Tuesday, April 17, 2012

ஜெனிவாவுக்கும் கூடங்குளத்துக்கும் தொடர்பில்லையாம் - இந்தியாவின் குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா

ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததற்கு பதிலடியாகவே, கூடங்குளம் அணுஉலைக்கு சிறிலங்கா எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக சிறிலங்காவின் அணுசக்தி அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“மின்சார தேவைக்காக அணுஉலை அமைப்பதற்கு இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.


கூடங்குளம் விவகாரம் தொடர்பாக இந்திய ஊடகங்கள் வெளியிடும் கருத்து தவறானது. இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் இருநாட்டு உறவுகளுக்குப் பாதிப்பு ஏற்படும்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக, கூடங்குளத்திற்கு எதிராக சிறிலங்கா செயற்படவில்லை.

கூடங்குளம் அணு உலையினால் அணுக்கசிவு அல்லது பாதிப்பு ஏதும் ஏற்படுமானால் அதிலிருந்து பாதுகாப்புப் பெறும் பொறுப்பு சிறிலங்காவுக்கு உள்ளது.

அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை சிறிலங்கா மேற்கொண்டு வருகிறது.

2010ம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலக அணுசக்தி முகவர் அமைப்பு மாநாட்டில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்திய அணுசக்தி அதிகார சபையின் குழுவுடன் பேச்சு நடத்தினார்.

அதையடுத்து அவர் கூடங்குளத்திற்கும் நேரில் சென்று பார்வையிட்டார்.

அனைத்துலக அணுசக்தி உடன்பாட்டின் படி, அணு உலை அமைக்கும் போது அந்த நாட்டு மக்களுக்கும் அயல்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் அணுசக்தி இடர் தடுப்பு திட்டமொன்றை முன்னெடுப்பதற்கான உடன்பாடு ஒன்றை கைச்சாத்திடுவது தொடர்பான சாத்தியக்கூற்று அறிக்கை தயாரிக்க இரு ஆண்டுகளுக்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இதற்காக உடன்பாட்டு நகலை தயாரித்தது. ஆனால் இந்தியத் தரப்பில் அதற்கு பதில் வழங்கப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அனைத்துலக அணுசக்தி முகவர் அமைப்பு மாநாட்டில் இரு நாடுகளும் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றன.

இந்தியாவுடன் இதுபற்றி உடன்பாடு செய்து கொள்ள சிறிலங்கா எதிர்பார்த்துள்ளது“ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Source: http://www.puthinappalakai.com/view.php?20120417106012

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator