Thursday, April 12, 2012

இந்திய எம்.பிக்கள் குழுவிலிருந்து அ.தி.மு.க வெளியேற்றம்; பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்திக்காமையால் தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் முடிவு



news
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைநிறைகளை அறிந்து கொள்வதற் கான ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படாமை காரணமாக இலங்கை வரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக தமிழக முதல்வர் ஜெய லலிதா நேற்று அதிரடியாக அறிவித்தார்.

 
அந்தக் குழுவில் இடம்பெற் றுள்ள அ.தி. மு. கவின் நாடாளுமன்ற உறுப்பினரான வில்லியம் ரபி பேர்னாட்டை அதிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக ஜெயலலிதா கூறினார். இந்திய அரசின் இந்தக் கண்துடைப்பு நாடகத்துக்கு அ.தி.மு.க. ஒருபோதும் துணைபோகாது என அவர் குறிப்பிட்டார். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு புதுடில்லி அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இலங்கை அரசின் தமிழர் விரோதப் போக்கு, தமிழக மீனவர் மீதான தாக்குதல், கூடங்குளம் மின் நிலையம் அமைப்பது தொடர்பில் இலங்கை வெளியிட்ட எதிர்ப்பு போன்றவற்றைக் கண்டித்துள்ள முதல்வர் ஜெயலலிதா கடந்த முறை இந்திய மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் இலங்கை வந்த இந்தியக் குழுவினரின் கண்துடைப்புப் பயணம் போன்று இந்தப் பயணமும் இடம்பெறக் கூடாது என்பதாலேயே அந்தக் குழுவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
 
இந்திய வெளிவிவகார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்தித்து உண்மை நிலவரம் பற்றி அறியும் ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக ஜனாதிபதி மஹிந்தவையும் அதிகாரிகளையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பயணத் திட்டம் சம்பிரதாயபூர்வமானதாகவும் இலங்கை அரசுக்கு சார்பானதாகவுமே உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளை அறிவதாக அது இல்லை. இதன் காரணமாகவே இந்தக் குழுவில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவதற்கு முடிவு செய்ததாகத் தமிழக முதல்வர் மேலும் கூறினார்.
 
இந்தக் குழுவில் பத்திரிகையாளர்கள், கண்காணிப்பாளர்கள் போன்றோர் உள்ளடக்கப்படாதமை தான் மேற்குறிப்பிட்ட காரணங்களை நிரூபிப்பதாக உள்ளன என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
 
தமிழக முதல்வரின் இந்த முடிவு புதுடில்லி மத்திய அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த அறிவிப்புக் குறித்து மத்திய அரசு உடனடியாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
source: http://184.107.230.170/~onlineut/News_More.php?id=75832970613177070

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator