Monday, April 9, 2012

மனதிற்கு அமைதி தரும் வண்ண மீன்கள்

வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்ப்பில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளவர்கள் நாய், பூனை, கிளி வளர்ப்பதைப்போன்று பலவிதமான மீன்களை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளனர். மீன்களை பொறுத்தவரையில் கோல்ட் பிஷ் போன்றவை அதிக அளவில் விரும்பி வளர்க்கப்படுகின்றன.

பெரிய பங்களாக்களிலும், நிறுவனங்களின் முகப்பிலும் மிகப்பெரிய மீன்தொட்டிகள் வைத்து விலை உயர்ந்த மீன்கள் வளர்க்கபடுகின்றன. பொதுவாக மீன்கள் அழகுக்காக மட்டுமின்றி அமைதிக்காகவும் மீன்களை வளர்க்கின்றனர். வண்ண மீன் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும் மீன் வளர்ப்பாளர்கள் உங்களுக்காக கூறியுள்ள ஆலோசனைகள் உங்களுக்காக.


கண்ணைக் கவரும் மீன்கள்

முன்பெல்லாம் மீன்காட்சியகங்களில் உணவாக பயன்பட்ட இறால் மீன்கள் மிக அழகாகவும், ஒளி ஓட்டுருவும் தன்மையுள்ளதாகவும், எளிதில் கையாளமுடியும் என்பதால் இவை இன்று மிக அதிகமாக வளர்க்கப்படும் மீனாக உள்ளது.

முன் காலத்தில் தவளை இனமாக (Amphibians) கருதபட்ட லங்பிஷ் இன்று பெரும்பாலான தொட்டிகளில் வளர்க்கப்படுகிறது. இவற்றிற்கு நுரையீரல் உண்டு. எனவே மீன் தொட்டியில் சிறிதளவு காற்று இருந்தாலும் உயிர் வாழும் திறனுடையது.

வசதியானவர்கள் விரும்பும் ஏஞ்சல் மீன்கள், பார்ப்பதற்கு மதிப்புடையதாக இருந்தாலும் விலை அதிகம் இல்லை. இவ்வகை மீன்களை வாங்கி வீடுகளில் வளர்க்கலாம். ரெட் கேப் கோல்டு, ஒரண்டா கோல்டு, சிங்கதலை கோல்டு, பேர்ல் ஸ்கேல் கோல்டு, ரூயிங் கோல்டு போன்ற மீன் வகைகளை பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.

அரவானா மீன்கள்
சீன வாஸ்து மீனான புளோரா, அரவானா மீன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. தென் அமெரிக்க நாட்டை தாயகமாக கொண்ட இந்த அரவானா மீன்கள் சில மரபியல் மாற்றம் காரணமாக வெள்ளை நிறமாக மாறிவிட்டது. இந்த மீன் தான் உலகில் மிக விலை உயர்ந்த மீனினமாகும்.

சிங்கப்பூரில் இந்த வகை மீன்கள் பக்தியுடன் வளர்க்கப்படுகின்றன. அந்நாட்டு மக்கள் "அரவனா' மீன் "லட்சுமி' கடாட்சம் பொருந்தியதாக கருதுகின்றனர். சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்படும் 5 இஞ்ச் அளவுள்ள சில்லி ரெட் அரவானா எனப்படும் வாஸ்து மீன் ஒன்றின் விலைமட்டும் ரூ.25,000!.

ஆஸ்கர்ஸ் மீன்கள்

மிக வேகமாகவும் பெரியதாகவும் வளரும் ஆஸ்கர்ஸ் வகை மீன்கள் மீன் வளர்ப்போர் கைகளில் வந்து உணவினை எடுத்து சாப்பிடும் திறனுடையது. அதை போன்று நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அதுவும் ரியாக்ட் செய்யும்.

ஓட்டும் திறனுடைய வாய் அமைப்பை உடைய பிளிகோ மீன்கள் பாசியை உண்டு வாழ்பவை. எனவே மீன் தொட்டியில் அதிக பாசிகள் வளரவிடாமல் பார்த்துகொள்ளும்.

இந்திய மீன்களான மாலிஸ், கோல்டு பிஷ், ஏஞ்சல், டெட்ராஸ், கப்பீஸ் பார்ஸ், பைட்டர் ஆகிய லோக்கல் கலர் மீன்களும் தொட்டிகளில் வளர்க்க ஏற்றவை. ரான்சூ கோல்டு பிஷ் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படும். இந்த மீன்கள் கோல்ட் பிஷ் வகையை சார்ந்தது. இதன் முக அமைப்புதான் மற்ற மீன்களில் இருந்து வேறுபடுத்தி காட்டும்.

கடல் மீன்கள்

பட்டர்பிளை ஏஞ்சல், புளூரிங் ஏஞ்சல் போன்ற மீன்கள் எல்லாம் கட்டாயமாக கடல் நீரில்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் செயற்கை உப்பு கலந்த நீரில் வளர்க்கலாம். ஆனால் செயற்கை உப்பின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 120. சாதாரணமாக 3 அடி தொட்டிக்கு கடல் மீன்கள் வளர்க்க ரூ. 10,000 வரை செலவாகும்.

மீன் பராமரிப்பு
கலர் மீன்களின் ஆயுட்காலம் நான்கு ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுவரைதான். மீன்கள் வளர்க்க சரியான தட்ப வெப்ப நிலை உணவு, ஆக்ஸிஜன்தான் முக்கியம். மீன்கள் வளர்ப்பதற்கு மாதம் 100 ரூபாய் மட்டுமே செலவாகும்.

மீன்கள் வசிப்பதற்கு நல்ல தண்ணீர் அவசியம். அதிக குளோரின் கலந்திருந்தால் அவை சுவாசிக்க சிரமப்படும். எனவே தண்ணீரை கையில் எடுத்து அதன் தன்மையை உணர்ந்து தொட்டிகளில் மாற்றவேண்டும்.

மீன் தொட்டிகளில் சரியான தட்ப வெப்ப நிலை நிலவவேண்டும். 74 பாரன்ஹீட் முதல் 78 பாரன்ஹீட் வரை வெப்ப நிலை இருக்கவேண்டும், அப்பொழுதுதான் மீன்கள் வசிக்கமுடியும். அதேபோல் தினசரி 12 மணிநேரம் வெளிச்சத்தில் இருப்பதும் அவசியம். வெளிச்சம் கிடைக்காத பட்சத்தில் செயற்கையான வெளிச்சமாவது ஏற்படுத்த வேண்டும்.

புரதச் சத்து உணவுகள்

மீன்களுக்கு புரதச் சத்துள்ள உணவுகளை அளிப்பது அவசியம். சில வகை பெரியவகை மீன்கள் சைவ வகையைச் சார்ந்திருக்கும். அவற்றிர்க்கு ஏற்ற உணவுகளை தொட்டிகளில் இடவேண்டும் என்கின்றனர் மீன் வளர்ப்பாளர்கள்.

சுத்தமான மீன் தொட்டி

மீன் தொட்டியில் அடிக்கடி தண்ணீர் மாற்றக்கூடாது. அப்படி தண்ணீர் மாற்றினால் வெப்ப நிலை மாறி மீன்கள் இறக்க நேரிடும். மீன்களுக்கு உணவும் அளவிற்கு அதிகமாக கொடுக்க கூடாது. மீன் தொட்டிகளை தூய்மையாக வைத்திருக்க "சக்கர் மவுத்' எனப்படும் மீனை தொட்டியில் வளர்க்கலாம். இதற்கு "டேங்க் கிளீனர்' என்ற பெயரும் உண்டு. அது தண்ணீரில் ஏற்படும் அழுக்குகளை உறிஞ்சி விடுகிறது.

மீன்களும் அவ்வப்போது நோய் வாய்ப்படும். தண்ணீர் குளிர்ந்து உறைந்து போவதால்தான் மீன்களுக்கு நோய்கள் ஏற்படுகின்றன. அப்படி நோய்வாய்ப்பட்ட மீன்கள் மீது காற்று முட்டை ஒட்டிக் கொண்டும், செதில்கள் சிதைத்தும் காணப்படும். இதற்கு தண்ணீர் வெப்ப நிலை மாறாமல் இருக்க "ஆட்டோமேட்டிக் வாட்டர் டெம்பரேச்சர்' பயன்படுத்தலாம்.
வெளியூர் செல்லும் கால கட்டங்களில் மீன்களும் சரியான நேரத்திற்கு உணவு கொடுப்பதற்கான "ஆட்டோமேட்டிக் பீடர்' என்ற சாதனங்களும் தற்போது வந்து விட்டன. அதில் உள்ள டைமரில் செட் செய்தால் தேவையான உணவை குறித்த நேரத்தில் மீன் தொட்டியில் போட்டுவிடும். பொழுதுபோக்கிற்கு மீன்கள் வளர்ப்பதால் உடலும், உள்ளமும் நிம்மதி பெறும் உயர் ரத்த அழுத்தம் குறையும் என்கின்றன ஆய்வு முடிவுகள். நீங்களும் மீன் வளர்த்துப் பாருங்களேன்
Source: http://tamil.boldsky.com/

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator