
இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதுதொடர்பாக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என்றும் இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை நேற்று செவ்வாய் கிழமையன்று ரணில் விக்ரமசிங்க சந்தித்து இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த பிறகு, இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது.
அந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரணில் விக்ரமசிங்க, தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுவாழ்வுப் பணிகள் உள்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக எஸ்.எம். கிருஷ்ணாவுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார்.
"அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம். ஐக்கிய தேசியக் கட்சியைப் பொருத்தவரை, எல்எல்ஆர்சி அறிக்கையின் அடிப்படையில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே நிலைப்பாடு. அதுதொடர்பாக, அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே இணக்கப்பாடு ஏற்பட வேண்டும்", என்றார் ரணில் விக்ரமசிங்க.
தாமதம்
இலங்கையின் வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமாகி வருவதாகவும், அது விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் ரணில் தெரிவித்தார்.
"மீள்குடியேற்றப் பணிகள் நடந்து வருகின்றன. இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அதில் பல பிரச்சினைகள் உள்ளன. அது எதிர்க்கட்சிகளுக்கு கவலையளிக்கிறது. கடந்த மார்ச் மாதம் நான் வட மாகாணத்துக்குச் சென்றிருந்தேன். அதுதொடர்பாக முழு அறிக்கையும் தயாராக உள்ளது. மே மாதம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது அதுபற்றி பிரச்சினை எழுப்புவோம் . வடக்கே, மீள்குடியேற்றப் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்காக அரசுக்கு நாங்கள் அழுத்தம் கொடுப்போம்", என்றார் ரணில் விக்ரமசிங்க.
மேலும், வன்னியில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் இருப்பது குறித்தும் அவர் கவலை வெளியிட்டார்.
"முகாம்களில் பிரச்சினைகள் இருக்கின்றன. பலர் இன்னும் முகாம்களில் இருக்கிறார்கள். சிலர் வெளியில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், வடக்கே வன்னிப் பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளது. அந்தப் பணிகள் குறித்து மறுஆய்வு செய்யப்பட வேண்டும். அதை விரைவுபடுத்த வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். கண்ணிவெடிகள் முழுவதுமாக அகற்றப்படும் வரை, சில பகுதி மக்களை, குறிப்பாக, முல்லைத் தீவு கரையோரப் பகுதி மக்களை மீள்குடியேற்றம் செய்ய முடியாது", என்று தெரிவித்தார் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர்.
இந்தியாவிலிருந்து அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு இலங்கை வருவதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அந்தக் குழுவை தனித்தனியாகச் சந்திக்க இருப்பதாகத் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக இலங்கை கரிசணைகள் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, அதுதொடர்பான செய்திகளைப் பார்த்த்தாகவும், ஆனால், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை என்றும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
http://www.seithy.co...&language=tamil