Wednesday, April 25, 2012

இத்தாலிய கடற்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி அளித்தது இத்தாலி அரசு:


இதற்கான வரைவோலையை இத்தாலிய அதிகாரிகள் கேரள உயர் நீதிமன்றத்தின் லோக் அதாலத்திடம் நேற்று ஒப்படைத்தனர். முன்னதாக, இழப்பீடு அளிப்பதில் உடன்படிக்கை ஏற்பட்டதை அடுத்து, மீனவர் குடும்பத்தினர் தங்களது வழக்குகளைத் திரும்பப் பெற உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதித்தது.
பின்னர் மாலையில் இழப்பீடுத் தொகைக்கான இரு வரைவோலைகளை அதிகாரிகள் உயர் நீதிமன்றத் தில் உள்ள லோக் அதாலத்திடம் ஒப்படைத்தனர்.அதன் பின்னர், மீனவர்களை சுட்ட இரு இத்தாலிய கடற்படை வீரர்களைத் தாங்கள் மன்னித்துவிட்டதாக இரு குடும்பத்தினரும் கடிதம் எழுதி அந்த நாட்டு அதிகாரிகளிடம் தந்தனர்.

பிப்ரவரி மாதம் கேரள மாநிலம் கொல்லம் அருகே ஒரு இத்தாலிய கப்பலில் காவலுக்கு இருந்த இரு கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் இரு மீனவர் கள் உயிரிழந்தனர். இதில் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதைத் தொடர்ந்து இரண்டு இத்தாலிய கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் மத்திய சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய கப்பலான என்ரிகா லெக்ஸி, கேரள போலீஸாரால் முடக்கப்பட்டு, கொச்சி துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிடப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பலை விடுவிக்கக் கோரி கப்பல் உரிமையாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.தங்களது இரு கடற்படை வீரர்களை விடுவிக்க இத்தாலிய அரசு முயற்சிகள் மேற்கொண்டது.
சம்பவம் நடந்தது இந்திய எல்லைக்கு அப்பால் என்பதால் இந்திய நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரிக்கக் கூடாது என்று இத்தாலிய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் சமீபத்தில் தாக்கல் செய்தது.இதனிடையே, உயிரிழந்த இரு மீனவர்களின் குடும்பத்தினர் நஷ்ட ஈடு கோரி மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்தப் பிரச்னையை நீதிமன்றத்துக்கு வெளியே சமரசமாகத் தீர்த்துக் கொள்ள இரு தரப்பினரும் முடிவு செய்தன.
இதைத் தொடர்ந்து இழப்பீடு தொகை கேட்டு மீனவர் குடும்பத்தினர் தொடுத்த வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. நஷ்ட ஈடு பெறுவது பற்றி இரு தரப்பினரிடையே சமரசம் உறுதியானதால், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களது மனுக்களை வாபஸ் பெற உயர் நீதிமன்றம் அனுமதித்தது.

Source: http://www.seithy.com/siteadmin/upload/Italy_150news.jpg

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator