ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு
செய்வதற்காக இந்திய எம்.பி.க்களின் குழு வரும் ஏப்ரல் 16 -அன்று இலங்கைக்கு
செல்ல இருக்கிறது. இப்பயணத்துக்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை மற்றும்
நாடாளுமன்ற அமைச்சகம் இணைந்து செய்து வருகிறது.
இலங்கை செல்லும் 14 எம்.பி.க்களில் 7 பேர் தமிழ்நாட்டை
சேர்ந்தவர்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக எம்.பி.க்கள்
என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கிருஷ்ணசாமி, மாணிக்தாகூர்
ஆகிய 4 பேர் இடம் பெற்றுள்ளனர். தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன்
இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் தமிழக
எம்.பி. ரங்கராஜன் இலங்கை செல்கிறார்.இதையடுத்து டெல்லி மேல்-சபை அ.தி.மு.க. எம்.பி. ரபிபெர்னார்ட் இலங்கை செல்லும் குழுவில் இடம் பெறுவார் என்று டெல்லிக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்திய எம்.பி.க்கள் குழுவில் ரபிபெர்னார்ட் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்த குழுவில் இருந்து அதிமுக எம்.பி. செல்லமாட்டார் என ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும், ‘’இந்த சந்திப்பு வெறும் கண் துடைப்பாகத்தான் அமையும். ஈழத்தமிழ் மக்களிடம் பேசுவதற்கு போதுமான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு.
இப்பயணத்தின் நிகழ்ச்சி நிரலில் விருந்துகளும், அரசின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுமே அதிகம் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்த பயணம் ஏதோ ஒரு சுற்றுலா பயணமாகவே அமையும். எனவே இப்பயணத்தில் அதிமுக இடம்பெறாது’’ என்று கூறப்பட்டுள்ளது. Source: http://www.nakkheeeran.com/