Wednesday, April 25, 2012

தென்சூடான் மீது சூடான் போர்ப் பிரகடனம் எல்லைப் பகுதியில் கடுமையான வான் தாக்குதல்

ஹார்டோம் : தென் சூடான் மீது சூடான் அரசு போர்ப் பிரகடனம் செய்திருப்பதாக தென் சூடான் ஜனாதிபதி சல்வா கிர் கூறியுள்ளார். இரு சூடான் நாடுகளிலிருந்தும் அதிகளவான எண்ணெயினை கொள்வனவு செய்யும் சீனாவின் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே தென் சூடானிய ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை தென் சூடான் எல்லைப் பகுதியில் சூடான் போர் விமானங்கள் நேற்று புதன்கிழமை கடுமையான தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சூடான் போர் விமானங்கள் தெற்கு சூடானில் எண்ணெய் வயல்கள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வான்வழித் தாக்குதலுக்கு இணையாக தரைப்படையின் பீரங்கிகளும் தாக்குதல் நடத்தின.

இரு தரப்புக்கும் இடையே மூண்டுள்ள கடுமையான போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வலியுறுத்தியுள்ளன.
எண்ணெய் வளம் மிக்க வயல்களை ஒட்டிய எல்லைக் கோட்டை நிர்ணயிப்பதில் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என அனைத்து நாடுகளும் கேட்டுக் கொள்கின்றன.
இதனிடையே சூடானின் குண்டு வீச்சுத் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான் கி மூன்  கண்டித்துள்ளார். இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் பிரச்சினைக்கு போர் மூலம் தீர்வு காண முடியாது என்று அந்நாட்டு அதிபர் ஒமர் அல் பஷீரிடம் குறிப்பிட்ட பான் கி மூன், இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகத் தீர்வு காண வேண்டும் என்று தெற்கு சூடான் ஜனாதிபதி சல்வா கிர்ரை வலியுறுத்தியுள்ளார். அபிப்பிராய பேதங்களைக் களைந்து விட்டு இரு தரப்பும் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாட்டின் வடக்குப் பகுதியிலிருந்து தெற்கு சூடானின் அனைத்து துருப்புகளையும் முற்றிலுமாக ஒழித்த பிறகே சண்டை நிறுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று சூடான் ஜனாதிபதி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை  தெற்கு சூடான் பகுதியில் எம்ஐஜி 29 ஜெட் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.
சண்டை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளதால் சூடானின் பிரதான சந்தைப் பகுதியான ருப்கோனா  மார்க்கெட்டில் அனைத்து பொருட்களின் விலையும் குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை தங்கத்தின் விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator