Monday, May 14, 2012

வன்னியில் பல்கலைக் கழக பீடங்கள் - யாழ்ப்பாணச் சமூகம் அனுமதிக்குமா?

a_kilinochchi_uniஇனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு எவ்வாறு சிங்கள மேலாதிக்க வர்க்கம் எதிராகச் செயற்படுகிறதோ அவ்வாறே வன்னிப் பகுதியின் மேம்பாட்டுக்கு ஒத்துழைக்காமல், அதற்கு எதிராக யாழ்ப்பாணச் சமூகம் செயற்படுகிறது. கிளிநொச்சி தனி மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, இயங்குகின்ற போதும் இன்னும் அது யாழ்ப்பாணத்தின் தொங்குதசையாக - யாழ்ப்பாணத்தை நம்பியே தங்கவைக்கப்பட்டுள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்துக்கு, மண், நெல், எரு, கால்நடைகள், விறகு, மரம், மரப்பொருட்கள் எனப் பலவும் வன்னியிலிருந்தே எடுக்கப்படுகின்றன. போதாக்குறைக்கு, அடுத்த ஆண்டுகளில், கிளிநொச்சி - இரணமடுக் குளத்திலிருந்தே குடிநீரும் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்து சேவையாற்றுவதற்கு பிரதேச மனநிலை இடமளிக்கத் தயங்குகிறது. தேசியப் பற்றோ இந்த இடத்தில் கள்ளத்தனமாக மயங்குகிறது.

 

வன்னிப் பிராந்தியத்தின் பாடசாலைக் கல்விப் பிரச்சினைகள் ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கத்தில் அங்கே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடம், விவசாய பீடம் ஆகியவற்றை ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன.

இதற்காக கடந்த வாரம் கிளிநொச்சிக்கு உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கா தலைமையிலான அணியினர் கிளிநொச்சியில் குறிப்பிட்ட பீடங்கள் அமையவுள்ள பகுதிகளைப் பார்வையிட்டபின்னர், சம்மந்தப்பட்ட தரப்பினர்களுடன் ஒரு உயர்மட்டக் கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார்.

இதில் ஏற்கனவே கிளிநொச்சியில் இயங்கிய விவசாய பீடத்தை மீண்டும் கிளிநொச்சியில் இயங்க வைப்பதற்கான முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இநதத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் நடைமுறையில் உள்ள பிரச்சினைகளைக் குறித்தே இந்தப் பத்தி சிந்திக்கிறது.

ஏற்கனவே கிளிநொச்சியில் இயங்கிய விவசாய பீடம் யுத்தத்தின் காரணமாகவே யாழ்ப்பாணத்துக்குச் சென்றது. யுத்தம் முடிந்து, மீள் குடியேற்றம் நடைபெற்று, மக்கள் தங்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்பி வருகின்றபோதும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் விவசாய பீடத்தை கிளிநொச்சிக்குக் கொண்டு வருவதற்கு இன்னும் பல்கலைக்கழக நிர்வாகம் முழுஅளவில் முயற்சிக்கவில்லை.

இணைப்பு நிலையில் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டிருக்கும் பல்கலைக்கழகத்தை கிளிநொச்சிக்குக் கொண்டு வருவதற்குப் பல பிரச்சினைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதில் ஒன்று பௌதீக வளப்பற்றாக்குறை. இதுவே முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இந்தப் பௌதீக வளப் பற்றாக்குறை என்பது தனியே பல்கலைக்கழத்திற்கு மட்டுமே உரிததான ஒன்றல்ல. வன்னியில் யுத்தத்திற்குப் பின்னர் இயங்கி வரும் அத்தனை அரச நிறுவனங்களும் மக்களும் மக்கள் அமைப்புகளும் பெரும் பற்றாக்குறைகளின் மத்தியிலேயே இயங்கி இன்று நிமிர்ந்திருக்கின்றன. அல்லது வளர்ந்து வருகின்றன.

இதை மிக அருமையாக இந்த உயர்மட்டக் கலந்துரையாடலின்போது தெரிவித்திருந்தார் கிளிநொச்சி மாவட்டக் கல்வி அபிவிருத்திப் பேரவையின் முக்கியஸ்தரும் வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் அத்தியட்சகருமான மருத்துவக் கலாநிதி எஸ். சத்தியமூர்த்தி. அவர் கூறும்போது, “எல்லா வளங்களையும் உருவாக்கி விட்டுத்தான் பல்கலைக்கழகத்தை இயங்க வைப்பது என்பது மிகக் கடினமான காரியம். அது இப்போதைக்குச் சாத்தியப்படக்கூடிய ஒன்றுமல்ல. பதிலாக அடிப்படை வளங்களை உருவாக்கிக் கொண்டு, அதிலிருந்தே பணிகளை ஆரம்பித்துச் செயற்படும் வேளையில் ஏனைய வளங்களைப் பெற்றுக் கொள்வது சாத்தியமானது. அதுவே பொருத்தமானதும் கால தாமதத்தைக் குறைத்து வெற்றியைத் தரக்கூடியது என்று.

இந்தக் கூற்று உண்மையானது. இதுவே பொருத்தமானதும்கூட.

மீள் குடியேற்றம் என்பது பற்றாக்குறைகளின் மத்தியிலேயே நடைபெற்றது. மீள் குடியேற்றப்பகுதிகளில் இயங்கிய மருத்துவமனைகள் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையிலேயே செயற்பட்டன. ஆனால், இப்பொழுது அவை எவ்வளவோ தூரம் மேம்பாடடைந்துள்ளன.

செயற்படத் தொடங்கும்போது தேவைகளை நிறைவேற்றும் வேகமும் அதிகரிக்கிறது என்பது பொதுவிதி. அந்த விதிக்கேற்ப இந்த மாற்றம் ஏற்பட்டது. இப்படித்தான் வன்னிப் பிராந்தியப் பாடசாலைகளில் ஏற்பட்ட வளர்ச்சியும் பிற அரச திணைக்களங்களின் செயற்படு முறையும் அமைந்திருந்தன.

ஆனால், இங்கே பிரச்சினை வேறு கோணத்திலேயே காணப்படுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் இந்தப் பீடங்களை அமைப்பதற்கான பௌதீக வளப் பிரச்சினையையும் விட, மன நிலையிலுள்ள பிரச்சினைகளே இங்கே பாதகமாக உள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து விவசாய பீடத்தை மீண்டும் வன்னிக்குக் கொண்டு செல்வதற்கு அரசியல் மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதனுடன் சம்மந்தப்பட்ட நிர்வாகிகள், ஊழியர்கள் மட்டத்தில் ஏராளம் தயக்கங்கள் உள்ளன.

தங்குமிட வசதி, போக்குவரத்து வசதி, மின்சாரம், குடிநீர் போன்றவற்றின் வசதி எனப் பலவற்றை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் இப்பொழுதிருப்பதையும் விட மிக நெருக்கடியான சூழலில் 1990 களில் கிளிநொச்சியில் விவசாய பீடம் இயங்கியது என்பது நினைவு கொள்ளத் தக்கது.

ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு வருவதற்கான எல்லாப்பாதைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் கிளாலி மூலமாக கடல்வழியே படகிற் பயணித்தே மாணவர்களும் கிளிநொச்சிக்குச் சென்றனர். அவ்வாறே விரிவுரையாளர்களும் கிளிநொச்சிக்குப் போயினர்.

இன்று நிலைமை அத்தனை இறுக்கமானதல்ல. வளங்களின் பற்றாக்குறை பெரிதாக இருந்தாலும் ஏனைய விடயங்களில் முன்னேற்றமுண்டு. போக்குவரத்து, மின்சாரம் போன்றவற்றிற் பிரச்சினையே இல்லை. ஆகப் பிரச்சினையாக இருப்பது தங்குமிடம் மட்டுமே.

பீடங்களுக்கான கட்டிட வசதிகள் கூடப் பெருமளவுக்கும் உள்ளன என்றே சொல்ல வேண்டும். யுத்தத்திற்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் சிறு சேதங்களுக்குள்ளாகிய நிலையில் இருக்கின்றன. அவற்றைத் திருத்தம் செய்து, புதிதாக வேணடிய தொகுதிக் கட்டிடங்களை நிர்மாணித்தால் இந்தத் தேவை பூர்த்தியாகி விடும்.

இவற்றைத் திருத்தம் செய்வதற்கு முதற்கட்டமாக 900 மில்லியன் ரூபாய் நிதியை இலங்கை அரசும் இந்திய அரசும் ஒதுக்கியுள்ளன. முக்கியமாக இந்தப் பீடங்களை அமைப்பதற்கான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.

ஆகவே, இப்போதுள்ள பிரச்சினை, யாழ்ப்பாணத்திலிருந்து வரவேண்டிய விரிவுரையாளர்கள், ஊழியர்கள் போன்றோர் தொடர்பானதே. எனவேதான் சொல்கிறோம், இது பௌதீக வளப் பற்றாக்குறைப் பிரச்சினையையும் விட பிரதேச அமைவிடம் தொடர்பான மனநிலைப் பிரச்சினை என்று.

அதாவது, இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு எவ்வாறு சிங்கள மேலாதிக்க வர்க்கம் எதிராகச் செயற்படுகிறதோ அவ்வாறே வன்னிப் பகுதியின் மேம்பாட்டுக்கு ஒத்துழைக்காமல், அதற்கு எதிராக யாழ்ப்பாணச் சமூகம் செயற்படுகிறது. கிளிநொச்சி தனி மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, இயங்குகின்ற போதும் இன்னும் அது யாழ்ப்பாணத்தின் தொங்குதசையாக - யாழ்ப்பாணத்தை நம்பியே தங்கவைக்கப்பட்டுள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்துக்கு, மண், நெல், எரு, கால்நடைகள், விறகு, மரம், மரப்பொருட்கள் எனப் பலவும் வன்னியிலிருந்தே எடுக்கப்படுகின்றன. போதாக்குறைக்கு, அடுத்த ஆண்டுகளில், கிளிநொச்சி - இரணமடுக் குளத்திலிருந்தே குடிநீரும் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. ஆனால், யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்து சேவையாற்றுவதற்கு பிரதேச மனநிலை இடமளிக்கத் தயங்குகிறது. தேசியப் பற்றோ இந்த இடத்தில் கள்ளத்தனமாக மயங்குகிறது.

இங்கே இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இன்னொரு விடயத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

வடமாகாண சபையின் நிர்வாக அமைப்பைத் திருகோணமலையில் இருந்து வடக்கே கொண்டு செல்வதற்குத் தீர்மானித்தபோது அந்த நிர்வாக அமைவிடத்தை வன்னியில் அமைக்கலாம் என அரசாங்கம் தீர்மானித்தது. அதற்கான அறிவிப்பையும் அது விடுத்திருந்தது.

ஆனால், அரசாங்கத்தின் சிந்தனையையே யாழ்ப்பாணத்து அதிகாரிகள் மாற்றிவிட்டனர். இதற்காக அவர்கள் கூறிய காரணங்கள் நகைப்பிற்குரியன. இதற்காக அவர்கள் எழுதிய பெரிடப்பட்ட கடிதங்களிலிருந்து பெயரிடப்படாத கடிதங்கள் வரையில் ஏராளமுண்டு.

எப்படியோ அவர்கள் தங்களுடைய முயற்சியில் வெற்றியடைந்து வடமாகாணசபையைத் தங்களுடைய வீடுகளின் கோடிகளுக்குப் பின்னே கொண்டு சென்று விட்டனர்.

 

இப்பொழுது வடமாகாணசபை யாழ்ப்பாணத்தில் எங்கே இயங்குகிறது என்று யாருக்குத் தெரியும்?

இலங்கையில் உள்ள மாகாணசபை நிர்வாகத்திலேயே மிக மோசமான நிலையில் உதிரிகளாகச் சிதைந்திருப்பது வடமாகாணசபை மட்டுமே.

மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீட்டில் அதிகளவு பணம், வீட்டு வாடகைக்கே கொடுக்கப்படுகிறது என மாகாணசபையின் நிர்வாகப் பிரிவு உயர் அதிகாரியான திரு. ரங்கராஜன் தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆகவே, இப்படித்தான் பல்கலைக்கழகத்தின் பீடங்களை அமைக்கும் நடவடிக்கைக்குப் பதிலாக மாற்று ஒழுங்குகளை ரகசியமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் நிர்வாகமும் செய்து விடுமோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள்.

ஆனால், கிளிநொச்சியில் இந்தப் பீடங்களை அமைப்பதற்கு வன்னி மக்கள் தாராளமாக உதவ முன்வந்துள்ளது. இதனை உயர்கல்வி அமைச்சரே பாராட்டியுமுள்ளார்.

ஒரு பிரதேசத்தில் பல்கலைக்கழகமொன்று உருவாகும்போது அதற்கு அந்தப் பிரதேச மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியம். அத்தகைய ஆதரவும் ஒத்துழைப்பும் அந்த மக்களின் ஈடுபாடும் கிளிநொச்சியில் இருப்பதையிட்டு மகிழ்வடைகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்தப் பல்கலைக்கழப் பீடங்களை அமைப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திருகுமாரும் அமைச்சர் டக்கஸ் தேவானந்தாவும் கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் பொறியியற் பீடத்தை அமைப்பது என்று அறிவிப்பு ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்டது. இதற்கான காணி இதுவரையில் மூன்று இடங்களில் ஒதுக்கப்பட்டது.

முதலில் காணி ஒதுக்கப்பட்ட இடம் கிளிநொச்சி நகரில் டிப்போ அமைந்துள்ள இடத்துக்கு அண்மையான பகுதியாகும்.

ஆனால், பின்னர் இந்த இடங்களில் மக்கள் அத்துமீறிக் குடியேறியமையால் இந்த இடம் கைநழுவிப் போனது.

பிறகு முறிகண்டியிலிருந்து அக்கராயன்குளத்துக்குச் செல்லும் வீதியில் இரண்டாம் கட்டைக்கு அண்மையான பகுதியில. அதுவும் பின்னர் இல்லாமற் போய்விட்டது. இப்போது கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் அமைவிடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

ஆனால், இந்த இடத்திலாவது அது அமையும் சாத்தியங்கள் உண்டா என்பதே இன்றைய கேள்வி.

 

இதேவேளை கடந்த வாரம் கிளிநொச்சி உள்ளிட்ட வன்னிப் பிராந்தியத்தின் கல்வி நிலை தொடர்பாக எழுதப்பட்டிருந்த கட்டுரை தொடர்பாக கல்விச் சிந்தனையாளர்களிடையே பலவிதமான அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதில் முக்கியமாவையாக இருப்பவை இரண்டு. ஒன்று, அடிப்படைக் கல்வியாகிய முன்பள்ளிக் கல்வி தோற்கும்போது அல்லது அந்தக் கல்வி போதாமையாக இருக்கும்போது பின்னர் தொடரப்படுகின்ற கல்வி மிகப் பாதிப்பானதாகவே இருக்கும். இது பெறுபேறுகளில் மட்டுமல்ல மாணவர்களின் ஆளுமை விருத்தியிலும் குறைபாட்டையே கொண்டிருக்கும் என்பது.

ஆகவே முன்பள்ளிக் கல்வியை மேம்படுத்த வேண்டும். இதற்கு முன்பள்ளிகளை மேம்படுத்துவதுடன் அதற்கான ஆசிரியர்களுக்கான வேதனைத்தையும் கொடுக்க வேண்டும்.

மாதாந்தம் ஆகக் குறைந்தது ஐயாயிரம் ரூபாயைச் செலவழிக்கத் தவறுகிறோம். இந்தத் தவறே பின்னர் பிள்ளைகளின் இடைநிலைக் கல்வியிலும் உயர்கல்வியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கின்றனர் கல்விச் சிந்தனையாளர்கள்.

அஸ்திவாரத்தைச் செம்மையாகப் போடவேண்டும் என்பதே இவர்களுடைய கருத்து.

அடுத்தது, தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றுவோரின் அர்ப்பணிப்பும் அவர்களுடைய கல்விச் சேவையும் மனங்கொள்ளப்படவேண்டும் என்பது. நெருக்கடிகாலத்தில் பணியாற்றியவர்கள் இவர்கள். பற்றாக்குறைகளைத் தீர்ப்பதில், ஆசிரிய வளப்பற்றாக்குறைகளைப் போக்குவதில் பெரிதும் பங்களித்தவர்கள்.

ஆகவே, இவர்களுடைய சேவையை இன்னும் பெறவேண்டியிருப்பதால் இவர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும். இதன்மூலம் பிரதேசங்களிலேயே பெருமளவுக்கான அனுபவம் மிக்க ஆசிரியவளத்தைப் பெற்றுக் கொள்ள முடியம் என்பதும்.

 

 

http://naalupakkam.b...3a6250d87a9e8a2


 


 

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator