Thursday, April 19, 2012

கல்வித்துறைக்காக தமிழக அரசின் புதிய டிவி சேனல்!

சென்னை: கல்வித்துறைக்காக தமிழக அரசு புதிய டிவி சேனலை தொடங்கவுள்ளது.

இத் தகவலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி சட்டமன்றத்தில் தெரிவித்தார். அவர் கூறுகையில்,

பள்ளி நேரம் முடிந்த பின்னரும் பாடங்களை மாணவர்களுக்கு அவர்களது வீட்டுக்கே கொண்டு செல்ல இந்த டிவி சேனல் உதவும். பயிற்சிகள், செமினார்கள், கலந்துரையாடல்கள் உள்பட கல்வித்திறனை அதிகரிக்க உதவும் அனைத்து அம்சங்களையும் இந்த சேனல் வழங்கும் என்றார்.

2 புதிய பொறியியல் கல்லூரிகள்-ஜெ அறிவிப்பு:


இந் நிலையில் இன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், பள்ளி படிப்பிற்குப் பிறகு குறிப்பாக, கிராமப்புற மாணவ, மாணவியர்கள், தங்கள் கல்வியினை நிறுத்திவிடாமல் தொடர்ந்து உயர் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில், எனது அரசு பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்விகளுக்கான கல்லூரிகளை தமிழகத்தின் பல மாவட்டங்களில் துவக்கி வருகிறது.

அந்த வகையில், 2011-12ம் ஆண்டில், 11 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் ஒரு அரசு பொறியியல் கல்லூரி துவங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதே போல இந்த ஆண்டு தஞ்சாவூர் வட்டம் செங்கிப்பட்டியில் ஒரு அரசு பொறியியல் கல்லூரி; மற்றும் தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை ஊராட்சியில் ஒரு அரசு பொறியியல் கல்லூரி என இரண்டு அரசு பொறியியல் கல்லூரிகள் துவக்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை; அரியலூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஆகிய 7 இடங்களில் புதிய அரசு பாலிடெக்னிக்குகள் துவக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்லாமல், சேலம் மாவட்டம் எடப்பாடி; கன்னியாகுமரி; திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்; ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி; மதுரை மாவட்டம் திருமங்கலம்; திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர்; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி; திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர்; விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை; நாகப்பட்டினம் மற்றும் வேலூர் மாவட்டம் அரக்கோணம் ஆகிய 11 இடங்களில் புதிதாக பல்கலைக்கழக உறுப்பு இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்த ஆண்டு துவக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.
source: http://tamil.oneindia.in/news/2012/04/19/tamilnadu-tamil-nadu-introduce-education-channel-aid0090.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator