
அரசியல் தீர்வு குறித்த இருதரப்பு பேச்சுக்கான சாதகமான சூழலை அரசாங்கம் இன்னமும் உருவாக்கவில்லையென தமிழத் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் இர.சம்பந்தன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு கூட்டமைப்பு கையளித்த தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான தீர்வு யோசனைகளுக்கு அரசு இன்னமும் பதிலளிக்காத நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எவ்வாறு அங்கம் வகிக்க முடியுமென அவர் எமது செய்தியாளரிடம் கேள்வி எழுப்பினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தாம் சமர்ப்பித்த யோசனைகளின் அடிப்படையில் பேசி இணக்கத்தை ஏற்படுத்தி அந்த இணக்கப்பாட்டை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதென அரசுடன் இடம்பெற்ற பேச்சுக்களில் முடிவு செய்யப்பட்டதெனவும், அந்த அடிப்படையில்தான் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இணையுமென பேச்சில் கலந்துகொண்ட அமைச்சர்களிடம் கூறப்பட்டிருந்ததெனவும் அவர் குறிப்பிட்டார்;.
ஏற்றுக் கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்தாது, வெறுமனே தமிழத் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க ஒத்துழைப்பு வழங்கவில்லையென அரசு குற்றம் சாட்டுவது நியாயமற்றதென சம்பந்தன் கூறினார்.
மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த சம்பந்தன், எதிர்க்கட்சிகளின் பொது அணி என்ற அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மேதின கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்குகொள்ளுமெனவும், அதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனியாக மேதின கூட்டம் ஒன்றை நடத்துமெனவும் கூறினார்.
Source: http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=11644