தருமபுரி, மே 4: உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த மூன்றரை வயது நாய், தனது எஜமானுடன் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடன் செலுத்திய சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த கீழ்தும்பலஹள்ளியைச் சேர்ந்தவர் தங்கவேல் (43). விவசாயியான இவர், கால்நடைகளை வளர்த்து வருகிறார். பசு மாட்டிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாலை தினமும் சுற்றுப் பகுதி குடியிருப்புதாரர்களுக்கும், டீ கடை, பால் வியாபாரிகளுக்கும் வழங்கி வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆண் நாயை வளர்ப்பதற்காக வாங்கி வந்தார். அதற்கு "மணி' என்று பெயர் சூட்டினார். 6 மாதம் ஆன நிலையில் அந்த நாய், தங்கவேலுடன் நன்றாக பழகிவிட்டது. பால் விற்பனைக்குச் செல்லும் தங்கவேலுடன் ஓடியே வந்ததால், நாய்க்கு தனியாக வண்டி செய்தார் தங்கவேல். மாட்டு வண்டியைப் போல நாய்க்கு ஏற்ற அளவில் மோட்டார் சைக்கிள் சக்கரங்கள் இரண்டை இணைத்து இந்த வண்டியை தயார் செய்தார். இந்த வண்டியில் தங்கவேலையும், பால் கேன்களையும் வைத்து கடந்த 2 ஆண்டுகளாக வலம் வந்தது "மணி'.
6 மாதங்களுக்கு முன் பால் விற்பனைக்கு சென்ற இடத்தில் கார் மோதி மணியின் காலில் பலத்தக் காயம் ஏற்பட்டது.
கால் விரைவில் குணமடைந்தால் காரிமங்கலம் ராமசுவாமி கோயிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதாக வேண்டியிருந்தார் தங்கவேல். பொட்டுமாரனஹள்ளியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் 40 நாள்களாக தொடர் சிகிச்சை பெற்ற மணி, இப்போது நலமுடன் உள்ளது. பெரிய பாரத்தை இழுத்துச் செல்ல முடியாது என்றாலும் தனது வண்டியை பாரம் இல்லாமல் இழுத்துச் செல்லும் திறனுடன் உள்ளது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை நேர்த்திக் கடனையும் செலுத்தியது. தனது வண்டியிலேயே சுவாமிக்கு மாவிளக்கு, தேங்காய், பழம், மாலை உள்ளிட்ட பூஜை பொருள்களை சுமந்து காரிமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து ராமசுவாமி கோயிலுக்குச் சென்ற மணி, தனது எஜமானுடன் நேர்த்திக் கடனைச் செலுத்தியது. இதை அந்தப் பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.
Source: http://dinamani.com/Images/article/2012/5/4/praise.jpg
No comments:
Post a Comment