Friday, April 13, 2012

செயற்கைக்கோள் சுற்றுப் பாதையில் நுழையவில்லை: ஏவுகணைத் தோல்வி பற்றி வடகொரியா

Voice of Mannar  பியாங்க்யாங்க், ஏப்.13: இன்று அதிகாலை வடகொரியா மிகுந்த எதிர்பார்ப்போடு ஏவிய ஏவுகணை ஒன்று தோல்வியில் முடிந்தது. வெள்ளிக்கிழமை காலை செயற்கைக்கோளைச் சுமந்து சென்ற அந்த ஏவுகணை ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே மஞ்சள் கடலில் துண்டுதுண்டாகச் சிதறி விழுந்தது. அந்த ஏவுகணை கவுண்ட் டவுன் முடிந்து புறப்பட்ட சில நொடிகளிலேயே, தென் கொரியாவும், அமெரிக்காவும் இந்த ஏவுகணை தோல்வியில் முடிந்தது என்று செய்தியை வெளியிட்டன.
அதன் பின்னர் சில மணி நேரம் கழித்து,  வட கொரிய அரசும் தனது புதிய செயற்கைக் கோள் ஏவுகணை தனது சுற்று வட்டப் பாதையில் சென்றடைவதில் தோல்வி கண்டதாக முறையாக தொலைக்காட்சி மூலம் அறிவித்தது.வடகொரியா தனது அணு ஆயுத ஏவுகணை செயல்பாடுகளால் உலக அளவில் எதிர்ப்பை சந்தித்தது. மேலும், வடகொரிய ஏவுகணை நுட்பம் சர்வதேச விதிகளை மீறுவதாகவும், அதனை தடுக்க வேண்டும் என்றும் உலக நாடுகள் சில கோரி வந்தன.  ரஷ்யா உள்ளிட்ட எட்டு தொழில் வளர்ச்சி நாடுகள் வாஷிங்க்டனில் கூடி, வடகொரியாவின் இந்த ஏவுகணை ஏவும் விவகாரத்தில் எதிர்ப்பைப் பதிவு செய்தன. இந்த நிலையில், ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில், இந்த ஏவுகணை ஏவப்பட்டபின் ஏற்படப் போகும் நிலைமை குறித்து ஆராயவும் விவாதிக்கவும் வெள்ளிக் கிழமை இன்று பிற்பகல் அவசரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. மேலும் தனது அணு ஆயுத முயற்சிகளை கைவிடவில்லை எனில் வடகொரியாவுக்கு உணவு உள்ளிட்ட பொருள்கள் சென்றடைவதில் தடை ஏற்படுத்தப் போவதாக வாஷிங்க்டன் அறிவித்திருந்தது. இத்தகைய அரசியல் சூழலில், வடகொரியா தனது ஏவுகணை தோல்வி அடைந்ததாக இன்று காலை முறைப்படி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator