து வருகிறது.

5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. கியூ பிரிவு பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இந்த முகாம் இயங்கி வருகிறது.

உரிய ஆவணம் இல்லாமல் தமிழகத்துக்குள் வந்தவர்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என 32 பேர், இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உடனடியாக வழக்குகளில் இருந்து விடுவித்து திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16ம் திகதி முதல் 14 பேர், தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10வது நாளாக உண்ணாவிரதம் இன்று (25) தொடர்ந்து நடந்து வருகிறது.



இந்நிலையில், நேற்று ஒருவர் மரத்தில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தார். அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தி கீழே இறக்கினர். இன்று காலை கேசவன், சுதர்சன், நாகராஜ் ஆகியோருக்கு மயக்கம் ஏற்பட்டது.

தகவலின் பேரில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டாக்டர்கள் விரைந்தனர். வலுக்கட்டாயமாக அவர்களை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர். அங்கு, சிகிச்சை எடுத்துக் கொள்ள அவர்கள் மறுத்தனர்.

இருப்பினும் குளுக்கோஸ் மட்டும் ஏற்றப்பட்டது. வேறு எதுவும் சாப்பிட மறுத்து தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். உண்ணாவிரதம் இருந்து வரும் மேலும் 5 பேர், ஆபத்தான நிலையில் உள்ளனர். கியூ பிரிவு பொலிஸார், வருவாய் துறை அதிகாரிகள் என யாரும் இதுவரை அகதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator