Wednesday, April 25, 2012

குழந்தை யேசு சொரூபத்தில் தங்க நகைகள் திருடிய நபர்; ஒரு வருட கடூழியச் சிறை


யாழ்.கோயில் வீதியிலுள்ள குழந்தை யேசுகோயிலில் சொரூபத்தில் இருந்த 26 பவுண் தங்க நகைகளைத் திருடிய குற்றவாளிக்கும், உடந்தையான நகைத் தொழிலாளிக்கும் 5 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தது யாழ். நீதிமன்றம்.

 
கடந்த நவம்பர் மாதம் சம்பவம் இடம் பெற்றது. இரவு வேளை கோயில் பூட்டும் நேரத்தில் அங்கு நுழைந்து மறைந்து இருந்து விட்டான் திருடன். பின்னர் சொரூபம் வைக்கப் பட்டிருந்த கண்ணாடியை உடைத்து அதிலிருந்த 26 பவுண் நகைகளையும் திருடிச் சென்றுவிட்டான்.
 
யாழ்.பொலிஸில் சம்பவம் தொடர்பாக முறையிடப்பட்டிருந்தது. சந்தேகத்தில் மடத்தடியைச் சேர்ந்த ஒருவரையும், திருடிய நகைகளைக் கொள்வனவு செய்த நகைத் தொழிலாளி ஒருவரையும் பொலிஸார் கைது செய்து யாழ். நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியிருந்தனர். விளக்கமறியலில் வைக்கப்பட்ட இருவரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
 
இந்த வழக்கு யாழ்.நீதி மன்றில் நீதிவான் மா.கணே சராஜா முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நகைகளைத் திருடியவர் 6 மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார். இவர் திருடிய நகைகளை யாழ்.நகரிலுள்ள நகைத் தொழிலாளி ஒருவரிடம் விற்பனை செய்துள்ளார். இருவரும் முன்னர் பாடசாலை நண்பர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
 
தனது நண்பன் என்பதனால் நகைகளைத் தான் கொள்வனவு செய்ததாக நகைத் தொழிலாளி மன்றில் தெரிவித்திருந்தார். சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி ஜொனி மதுரநாயகம் ஆஜராகியிருந்தார்.
 
"குற்றவாளிகள் இருவரும் தம்மீதான குற்றத்தை ஒப்புக் கொள்கின்றனர். இருவருக்கும் வேறு எந்த நீதிமன்றிலும் வழக்கு இல்லை. வறுமையினால் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறுகின்றனர். எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடப் போவதில்லையென அவர்கள் தெரிவிக்கின்றனர்'' என சட்டத்தரணி மன்றில் தெரிவித்திருந்தார். 
 
இதனைப் பரிசீலித்த நீதிவான் எச்சரிக்கை செய்து இருவருக்கும் 5 வருடத்துக்கு ஒத்திவைக் கப்பட்ட ஒருவருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 
Source: http://184.107.230.170/~onlineut/Admin/news/Upload/News/1%20(2).jpg

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator