Tuesday, April 10, 2012

கழிவுநீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பம்: பெண் விஞ்ஞானி சாதனை

Sarah Haigh
கழிவுநீரில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை இங்கிலாந்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி உருவாக்கி வருகிறார்.
உலக பணக்காரர் பில்கேட்ஸ் அளித்த நிதியுதவியுடன் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரும், உலக பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவருமான பில்கேட்ஸ், குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கான கண்டுபிடிப்பை ஊக்குவிக்க நிதியுதவி அறிவித்தார்.
உலகம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது ப்ராஜக்ட்களை அனுப்பினர். அதில் இங்கிலாந்தை சேர்ந்த நானோ தொழில்நுட்ப வல்லுனர் சாரா ஹே என்ற பெண்ணின் ப்ராஜக்ட் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ஸ்கூல் ஆப் மெட்டீரியல்ஸ் கல்வி நிலையத்தில் சாரா ஹே ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார்.
லண்டனின் இம்பீரியல் கல்லூரி மற்றும் டரம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து அவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். ஆராய்ச்சிக்காக முதலில் அவருக்கு பில்கேட்ஸ் அண்ட் மெலிண்டா அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதி அளித்துள்ளது.
இதுபற்றி சாரா கூறியதாவது: கழிவுநீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, எரிபொருள் தயாரிப்பது என பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஆராய்ச்சியும் அதுபோன்ற முயற்சிதான்.
இயந்திரத்திற்குள் செலுத்தப்படும் கழிவுநீருடன் பாக்டீரியா கலவை மற்றும் நானோ துகள்கள் வினை புரியும். இந்த ரசாயன வினைக்கு பிறகு, ஹைட்ரஜன் வாயு உருவாகும்.
அதை ஹைட்ரசீனாக மாற்றுவது எளிது. அதுதான் ராக்கெட் எரிபொருளாக பயன்படுகிறது. கழிவுநீரில் இருந்து ஹைட்ரஜன் பிரிக்கப்பட்ட பிறகு, அந்த நீர் மேலும் மேலும் வடிகட்டப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக மாற்றப்படுகிறது.
உலகின் பல நாடுகளில், பல பகுதிகளில் குடிநீருக்கு மக்கள் திண்டாடுகின்றனர். சுத்தமான குடிநீர் தேடி பல கி.மீ. செல்கின்றனர். குடிநீருக்காக மக்கள் சிரமப்பட கூடாது என்பதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம்.
இயந்திரத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி நடக்கிறது. அடுத்த ஆண்டில் பணி முடிந்து செயல் விளக்கம் அளிக்கப்படும். எங்கும் எளிதில் எடுத்து செல்லும் வகையில் இந்த மெஷின் இருக்கும் என்று கூறினார். அடுத்த ஆண்டில் இந்த ஆராய்ச்சிக்காக பில்கேட்ஸ் அறக்கட்டளை ரூ.5 கோடி நிதியை சாராவுக்கு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: http://www.thinakkural.com/news/all-news/world/12656-2012-04-10-21-12-41.html

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator