Tuesday, April 24, 2012

தம்புள்ள புனித பூமியில் முஸ்லீம் ஆக்கிரமிப்பு என்கிறார் ஓமல்பே சோபித தேரர்:-


தம்புள்ள புனித பூமியில் முஸ்லீம் ஆக்கிரமிப்பு என்கிறார் ஓமல்பே சோபித தேரர்:-

பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகள் உடனடியாக நிறுத்தம் என்கிறார் பிரதமர்

 
அரசாங்கத்திற்கு எதிராக அரசாங்கத்திற்குள்ளேயே சூழ்ச்சிகள் செயற்படுத்தப்படுவதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். முப்பது வருட போரின் பின்னர் நாட்டிற்கு சுதந்திரம் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதற்காக எந்த பேதமின்றி மகிழ்ச்சியடைந்தாலும் இலங்கையானது சர்வதேசத்தின் சூழ்ச்சிக்குள் சிக்கியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
 
சர்வதேச சக்திகள் இவ்வாறு விதத்தில், நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வரும் சந்தர்ப்பத்தில், அவ்வாறான செயற்பாடுகளுக்கு மேலும் வழி வகுக்கும் வகையிலான சூழ்ச்சிகள் அரசாங்கத்திற்குள்ளும் மேற்கொள்ளப்படுவதாகவும் இது குறித்து ஜனாதிபதி ஆவதானமாக இருக்க வேண்டும் எனவும் சோபித தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
தம்புள்ள புனித பூமியில் முஸ்லீம் வழிப்பாட்டு தளம் ஒன்றை நிர்மாணித்துள்ளமை மற்றும் அதன் மூலம் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் இடையிலான உறவுகளை சீர்குலைக்கும் முயற்சியானது இந்த சூழ்ச்சியின் புதிய வடிவம் எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.
 
தம்புள்ள புனித பூமியில் ஏற்பட்ட இந்த சம்பவத்தின் மூலம் முஸ்லீம் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. இதற்கு அரசாங்கத்தில் உள்ள சிலர் உதவி உள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக தகுதி தராதரம் பாராது தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.
 
தம்புள்ளை புனித பூமியின் அபிவிருத்தி பணிகள் கடந்த 30 வருடங்களாக மேற்கொள்ளப்படாமை மற்றும் அங்கு சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முஸ்லீம் மற்றும் இந்து ஆலயங்களை அகற்றுமாறு கோரி கடந்த 20 ஆம் திகதி தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
பிக்குமார் உட்பட பௌத்த அமைப்புகள் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பிரதேசத்தில் பதட்டம் நிலவியது. எவ்வாறாயினும் தம்புள்ள புனித பூமி பிரதேசத்தில் எவ்விதமான சட்டவிரோத நிர்மாணப்பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என புத்தசாசன அமைச்சரும், பிரதமருமான டி.எம்.ஜயரத்னவின் அலுவலகம் விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
பல ஆயிரம் வருட பௌத்த வரலாற்றை கொண்டு தம்புள்ள புனித பூமி உள்ளிட்ட எந்த புனித பூமி பிரதேசத்திலும் எவ்வித நிர்மாணப் பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் தம்புள்ளையில் நிர்மாணிக்கப்பட்டு வந்த முஸ்லீம் பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது எனவும் பிரதமர் கூறியிருந்தார். இதற்கு மாற்றீடாக வேறு ஒரு இடத்தில் முஸ்லீம் பள்ளிவாசலை நிர்மாணிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
Source: http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/76562/language/ta-IN/article.aspx

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator