Friday, April 13, 2012

எங்கு திரும்பினாலும் மனைவி ஞாபகம் : ஊரைவிட்டு வந்து பிச்சை எடுத்து வாழும் பண்ணையார்


 இடைப்பாடியில் மிக வசதிபடைத்த பண்ணையார் ஒருவர் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார்.    அவரது பெயர் ஆனந்தன் (வயது 80) அந்தியூர் அருகே உள்ள வறட்டுபள்ளம், செல்லம்பாளையம் ராமகவுண்டன் தொட்டத்தில் சுமார் 7 ஏக்கர் விவசாய நிலத்தில் இரண்டு கிணறுகளின் மூலம் தண்ணீர் பாய்ச்சி கரும்பு, மஞ்சள்,கடலை என பசுமையான விவசாயம் நடைபெறும் தோட்டத்தின் மையத்தில் வீடு அதன் அருகே மாட்டுக்கொட்டகை, வீட்டை சுற்றிலும் வாழை, தென்னை என்று செழிபான நிலத்திற்கு சொந்தகாரர்தான் இந்த ஆனந்தன்.


ஆனால் அவர் கடந்த 6 ஆண்டுகளாக இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரன் கோவில் வாசலில் நின்று பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார்.

பகல் நேரத்தில் கோவில் பிரசாதங்களையும், பக்தர்களின் அன்னதான நிகழ்ச்சியிலும் வயிற்றை நிரப்பிக்கொள்ளும், ஆனந்தன் காலை முதல் மாலை வரை பக்தர்கள் தரும் காசுகளை சேகரித்து மாலையில் ஏதாவது ஓரு ஓட்டலில் சாப்பாடு, இரவில் உறங்க வசதியாக 2 கொசு வர்த்தி வாங்கி கொண்டு கோவில் எதிரில் உள்ள ஒரு டிஜிட்டல் ஸ்டூடியோ வாசலில் படுத்துக்கொள்வார்.

அவ்வப்போது கோவில் அலுவலர்கள் சொல்லும் சின்ன சின்ன வேலைகளையும் முகம் சுழிக்காமல் செய்வார்.

இவ்வளவு வசதி இருந்தும் பிச்சை எடுத்து வாழ்வது பற்றி ஆனந்தன்,   “ நானும் மற்றவர்களை போல் நல்ல முறையில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தேன். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் எனது மனைவி சின்னமாள் வறட்டு பள்ளம் அணை பகுதியில் காட்டு யாணை தாக்கி இறந்து விட்டார் உயிருக்குயிராக நேசித்த எனது மனைவி சின்னமாள் இறந்ததில் இருந்து அவர் நினைவாகவே இருந்து வந்தேன்.

மேலும் அங்குள்ள வீடு, விவசாய நிலம் ஆகிவற்றை பார்க்கும்போது திரும்ப திரும்ப எனது மனைவி நினைவாகவே இருந்தது.

எனவே அங்கிருந்து மனம்வெறுத்த நான் பல ஊர்களுக்கு சென்றேன். முடிவில் இடைப்பாடி ஈஸ்வரன் கோவிலில் தஞ்சம் அடைந்தேன். இப்பகுதி மக்கள் காட்டும் அன்பும் அரவனைப்பும் எனக்கு பிடித்து போய்விட்டது. அதனால் இங்கேயே பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறேன்.

சமீபத்தில் என்னுடன் சேர்ந்து பிச்சை எடுக்கும் ஒருவருக்கு கால் உடைந்துவிட்டது. நான் எனது சேமிப்பிலிருந்து 3 ஆயிரம் ரூபாய் செலவு செய்து அவரை கோபி செட்டிபாளையம் அழைத்து சென்று வைத்தியம் பார்த்தேன்.

பிச்சை எடுப்பதை நான் ஒரு போதும் கேவலமாக நினைக்கவில்லை, எனது விவசாய நிலத்தை எனது மகன் பெரியண்ணும் மருமகள் விஜியாவும் பார்த்துக் கொள்கின்றனர். நான் வருடத்தில் ஒருமுறை ஆடி மாதம் மட்டும் சென்று பார்த்துவிட்டு கையில் உள்ள காசை கொடுத்துவருவேன்.

மனைவியை இழந்த துக்கத்தில் பிச்சை எடுத்து வாழும் எனக்கு இப்பகுதியை சேர்ந்த பலர் உதவி செய்து வருகின்றனர். குறிப்பாக நான் இரவில் தங்க தனது கடையின் முன்பகுதியை ஒதுக்கி தந்த ஸ்டுடியோ உரிமையாளரை நான் என்றும் மறக்கமாட்டேன். என் வாழ்நாளின் இறுதி காலத்தை இங்கேயே சந்தோஷமாக கழிக்க விரும்புகிறேன்’’ என்று கூறினார்.
Source: http://www.nakkheeeran.com/

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator