
நித்தியானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில் 293-வது மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார். பின்னர் இன்று அவர் மதுரையில் பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போதைய ஆதீனமும் நித்தியானந்தாவும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.அப்போது நித்தியானந்தா நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் முயன்றன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
தற்போதைய ஆதீனம் ஏதோ ஒரு பிரச்சனையில் நித்தியானந்தாவிடம் சிக்கியிருப்பதாகவும் அதனாலே 293-வது ஆதீனமாக நித்தியானந்தாவை முடிசூட்டியிருப்பதாகவும் இந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக ஆதீனத்திடம் தனியே பேச வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். மேலும் ஆதீனத்திற்குள் நுழைந்த இந்து மக்கள் கட்சியினர் சிலர் திருஞான சம்பந்தரின் பாடல்களைப் பாடினர். அதற்குப் போட்டியாக நித்தியானந்தாவின் புகழைப் பாடினர் அவரது ஆதரவாளர்கள். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் மூளும் நிலை ஏற்பட்டது.
இருதரப்பும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பியதால் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். பின்னர் இருதரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அமைதி திரும்பியது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ரூ1 கோடி "பாதகாணிக்கை"
முன்னதாக மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
8 ஆண்டுகளாக மதுரை மடத்துக்கு தகுந்த சீடரைத் தேடிவந்தேன். இந்நிலையில்தான் எனது சீடர் நித்தியானந்தாவுக்கு முடிசூட்டினேன். அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அறியாமைதான். அவர் ஒழுக்கமானவர். தவறு ஏதுமே செய்யாதவர். பணம் கொடுத்தெல்லாம் அவர் பதவி பெறவில்லை. ரூ1 கோடியை அவர் பாதகாணிக்கையாகத்தான் கொடுத்தார். அவருக்கு மகுடம் சூட்டப்பட்டதால் மதுரை ஆதீனம் மடத்துக்குத்தான் புண்ணியம் சேர்ந்துள்ளது என்றார்.
நித்தியானந்தா கூறியதாவது:
எனக்குப் பிரச்சனைகள் இருப்பதால் தலைமைப் பொறுப்பை ஏற்க தயங்கினேன். இருப்பினும் குருவின் தைரியமான பேச்சால் நான் தலைமைப் பொறுப்பை ஏற்றேன். பெங்களூர் மடத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்..போகலாம்.. மதுரை மடத்தை நிர்வகிக்க பிடதியிலிருந்து 50 பேரை அனுப்பி வைக்க உள்ளேன். அதேபோல் மதுரையில் 100 கிராமங்கள் பயனடையும் வகையில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளேன் என்றார்.
Source: http://tamil.oneindia.in/news/2012/04/29/tamilnadu-tension-over-the-protest-again-nithyananda-in-madurai-aid0091.html
No comments:
Post a Comment