Wednesday, April 18, 2012

ஜெனீவாவில் இந்தியாவின் நடவடிக்கையும் இலங்கை அரசாங்கத்தின் எதிர் நடவடிக்கையும்

கலாநிதி ஜெகான் பெரேரா
கலாநிதி ஜெகான் பெரேரா
இவ்வருடம் மார்ச் மாத இறுதிப் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் தான் அடைந்த தோல்விகளுக்கு மிக சிறிய இடைவெளியிலான ஆதரவு பற்றாக்குறை மட்டுமே காரணம் என்ற கருத்தை முதன்மைப்படுத்தி எடுத்துக் கூறுவதில் மும்முரமாயிருந்தது. பேரவையின் 47 அங்கத்துவ நாடுகளில் 15 நாடுகள்
இலங்கைக்கு ஆதரவாயிருந்து ஐக்கிய அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தன. இன்னும் 8 நாடுகள் பிரேரணைக்கு வாக்களிப்பதனை தவிர்த்துக் கொண்டிருந்தன.
அதனால் பிரேரணைக்கு 23 நாடுகள் ஆதரவாக வாக்களிக்கவில்லை. இந்த எண்ணிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்ட 24 நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு வாக்கு மட்டுமே வித்தியாசமாக இருந்தது. இதனை இலங்கை அரசாங்கம் உலகின் பெரும் வல்லரசுடனான தனது போட்டியில் வெற்றிக்கு மிக அண்மையில் தான் சென்று விட்டதாக கோருகிறது. வாக்கெடுப்பின் பின்னர் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் அதன் கசப்புணர்வும் வெளிக்காட்டப்பட்டது. இலங்கை அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தினை  கொண்டு வரச் செய்யும் தனது உண்மையான முயற்சிகளையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அங்கீகரிக்கவில்லை என்று குறை கூறியுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொதுக் கூட்டமொன்றில் பேசியபோது இலங்கை ஜெனீவாவில் தோற்கடிக்கப்பட்டமை தமிமீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்குமே மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்றும் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா தீர்மானத்தினை வாக்கெடுப்புக்கு விட்டு அதில் இலங்கை தோற்கடிக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தில் உள்ளவர்கள் தமக்கு நியாயமற்ற வகையில் முடிவு தீர்மானிக்கப்பட்டது என உணர்வு பூர்வமாக சிந்தித்து ஏற்படுத்திக்கொண்ட அனுமானத்தை இலங்கையின் மக்கள் தொகையில் ஒரு பிரிவினரும் கொண்டிருந்தனர். ஜெனீவாவில் வாக்கெடுப்பு நடைபெற்ற தினத்தினை அடுத்தநாள் இலங்கையில் வெளியான   தினசரி செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளில் இலங்கை அரசாங்கத் தலைவர்களது எதிர்மறையான உணர்வுகள் பிரதிபலித்தன. அத்தலைப்புச் செய்திகளில் இலங்கையின் விவகாரங்களில் எவரையும் தலையிட விடமாட்டோம் வெளிநாட்டுச் சக்திகளின் சதித்திட்டங்களுக்கு எதிராக ஐக்கியப்படுவோம் இந்தியாவுக்கு எதுவித பொருளாதார சலுகைகளையும் கொடுக்கக்கூடாது பொதுவரவு அமைச்சர் மேர்வின் பத்திரிகையாளர்களது கால்களை முறிப்போம் எனக் கூறியமை அரசினை ஒழித்துக்கட்டுவதற்கான அரசு சாரா நிறுவனங்களின சதித்திட்டம், ஐக்கிய அமெரிக்காவின் தீர்மானம் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது என்பனவும் உள்ளடங்குவன. இருந்த போதிலும் சில சார்பு நிலையிலான தலைப்புகளும் இடம் பெற்றிருந்தன. அவற்றில் அரசாங்கத்தில் பங்கு கொள்ளாதவர்களது கருத்துகளைக் காணக்கூடியதாயிருந்தது. ஐக்கிய அமெரிக்காவின் தீர்மானம் இலங்கைக்கு தீங்கு  விளைவிப்பதல்ல ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு அடிக்கடி (தொடர்ச்சியாக) அறிக்கை சமர்ப்பிக்கவேண்டிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் நியாயம் பெறவேண்டும், அவர்களும் கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்ள வழிசெய்ய  வேண்டும் என்பன அவ்வாறான எதிர்மறையற்ற தலைப்புச் செய்திகளாகும்.
இலங்கை ஒரு சாதகமான தீர்ப்பினை பெறுவதிலிருந்து ஒதுக்கப்பட்டு விட்டது என்ற பலமான உணர்வு இலங்கையில் காணப்பட்டது. அவ்வாறான கருத்து அரசாங்கத்திற்கு சார்பற்றவர்கள் மத்தியிலும் கூட காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கங்களை ஆதரித்த வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் யுத்தத்திற்கு நிதி வழங்கியவர்களும் ஜெனீவாவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் தீவிரமாகச் செயற்பட்டவர்களுடன் இணைந்து காணப்பட்டமை இவ்வாறான உணர்வுகள் இலங்கையர் மத்தியில் காணப்பட்டமைக்கு காரணமாக இருக்கலாம்.அவர்களில் பலர் உலகத் தலைவர்களுடன் இணைந்து காட்சி தந்தனர்.யுத்தத்தின் இறுதிக் காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் சிறுவர்களை பலவந்தமாக படையில் இணைத்துக் கொண்டனர் என்பதனையோ அல்லது பொதுமக்களை பணயக் கைதிகளாக வைத்துக்கொண்டமையினையோ அவர்கள் ஒத்துக்கொள்ள மறுப்புப் தெரிவித்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரில் ஒரு பகுதியினரும் கூட பொதுமக்களையும் சிறுவர்களையும் யுத்த பகுதிகளிலிருந்து வெளியேற அனுமதிக்குமாறு தமிழீழ விடுதலைப்புலிகளை வற்புறுத்தத் தவறியிருந்தனர். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்ஆகியோர் அங்கே செயல்பட்ட  பிரசித்தமான சர்வதேச மனித உரிமைகள் குழுவினருடன் இணைந்து ஒரே மேடையில் இருந்து செயற்பட்டனர்.
எதிர்மறையான எதிர்நடவடிக்கைகள்
கடந்த காலத்தை நோக்கி பின்நோக்கி சென்று பார்ப்போமேயானால் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் பேரவையின் தீர்மானத்தின்  ஆரம்ப உரையாக கூறப்பட்ட சில கருத்துகளை உதாரணமாக தமிழீழ விடுதலைப்புலிகளதும் அவர்களது ஆதரவாளர்கள் எவ்வாறு யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் மனித உரிமைகளை மீறுவதான செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என்பதனையும் எடுத்துக் கூறியிருந்தால் இலங்கை பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட பொதுசன அபிப்பிராயம் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளக்கூடியதாகக்கூட இருந்திருக்கும். எதிர்வரும் காலங்களில் ஐ.நா. சபை மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மனிதஉரிமை மற்றும் நல்லிணக்கம் என்பன தொடர்பாக மதிப்பிடும் போது இப்பிரச்சினையை கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம் நீதிக்கோயிலில் நுழைந்து நியாயம் வழங்கப்போகிறவர்களின் கை சுத்தமானதாக இருக்கும் போதுதான் நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை காணப்படும்.
இலங்கை மீது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கும் நாடுகளும் குழுக்களும் கூட மனித உரிமை மீறல்களை செய்துள்ளனர் என்ற மனக்குறை  இலங்கை அரசாங்கத்திற்கும் நாட்டின் பெரும்பாலான  மக்களுக்கும் உண்டு. எனவே இலங்கை மக்களது மனதில் மாற்றத்தினைக் கொண்டு வரவேண்டுமானால் இந்தக் கருத்தினைப் பொறுத்து பொருத்தமான மாற்றங்கள் வரவேண்டும்.
இவை மாத்திரமன்றி ஐ.நா. மனிதஉரிமை பேரவையின் தீர்மானத்தில் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான ஒரு ஆபத்தான சரத்தும் உள்ளடக்கப்பட்டிருப்பது அரசாங்கத்தின் எதிர்மறை நிலைப்பாட்டிற்கான காரணம் எனப்படுகிறது. ஐ.நா.சபை மனித உரிமை பேரவை தீர்மானத்தின் மையக் கருத்தாக கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் (க.பா.ந.ஆ.) அறிக்கையும் சிபாரிசுகளும் வெளித்தோற்றத்தில் காணப்பட்டாலும் அதன் வளமான சொற்பிரயோகங்களின் காரணமாக அத்தீர்மானம் அதற்கு அப்பாலும் செல்ல முடியும் என்ற அச்சுறுத்தலும் உண்டு. தீர்மானம் ஒரு நிலையில் க.பா.ஆ. அறிக்கை தொடர்பாக விமர்சனப் பார்வையும் கொண்டுள்ளது. அக்கறையுடன் க.பா.ந.ஆ. அறிக்கையை பார்க்கும்போது அதில் சர்வதேச சட்டங்கள் கடுமையான முறையில் மீறப்பட்டமையினை பற்றி போதிய கவனம் செலுத்தாத குறைபாடுண்டு. எனக் கூறப்பட்டமை கவனிக்கத்தக்க விமர்சனமாகும். க.பா.ந.ஆ. தனது அறிக்கையில் பொறுப்புக் கூறவேண்டியமை தொடர்பான பிரசிச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தியிருந்த போதிலும் அது முழுமையான  முறையில் கவனிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு காரணம் அவ்வாணைக் குழுவினை நியமித்த ஜனாதிபதி அவை பற்றி கருத்து கூறும்படி கூறியிருக்கவில்லை  என்பதாகும். எனவே ஆணைக்குழுவின் அறிக்கையில்  பொறுப்புகளை கூறவேண்டியமை தொடர்பாக மிகவும் வரையறைகளுக்குட்பட்டவரையிலேயே தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அவ்வாணைக்குழு சில நிகழ்ச்சிகள் தொடர்பாக சுதந்திரமான புலனாய்வுகள் செய்யப்படவேண்டியுள்ளதாகவும் குறிப்பாக  முரண்பாடான பிரித்தானியாவை அலைவரிசை 4 வீடியோ படம் கூறுவன பற்றி புலனாய்வு செய்யவேண்டும் என்றும் சிபாரிசு செய்துள்ளது.
ஐ.நா.சபை மனிதஉரிமை பேரவையில் பிரேரணையைக் கொண்டுவந்த தரப்பினர்  தீர்மானம் பற்றி விபரிக்கும் போது அது நடுநிலையானது என்றும் ஆபத்தானது என்றும் கூறுவதுடன் அது இலங்கை அரசாங்கமே நியமித்த க.பா.ந.ஆ. அறிக்கையால் கூறப்பட்டுள்ள சிபாரிசுகளையே நடைமுறைப்படுத்தக் கோருவதாகவும் கூறி வருகின்றனர்.
இந்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த மூன்று தசாப்த காலத்தில் படிப்படியாக சிதைவுற அரசியல் நிறுவனங்களை மீளக்கட்டியெழுப்புவதனை க.பா.ந.ஆ. அறிக்கை  பெரிதும் சிபாரிசு செய்துள்ளது. இலங்கையின் இன்றைய அரசாங்கம் பொது நிறுவனங்களது சுதந்திரத்தினை சிதைவடையச் செய்துள்ளமை தொடர்பாகவும் பொது சேவையினை அரசியல் செய்துள்ளமை தொடர்பாகவும் பொதுசேவையினை அரசியல் மயப்படுத்தியுள்ளதாகவும்  பரந்தளவில் விமர்சனங்கள் நாட்டினுள் நிலவுகின்றன.க.பா.ந.ஆ. நியமிக்கப்பட்டமை அதற்கு வழங்கப்பட்ட கட்டளை உரிமைகள் என்பன தொடர்பாக காணப்பட்ட பல குறைபாடுகள் நிலவிய நிலையிலும் பொதுவான அரசியல் சூழலில் தேசியத்துவ சிந்தனைகளின் செல்வாக்கினால் ஏற்பட்ட இடையூறுகள் நிலவிய  நிலையிலும் அவ்வாணைக்குழு கவனமான நிலைவரங்களைப் பரிசீலனை செய்து இப்போது வெளியிட்டுள்ள அறிக்கை அளவுக்கு சென்றுள்ளமையே மிகவும் ஒரு ஆச்சரியத்திற்குரிய விளைவு என்றுதான் கூறவேண்டும்.
மனித உரிமைப்பேரவை செய்த தீர்மானத்தில் இந்தியா ஏற்படுத்திய திருத்தம்
க.பா.ந.ஆ. அறிக்கையில் நல்லாட்சிக்கு வழங்கப்பட்டுள்ள கூடிய முக்கியத்துவமும் ஐ.நா.சபை மனித உரிமை பேரவை தீர்மானத்தில் க.பா.ந.ஆ. அறிக்கையின் சிபாரிசுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமையும் இலங்கை அரசாங்கத்திற்கு அதன்மீது கூடிய அக்கறை காட்டவேண்டியமைக்கு காரணங்களாகின. ஐ.நா.சபை மனிதஉரிமை பேரவையின் தீர்மானம் முதலில் தயாரிக்கப்பட்டபோது அதில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூற வேண்டிய கடமைகளுக்காக சர்வதேசத்தின் வருகையை ஊக்குவிக்கும் நோக்குடன் திறந்து விடப்பட்டது. அத்தீர்மான வரைவில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டியவை தொடர்பில் நடைமுறைப்படுத்தவேண்டியவற்றுக்காக ஆவன செய்வதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்காக ஐ.நா. சபை மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகருடைய அலுவலகமும் அதனை ஒத்த ஏனைய அலுவலகங்களும் இலங்கையில் செயற்படும் எனவும் அதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகருடன் இலங்கை அரசாங்கம் கறைபடிந்த உறவுகளை ஏற்படுத்தியிருந்ததால் வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய ஒரு பொறிமுறை இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் ஒரு சாபக்கேடாகவே இருந்திருக்கும்.  எவ்வாறாயினும் இராணுவத்தைப் பயன்படுத்தி யுத்தத்தினை செய்துவிட்டு அந்த யுத்தத்தைப் பற்றி வெளியாரை விட்டு மதிப்பீடு செய்வது என்பதனை நினைத்துப்பார்ப்பது  உலகில் எந்த ஒரு அசாங்கத்திற்குமே  மிகவும் கடினமான காரியமாகும். அத்துடன், எவ்வாறு பொதுவாக ஏற்றுக்கொள்ளும் வகையில் மனித உரிமைகளை பாதுகாக்கலாம், என்பது தொடர்பாக வெளியாரிடம் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதும் கடினமாகவே இருக்கும்.
இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியா தீர்மானித்தமை பெரும் ஆச்சரியமான திருப்பமாகும். அதேநேரத்தில் இந்தியா ஐ.நா.சபை மனித உரிமைப் பேரவை செய்துள்ள தீர்மானத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீது கடும் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு சரத்தினை நீக்கிவிட பெரும் பங்காற்றியுள்ளமையும் வியப்புக்குரியதாகும். தீர்மானத்தில் உள்ள வெளிநாட்டு (வெளி
வாரி) தொழில்நுட்ப உதவிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் கலந்தாலோசித்தும் அதன் (இலங்கையின்) இணைவுடனுமே அது இடம் பெறவேண்டும். என்ற சரத்தினை இணைப்பதில் இந்தியா மும்முரமாக செயற்பட்டு அதனை இணைக்கவும் செய்துள்ளது. ஆரம்பத்தில் எழுதப்பட்ட மூலத்தீர்மான வரைவில் ஐ.நா.சபை உயர் ஸ்தானிகரது தொழில்நுட்ப உதவிகளையும் ஆலோசனைகளையும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமான நிபந்தனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் இப்போது இறுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் சர்வதேச தலையீட்டை இலங்கை ஏற்க விருப்பாத பட்சத்தில் அவ்வாறான தலையீட்டை குறைந்தபட்சமாக்குவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.சபை மனித உரிமை பேரவையில் வாக்கெடுப்பு நடந்த பின்னர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் இந்திய தூதுக்குழு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தீர்மானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிப்பயன்பாட்டில் ஒரு சமநிலை அம்சத்தினை அறிமுகம் செய்வதில் வெற்றி கண்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
ஐ.நா.சபை மனித உரிமைப் பேரவையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் இலங்கை காட்டிக் கொடுக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கத் தலைவர்கள் எண்ணும் அதேநேரத்தில் இலங்கை சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கம் என்பதனையோ இலங்கையின் முன்னாள் அரசாங்கங்கள் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட கொள்கைகளுக்கு ஏற்ப அனுசரித்து செயற்பட வேண்டும் என்பதனையோ உணர்ந்து செயற்பட தவறக்கூடாது.இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் போரிட்டபோது ஐ.நா. மனித உரிமை பேரவையில் இப்போது  தீர்மானத்தை கொண்டு வந்த ஐக்கிய அமெரிக்கா அதனை ஆதரித்து வாக்களித்த இந்தியா உட்பட அநேகமாக முழு சர்வதேச  சமூகமும் இலங்கைக்கு அரசியல் மற்றும் இராணுவ உதவிகளை வழங்கியமையினை மறக்கமுடியாது.இவ்வாறு   அரசியல் மற்றும் இராணுவ உதவிகளை வழங்கிய சர்வதேச சமூகம் இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையில் நிலவும்  முரண்பாட்டிற்கான அரசியல் ரீதியிலான அடிப்படைப் பிரச்சினைகளைகளையும் வகையில் அரசியல் அமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களை இலங்கை அரசாங்கம் கொண்டு வரும் என்ற நம்பிக்கையையும் கொண்டதாகவே இருந்தமையும் மறக்கமுடியாததாகும்.
இந்திய பிரதம மந்திரி தனது கடிதத்தில் இவற்றினை மீள்நினைவுபடுத்தும் வகையில் கூறிய வாசகங்கள் கவனத்திற்கொள்ளப்படுதல் வேண்டும். இலங்கையின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அர்த்தமுள்ள  வகையில் விருத்தி செய்து இலங்கையின் அனைத்து மக்களுக்கும் இனவேறுபாடற்ற முறையில் நீதி, கண்ணியம், சமத்துவம், சுயமரியாதை என்பன நிரந்தரமாக கிடைக்கக்கூடிய வகையில் அரசியல் தீர்வு ஒன்றினை கொண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையுண்டு என கூறியுள்ளமை இந்திய பிரதமரது எண்ணங்களை பிரதிபலிப்பதாக உள்ளது. க.பா.ந.ஆ. அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிபாரிசுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் அதிகார பரவலாக்கம் தொடர்பில் கணிசமான தீர்வுகள் ஏற்படலாம். அவ்வாறு அரசியல் சீர்திருத்தம் சரியான முறையில் ஏற்படும் பட்சத்தில் இப்போது இலங்கையைப் பற்றி விமர்சித்து வரும் நாடுகள் எதிர்வரும் காலங்களில் இலங்கையை ஆதரிக்க முன்வரும் என நம்பலாம்.
Source: http://www.thinakkural.com/articles/13071-2012-04-18-18-58-09.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator