Friday, April 20, 2012

சென்னையை கலக்கிய கொள்ளைக்காரி

சென்னையில் திறந்திருக்கும் வீடுகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. இளம்பெண் ஒருவர் இத்துணிகர செயலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து அப்பெண்ணை பிடிக்க போலீசார் வலை விரித்தனர். அப்பெண் அணிந்து வரும் உடையின் தோற்றத்தை வைத்து அவரை பொறி வைத்து பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.
போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கர் ஆகியோரது மேற்பார்வையில் அப்பெண்ணை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் செந்தில்குமரன், இன்ஸ்பெக்டர் சிவராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் திருவல்லிக்கேணி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மாநில கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே, சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த 30 வயது பெண்ணை பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் சகினா (28). வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பங்களாமேட்டை சேர்ந்தவர். இவர்தான் வீடு புகுந்து திருடி வந்த பெண் என்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து சகினா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பஸ்களில் காலையில் ஏறி மாலை வரை பிக்பாக்கெட் அடித்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
ஜாம்பஜார், திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ், சேத்துப்பட்டு, வடபழனி, கீழ்ப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சகினா கைவரிசை காட்டியுள்ளார்.
இவரிடமிருந்து 25 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் திருடி உள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கொள்ளைக்காரி சகினா பற்றி பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.
வாக்குமூலத்தின் விபரம் :
சகினாவின் முதல் கணவர் ஜாபர். இவர் தற்போது சகினாவை விட்டு பிரிந்து வாழ்கிறார். இதையடுத்து பெரம்பூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரை சகினா காதலித்தார். இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தியுள்ளனர். தற்போது அவர் கொல்கத்தாவில் இருப்பதாக சகினா கூறியுள்ளார்.
இதன் பிறகு குமார் என்ற கார் டிரைவருடன் சகினாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. குமாரின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார் குறிச்சி ஆகும். சென்னையில் கொள்ளை அடிக்கும் பணத்துடன் பலமுறை சகினா ஆழ்வார்குறிச்சிக்கு சென்று வந்துள்ளார்.
மேலும் சென்னையில் இருந்தபடியே குமார் சொல்லும் வங்கி கணக்கில் பணத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையே இன்னொரு காதலனான அப்துல் ரகுமான், திரைமறைவில் இருந்து கொண்டே கொள்ளையடிக்கச் சொல்லி சகினாவுக்கு கட்டளையிட்டுள்ளார்.
சகினாவுக்கு 10 வயதில் மகள் இருக்கிறாள். அவளை கடத்தி விடுவேன் அல்லது உன்னை போலீசில் மாட்டிவிடுவேன். எனவே ஒழுங்காக திருடிய பணத்தை அனுப்பி வை என கூறியே அப்துல் ரகுமான் பலமுறை சகினாவை மிரட்டியுள்ளார்.
திருட்டு தொழிலை கைவிடக்கூடாது என்றும் அவர் கூறி உள்ளார். இவை அனைத்தையும் சகினா போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார். 2 காதலர்களுக்கும் இதுவரை ரூ.1 1/2 லட்சம் அளவுக்கு பணம் அனுப்பி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சகினா சிறையில் அடைக்கப்படுகிறார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், அப்துல்ரகுமானும், குமாரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

http://thaaitamil.com/

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator