ஒரு நோயாளியின் நாடித் துடிப்பை பிடித்து அறிவது போல ஒரு பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தினை அறிவதற்கு, அந்த நாட்டில் நிலவும் பொருட்களின் விலை, வட்டி வீதங்கள், பங்குச் சந்தை, வெளி நாட்டு வர்த்தகம், வெளி நாட்டு நாணயம் மற்றும் இதர உள் நாட்டு, வெளி நாட்டு பொருளாதார அரசியல் மாற்றங்கள் போன்றவற்றை தொகுத்து ஆராய வேண்டும்.
அவ்வாறு ஆராயுமிடத்து, இலங்கையின் மேற்குறித்த குறிகாட்டிகள் சென்ற
மார்ச் மாத இறுதியில் மேலும் பாதகமான நிலையினை நோக்கி நகர்ந்து சென்றுள்ளன.
இப்பாங்கினை பின்வருமாறு ஒவ்வொரு குறிகாட்டிகளாக நோக்கி ஆராய்வோம்.
பொருட்களின் விலைகள்
உள்நாட்டு பொருளாதார உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தும் பொருட்கள்
மற்றும் சேவைகளின் விலைகள், கடந்த மார்ச் மாத முடிவில் பல மடங்கினால்
அதிகரித்துள்ளன. இதனை வெளிப்படுத்தும் குறிகாட்டிகளில் ஒன்றான இலங்கையின்
பணவீக்கம் (கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியின் ஆண்டுக்காண்டு மாற்ற விகிதத்தின் அடிப்படையில்), சென்ற மார்ச் மாதத்தில் 5.5 சதவீதம் என அதிகரித்துள்ளதுடன் இதுவே முன்னைய மாதத்தில் 2.7 சதவீதம் எனக் குறைவாகக் காணப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை, மின்சாரம்
மற்றும் பேரூந்து கட்டணங்களால் பெரும்பாலான அத்தியவசிய பொருட்கள்,
சேவைகளின் விலைகள் மற்றும் கட்டணங்கள் ஏற்றம் கண்டுள்ளன. குறிப்பாக,
நாட்டின் பிரதான சந்தையான தம்புள்ளையில் சம்பா (ரூ.65/கி), உருளைக்கிழங்கு
(ரூ.95.5/கி), பெரிய வெங்காயம் (ரூ.80/கி), சின்ன வெங்காயம் (ரூ.75.5/கி),
செத்தல் மிளகாய் (ரூ.212.5/கி), தேங்காய் (ரூ.32) ஆகியவற்றின்
விலைகள் அதிகரித்துள்ளன. எனினும், பெரும்போக அறுவடைகள் சந்தைக்கு தொடர்ந்து
வந்து கொண்டிருந்தமையால் பெரும்பாலான மரக்கறி, பழ வகைகள் மற்றும் சிவப்பு
நாட்டரிசி ஆகியவற்றின் விலைகளில் சிறு இறக்கமும்
அவதானிக்கப்பட்டுள்ளது. தவிரவும், இலங்கையின் தனியார் பேரூந்துக்
கட்டணங்கள் 20 சதவீதத்தினாலும், அரச பேரூந்துக் கட்டணங்கள் ஏறத்தாழ இதை
ஒத்த சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளன.
இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம்
இறக்குமதி செய்த மசகு எண்ணையின் ஒரு பீப்பாய்க்கான உலக சந்தை விலை ($.119.86), முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.25 ஐ.அ.டொலரினாலும், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.68 ஐ.அ.டொலர்
என பெருமளவினால் அதிகரித்துள்ளது. இது உள் நாட்டளவில் பெரும்
தாக்கத்தினை கொண்டு வந்தது. உதாரணமாக சென்ற மாதம், எரிபொருள்
விலையேற்றங்களை எதிர்த்து இடம்பெற்ற மக்கள் போரட்டங்களில் ஒரு குடிமகனின்
உயிரையும் இழக்க நேர்ந்ததுடன் பணவீக்கமும் குறிப்பிடத்தக்க அளவினால் (5.5%)
ஏற்றம் கண்டுள்ளது.
வட்டி வீதங்கள்
உள்நாட்டு பொருளாதார உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தும் மற்றொரு
குறிகாட்டியான வைப்பு மற்றும் கடன்களிற்கான உள்நாட்டு வட்டி வீதங்கள்,
சென்ற மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளன. சென்ற மார்ச் மாதத்தில், சாதாரண
வைப்புக்களிற்கு வணிக வங்கிகள் வழங்குகின்ற சராசரி வட்டி வீதமானது (7.88% - AWDR) முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.33 சதவீதத்தினாலும், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.68 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளது. இதேபோல, நிலையான வைப்புக்களிற்கு வழங்குகின்ற சராசரி வட்டி வீதமானது (9.84% - AWFDR), முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.47 சதவீதத்தினாலும், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.67 சத வீதத்தினாலும் அதிகரித்துள்ளன.
இவற்றுக்கிணங்க, வணிக வங்கிகள் வழங்குகின்ற கடன்களிற்கான சராசரி வட்டி வீதங்களும் சென்ற மார்ச் மாதத்தில் 14
சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, வணிக வங்கிகளின் முதன்மை
கடன்களிற்கான சராசரி வட்டி வீதமானது (12.8% - AWPR) முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.85 சதவீதத்தினாலும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.82 சதவீதத்தினாலும், அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்றன.
நாணய மாற்று வீதங்கள்
வெளிநாட்டு பொருளாதார உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தும்
குறிகாட்டிகளில் ஒன்றான நாணய மாற்று வீதம், சென்ற மார்ச் மாதத்தில் மேலும்
பாதக நிலையினை அடைந்துள்ளது. குறிப்பாக சென்ற மார்ச் மாதத்தில்,
ஐ.அ.டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி (ரூ.127.85), முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 7 சதவீதத்தினாலும், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 16
சதவீதத்தினாலும் தேய்வடைந்துள்ளது. இதற்கு, மத்திய வங்கியின் வெளிநாட்டு
ஒதுக்கில் ஏற்பட்ட குறை நிலையை அடுத்து கைவிடப்பட்ட செலாவணிச் சந்தை
முகாமையினால் ரூபாவின் பெறுமதி தொடர்ந்து தேய்வடைந்து வருவதாக பல
பொருளியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவற்றுக்கினங்க, ஏனைய நாட்டு நாணயங்களிகு எதிரான ரூபாவின் பெறுமதியும் (ஸ்ரேலிங் பவுண் = ரூ.204.33, ஜென் = ரூ.1.56, யூரோ = ரூ.170, இந்திய ரூபாய் = ரூ.2.50) தேய்வடைந்தே வருகின்றது.
வெளிநாட்டு நாணய ஒதுக்கு
வெளிநாட்டு பொருளாதார உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தும் மற்றொரு
குறிகாட்டியான வெளிநாட்டு ஒதுக்கு, சென்ற மார்ச் மாதத்தில் ($.3.59
billion) மேலும் குறைவடைந்துள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின் படி, சென்ற மார்ச் மாத வெளிநாட்டு ஒதுக்கானது முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.19 பில்லியன் ரூபாவினாலும், சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 70.05 பில்லியன் ரூபாவினாலும் குறைவடைந்துள்ளது.
இதற்கு, இறக்குமதி மற்றும் கடன் வட்டிக் கொடுப்பனவுகள் போன்ற
வெளிநாட்டு பணக் கொடுப்பனவுகளில் ஏற்பட்ட சுமாரான ஓர் அதிகரிப்பே காரணம்.
எனினும், விலையேற்றம், இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் சர்வதேச நாணய
நிதியம் போன்ற வெளிநாட்டு மூலங்களில் இருந்து கடன்களைப் பெற்று வெளிநாட்டு
ஒதுக்கு மட்டத்தினை பழைய நிலைக்கு ($.8 billion) கொண்டுவர அரசு முயற்ச்சிக்கின்றது. ஐ.எம்.எப் அளிக்கும் 0.47 பில்லியன்
டெலருடன் இறக்குமதி கட்டுப்பாடுகள் போன்றன, சுமார் 5 - 6 பில்லியன்
ஐ.அ.டொலர் என்ற இடைவெளியினை வெற்றிகரமாக நிரப்பிவிடும் எனக் கூறமுடியாது
என்ற நிலையில், இலங்கையின் வெளிநாட்டு பொருளாதார உறுதிப்பாடு தொடர்ந்தும்
சில மாதங்களிற்கு நிச்சியமற்றதாகவே இருக்கும்.
பங்குச் சந்தை நிலவரம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதார உறுதிப்பாட்டினை தெளிவாக
பிரபலிக்க கூடிய பங்குச் சந்தை நிலவரம் கூட, இலங்கைப் பொருளாதாரம் தொடர்பாக
சாதகமான ஒரு நிலையில் சமிஞ்யை தரவில்லை. சென்ற மார்ச் மாத இறுதியில்,
அனைத்து பங்கு விலைச் சுட்டியானது (ASP=5,412), முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.74 சதவீதத்தினாலும், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 25 சதவீதத்தினாலும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதேபோல, மிலங்கா விலைச் சுட்டியானது (MPI=4,904), முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 4 சதவீதத்தினால் அதிகரித்துள்ள போதும், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 28 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது.
தவிரவும் சென்ற மார்ச் மாதத்தில், பங்குச் சந்தையில்
முதலீட்டாளர்களின் ஈடுபாட்டினைக் காட்டும் நாளாந்த சராசரிப் புரள்வு
(ரூ.868 மில்லியன்), முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 59 சதவீதத்தினாலும், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 66 சதவீதத்தினாலும் வீழ்ச்சி
கண்டுள்ளது. இவை, இலங்கைப் பொருளாதாரம் தொடர்பான வெளிநாட்டு
முதலீட்டாளர்களின் நம்பிக்கையீனத்தினை புலப்படுத்துகின்றன.
தொகுப்பு
இந்த வகையில் சென்ற மார்ச் மாதம் வரையிலான இலங்கைப் பொருளாதாரத்தின்
ஒட்டு மொத்த நிலையினை தொகுத்து நோக்குகின்ற போது, அது ஆராயப்பட்ட எல்லா
அளவீடுகளிலும் ஓர் பாதக நிலையினையே சமிஞ்யை செய்துள்ளன. ஒரு புறம்,
பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு நிலமைகளில் திருப்தியான ஓர்
நிலையினை நோக்கி நகரும் அதேவேளை மறுபுறம், பொருளாதார உறுதி, வருமானப்
பரம்பல் மற்றும் வாழ்க்கைச் செலவீனம் தொடர்பாக பாதக நிலைகளே கடந்த
சில மாதங்களாக அவதானிக்கப்பட்டுள்ளன.
இதற்கு, சர்வதேச வர்த்தக்கத்தில் காணப்படும் தேக்க நிலையே காரணம் என அரசு கூறி வருகின்ற நிலையில் இவை, முன்னர் கூறிய பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பினை பாதிக்க வல்லதாகும். எனினும், அண்மையில் ஐ.எம்.எப் கடன் வழங்க முன் வந்தமை மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் என்பவற்றுடன் உள்நாட்டில் பேணத் தூண்டப்பட்டுள்ள செலவுச் சிக்கன நிலமைகள், எதிர் வரும் மாதங்களில் பாதகம் என்ற நிலையில் இருந்து ஓர் சிறிய முன்னேற்றத்தினை கொண்டு வரும் என எதிர் பார்க்கலாம்.
ஆய்வு,
என்.சிவரூபன்
ஆதாரம்: மத்திய வங்கியின் பல்வேறு வாராந்த புள்ளிவிபர அறிக்கைகள்.
Source:http://184.107.230.170/~onlineut/Business/index.php?view=introduction_news_more&id=26