Tuesday, April 24, 2012

தண்ணீருக்காக மணிக் கணக்கில் காத்திருந்து தாகத்தால் இறந்த பெண்!

தானே: மகாராஷ்டிரா மாநிலத்தில் தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பழங்குடியினப் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

இது குறித்து வசாய் எம்.எல்.ஏ. விவேக் பண்டிட் கூறுகையில்,

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் மோகதா தாலுகாவில் உள்ள டோலரா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் பார்வதி ராமு ஜாதவ்(37). அப்பகுதியில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. வாரத்தில் 4 நாட்கள் மட்டமே தண்ணீர் லாரி கிராமத்திற்கு வரும். கடந்த சனிக்கிழமை லாரி வந்தபோது மக்கள் நீண்ட வரிசையில் நின்று தண்ணீர் பிடித்தனர்.


அப்போது மணிக்கணக்கில் வரிசையில் தாகத்துடன் கால் கடுக்க காத்திருந்த பார்வதியின் முறை வரும்போது தண்ணீர் தீ்ர்ந்துவிட்டது. இதையடுத்து அவர் காலி குடங்களுடன் வீட்டிற்கு திரும்பினார். திரும்பும் வழியில் அவர் பசியாலும், தாகத்தாலும் மயங்கி விழுந்தார். உடனே அவரை நாசிக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மாவட்ட நிர்வாகம் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அப்பகுதியில் உள்ள ஆறு, குளங்கள் எல்லாம் வற்றிவிட்டதால் மாவட்ட நிர்வாகம் கொடுக்கும் தண்ணீரை தான் மக்கள் நம்பியுள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் போதுமான தண்ணீர் லாரிகளை அனுப்புவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் லாரி வரும்போது தண்ணீர் பிடிக்க மக்கள் காலி குடங்களுடன் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator