சேலம், ஏப்.6: புனித
வெள்ளி தினத்தன்று சேலம் ஏற்காட்டில் கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் கை,
கால்களில் ரத்தம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.கேரளா மாநிலம்
பாலக்காடு தொட்டிபாறையை சேர்ந்தவர் ஜோஸ்பின் விமலா(30). இவர் ஆண்டுதோறும்
ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு வரும் தவக்காலம் நாளில் கேரளாவில் இருந்து
ஏற்காட்டிற்கு வருவார். ஏற்காடு லேடிஷீட் வளைவில் உள்ள கார்மல் ஆசிரமத்தில்
தங்கி இருப்பார். இந்த ஆசிரமத்தில் கன்னியாஸ்திரிகள் தவக்கால வழிபாடு
நடத்துவார்கள்.அதில் ஜோஸ்பின் விமலா கலந்து கொள்வார். தவக்காலமான 40
நாட்களும் அவர் இங்கேதான் தங்கி இருப்பார். அதுபோல் இந்த ஆண்டும்
தவக்காலத்தில் பங்கு கொண்டு இன்று புனித வெள்ளி என்பதால் ஆசிரமத்தில்
நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார். அப்போது
பிரார்த்தனையில் ஆழ்ந்திருந்த ஜோஸ்பின் விமலாவின் கை, கால்களில் இருந்து
ரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவல் அறிந்ததும்
ஏராளமான கிறிஸ்துவர்கள் கார்மல் ஆசிரமத்துக்கு வந்து ஜோஸ்பின் விமலா உடலில்
இருந்து ரத்தம் வருவதைப் பார்வையிட்டனர்.இதுபோல தொடர்ந்து 11 ஆண்டுகளாக புனித வெள்ளி தினத்தன்று இவரது கை, கால்களில் ரத்தம் வழிந்து வருவதாக கூறப்படுகிறது.
Source: http://www.dinamani.com/
Source: http://www.dinamani.com/