Tuesday, April 17, 2012

முறைப்பெண்ணுடன் கல்யாணம் நடந்தது போல் போஸ்டர் ஒட்டிய வாலிபர் கைது

தூத்துக்குடி: முறைப் பெண்ணை திருமணம் செய்து தர மறுத்ததால் அந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது போல் போஸ்டர் அடித்து ஒட்டியவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தொட்டிக்காரன் விளையைச் சேர்ந்தவர் மந்திரம் மகன் குமார். அவர் மதுரையில் உள்ள தனியார் அழைப்பிதழ் விற்பனை கடையில் வேலை பார்த்து வந்தார். அவரது உறவினர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதி உதயநேரியைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர் குடும்பத்துடன் மதுரையில் தங்கியிருந்து தொழில் செய்து வருகிறார்.


இந்நிலையில் பழனிகுமாரின் மகள் சந்தனபிரியா மீது ஆசைப்பட்டு குமார் பெண் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இது குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தன்னை அவமானப்படுத்திய பழனிகுமார் குடும்பத்தை பழிவாங்க நினைத்த அவர் இதற்காக குறுக்கு வழியை கையாண்டார்.

தனக்கும் பழனிகுமார் மகளுக்கும் திருமணம் நடந்தது போன்றும் அதை அந்த பெண்ணின் பெற்றோர் வாழ்த்துவது போன்றும் இருவரது படத்தையும் வைத்து கிராபிக்ஸ் செய்து போஸ்டர் அடித்தார். மதுரையில் ஒட்டினால் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து பெண்ணின் தாய் ஊரான சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கபத்து மரக்குடி, தட்டார்மடம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் போஸ்டர்களை ஒட்டினார்.

மறுநாள் திருமண போஸ்டரை பார்த்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். உடனே மதுரையில் உள்ள அவரது தந்தை பழனிகுமாருக்கு போன் செய்து உன் மகள் திருமணத்தை எங்களுக்கு தெரியாமல் அங்கேயே நடத்தி விட்டாயா என்று உறவினர்கள் அவரை பிடி பிடி என பிடித்துவிட்டனர். இது பழனிகுமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நமக்கே தெரியாமல் நம்ம பிள்ளைக்கு கல்யாணமா என்று ஆத்திரமடைந்த அவர் தனது மகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தார். அங்கு வந்தது பிறகு தான் தெரிந்தது குமார் தான் இந்த பித்தலாட்டத்தை செய்தது என்று. உடனே தனது மகள் மூலம் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ வர்கீஸ் விசாரணை நடத்தி குமாரை கைது செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source: http://tamil.oneindia.in/news/2012/04/17/tamilnadu-fake-wedding-posters-displayed-tuticorin-aid0175.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator