Thursday, April 26, 2012

அரசின் புதிய குடிவரவு சட்ட மாற்றங்கள் - கனடா வரும் அகதிகளின் கதி என்ன?

http://www.ekuruvi.com/newsimage/asyllum%20seekers%20L.jpgகனடிய குடிவரவு சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய மாற்றங்களால் கனடாவிற்குள் வரும் அகதிகள் பலர் சிறையில் இருக்க வேண்டிய நிலைமை உண்டாகியுள்ளது. அரசின் புதிய சி-31 சட்டமூலத்தின் படி இனி ஆட்கடத்தல் மூலம் கனடாவிற்குள் வந்தவர்களாக சந்தேகிக்கப்படும் அகதிகளின் கோரிக்கைகள் எதுவும் பரிசீலிக்கப்படாது. உடனடியாக அவர்களை கனடிய சிறைகளில் போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கனடிய குடிவரவு அமைச்சர் ஜோசன் கென்னி அறிவித்துள்ளார்.

ஆட்கடத்தல் மூலம் பெரும் குழுக்களாக நாட்டிற்குள் வருபவர்களால் பொது பாதுகாப்பிற்கு இடையூறு நேர்வதாகவும் எனவே அவர்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் நேற்று ஊடகமொன்றிற்கு அளித்த நேர்காணலில் அமைச்சர் கென்னி கூறியுள்ளார். புதிய சட்ட மூலத்தின் படி இனி அகதிகள் குழுக்களாக கனடா வந்தால் அவர்களை விசாரிக்கும் அதிகாரம் பொதுப் பாதுகாப்பு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆட்கடத்தல் மூலமாக நாட்டிற்குள் வந்ததாக் சந்தேகிக்கப்படுவோருக்கும் இது பொருந்தும் என அமைச்சர் கென்னி விளக்கமளித்துள்ளார். அதே நேரத்தில் தங்கள் சொந்த முயற்ச்சியில் தனியாக கனடா வரும் அகதிகள் வேறு விதமாகவே பிரித்துப் பார்க்கப்படுவர் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

2010 ஆண்டு எம்.வி.சன் சீ கப்பல் மூலம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா துறைமுகத்தை வந்தடைந்த 492 இலங்கைத் தமிழ் புகலிடம் கோருவோரில் பெரும்பாலானோர் சிறைக்கு அனுப்பட்டனர். ஆண்களை குற்றவாளிகளைத் தடுத்து வைக்கும் அதிகூடிய பாதுகாப்பு நிறைந்த சீர்சிருத்த மையத்திலும், குழந்தைகளற்ற பெண்களை நடுத்தர பாதுகாப்புக்கள் கொண்ட சீர்சிருத்த மையத்திலும், குழந்தைகள் உள்ள பெண்களை இளையோர் பாதுகாப்பு மையத்திலும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக  கனடியத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சட்டத்தரணி கரி ஆனந்தசங்கரி கருத்து தெரிவிக்கையில்,  கனடா இளம் சிறார்களை சிறையிலடைக்கக் கூடாது என்ற நீதி முறைமையைக் கொண்டிருக்கின்ற போதிலும், அகதிகளாக கனடா வரும் சிறார்களை எந்த கேள்வியும், முறையீட்டு உரிமையும் இல்லாமல் ஒரு வருடத்திற்கு  சிறையில் அடைப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.

அகதிகளாக நாட்டிற்குள் வருபவர்களை ஏற்றுக் கொள்ளும் ஒரு சிறந்த நாடு கனடா என்றும் தற்போதைய அரசின் சட்ட திருத்தங்கள் மூலம் அவற்றை மாற்ற முற்படுவது மனித உரிமைகளை மதிக்காமல் செயல்படுவது போன்று உள்ளதாக எதிர்க் கட்சியினரும், பல துறையைச் சார்ந்த நிபுணர்களும் விமர்சித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக கனடா முழுவதிலும் உள்ள பல்வேறு அமைப்புக்களும் அகதிகளாக வருவோரிடம் அரசு நடந்து கொள்ளும் விதம் சட்ட விரோதமானது எனக் குற்றஞ்சாட்டியுள்ளதுடன் தங்களின் கடுமையான எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Source:http://www.ekuruvi.com/newsimage/asyllum%20seekers%20L.jpg

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator