மடு
வனச் சரணாலயப் பிரதேசத்துக்குள் கனரக அகழ்வியந்திரங்கள் சினத்துடன்
உறுமிக் கொண்டே நிலத்தை கிண்டி மரங்களை வேரோடு சாய்க்கின்றன, அதேவேளை காலை
11 மணியளவில், மேல்மட்ட விளிம்புவரை மண் நிறைக்கப்பட்ட பாரஊர்திகள்
இணைக்கப்பட்ட டிப்பர் லாரிகளை, பாதி மதுபான போதையில் திளைத்திருக்கும்
சாரதிகள் சரணாலயத்தினூடே செல்லும் வீதியினூடாக ஓட்டப்போட்டி நடத்துவதுபோல
அசுர வேகத்தில் ஓட்டிச் செல்கிறார்கள். குழிகள் நிறைந்த வீதியும் அதேபோல
மண் அகழ்ந்தெடுக்கப்பட்ட களமும், சூழல் பாதுகாப்பு பிரதேசம் என 1968ல்
அறிவிக்கப்பட்ட இந்த இயற்கை சுற்றாடலுக்கு இணைக்கப்பட்டுள்ள புதிய
சேர்க்கைகள் ஆகும்.
வடபகுதியில்
சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட ஏனைய முக்கியமான
பிரதேசங்களைப் போலவே 21,000 ஹெக்டேர் பரப்பளவுள்ள மடு வனச் சரணாலயப்
பிரதேசமும், அரசாங்க அனுசரணையுடன் நடத்தப்படும் திட்டமிடாத அபிவிருத்தி
செயற்பாடுகளால் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
சில
வாரங்களுக்கு முன்னால் மடு
வனச் சரணாலயப் பகுதிக்கு சென்றபோது, இந்தக்
கட்டுரை எழுத்தாளர் கண்ட காட்சி மற்றைய காடுகள் ஊடாகச் செல்லும் சாலைகள்
நிர்மாணிப்பதற்காக வஞ்சனையாக இந்த வனச் சரணாலயத்தினுள் பாரிய அளவில் மண்
அகழ்ந்தெடுக்கப் பட்டிருப்பதையும் மற்றும் அதேபோல மிகப் பெரிய மரக் கடத்தல்
மோசடி நடைபெற்றுக் கொண்டிருப்பதையும்தான்.
மண் அகழ்வுக்கான உரிமம்
விலங்கினங்கள்
மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டம் பிரிவு 6ன்படி விவசாயம், சுரங்க
அல்லது வேறு ஏதாவது நோக்கங்களுக்காக நிலத்தை அகழ்வதோ அல்லது துப்பரவு
செய்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. மண்ணியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம்,
இந்திய தொடரூந்து சேவை கட்டிட நிறுவனமான இர்கோன் மற்றும் சியாரா என்பன
உட்பட நான்கு ஒப்பந்தகாரர்களுக்கு மட்டுமே வனச் சரணாலயப் பகுதிக்குள் மண்
அகழ்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
அகழப்பட்ட
மண் வடமாகாணத்தினுள் சாலைகளை நிர்மாணிப்பதற்காகப் பயன்படுத்தப் படுகிறது.
அந்தப் பகுதியில் நிலைகொண்டிருந்த ஒரு அரசாங்க உத்தியோகத்தர் அதுபற்றி
தெரிவிக்கையில், பாதுகாக்கப்பட்ட பிரதேசம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்குள்
மண் அகழ்வதற்காக பணியகம் அனுமதி அளித்திருப்பது, அபிவிருத்தியின்
முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டே, என்று சொன்னார்.
“ஒப்பந்தகாரர்கள்
கடுமையான வழிகாட்டல்களின் கீழேயே நிலத்தை தோண்ட முடியும். அவர்கள் 3 அடி
ஆழத்துக்கு கீழே நிலத்தை தோண்ட முடியாது, அவர்கள் மரங்களை வெட்டவோ அல்லது
மடுவை நோக்கிச் செல்லும் வீதிக்கு அருகாமையிலோ தோண்ட முடியாது” என்றும்
அவர் சொன்னார்.
மண்
அகழ்வு நடத்தவும் மரங்களை மண்ணில் சாய்க்கவும் ஒப்புதல் வழங்கி, மண்ணியல்
ஆய்வு மற்றும் சுரங்கப்பணியகம்; தனக்கு வழங்கப்பட்ட ஆணையை மட்டும்
மீறவில்லை, ஒப்பந்தகாரர்கள் மேலே சொல்லப்பட்ட வழிமுறைகளைப்
பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்கான ஒரு பொறிமுறையைக்கூட
நடைமுறைப்படுத்த அது தவறியுள்ளது. அதற்கும் மேல், மண்ணியல் ஆய்வு மற்றும்
சுரங்கப்பணியகம் வழங்கியிருக்கும் அறிக்கைகள் மற்றும் மேலே எங்களிடம் பேசிய
உத்தியோகத்தரின் பேச்சு என்பன வெளிப்படுத்துவது
இவர்களின் நிபந்தனைகள் வெட்கமில்லாமல் மீறப்பட்டுவரும் ஒரு இடத்தை இவர்கள் யாருமே சென்று கண்காணிக்கவில்லை என்பதனையே.
“தங்கள்
செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு யாருமில்லை என்கிற துணிச்சலில்
ஒப்பந்தகாரர்கள் நிபந்தனைகளை அப்பட்டமாக மீறி வருகிறார்கள் .காவல்துறை
எதுவித நடவடிக்கையும் எடுப்பதில்லை சுரங்கபணியகத்தை கண்ணிலேயே காணவில்லை,
அதேவேளை இராணுவத்தினர் மட்டும் தங்களுக்கு இந்த விடயத்தில் அதிகாரம்
இல்லாவிட்டாலும் குறைந்தது ஓரளவு அக்கறையாவது காண்பிக்கிறார்கள்” என்று
அப்பகுதி வாசி ஒருவர் தெரிவித்தார்.
ஒருபோதும் பின்பற்றப்படாத நிபந்தனைகள்
அநேகமாக
அனைத்து அகழ்வுத் தளங்களுக்கும், ஒப்பந்தகாரருக்கு அதற்கான உரிமம்
வழங்கப்பட்டுள்ளது, ஒரு ஹெக்டேர் பரப்பளவுள்ள தளமொன்றிலிருந்து
மாதமொன்றுக்கு 500 - 530 கன மீற்றர் மண் அகழ்வதற்கும் மற்றும் ஒரு டிப்பர்
லாரியில் மாதமொன்றுக்கு 12 கன மீற்றர் மண்ணை ஏற்றிச் செல்வதற்கும் உரிமம்
உள்ளது. எனினும் அருகாமையில் நிலைகொண்டுள்ள இராணுவ அதிகாரிகள் எங்களிடம்
கூறுகையில், ஒரு ஒற்றை டிப்பர் அந்த குறிக்கப்பட்ட அளவான மண்ணை ஒரு
வாரத்திற்கிடையிலேயே ஏற்றிச் செல்லுகிறது என்றார்கள்.
“நாங்கள்
இவை அனைத்தையும் எழுதி வைத்துள்ளோம், ஓப்பந்தத்தில் குறிக்கப்பட்டுள்ள
விதிகளை அவர்கள் மீறுகிறார்கள் என்று எங்களால் நிரூபிக்க முடியும், ஆனால்
அதை செயலாற்ற எங்களுக்கு அதிகாரம் கிடையாது. ஒரு மாத அளவான 523 கன மீற்றரை
கண்காணிக்ககூடிய காவல்துறையினரை எங்குமே காணமுடியாதுள்ளது, சாதாரணமாக அந்த
இடத்தை ஒருமுறை பார்வையிடுங்களேன்” என்று கூறிய இராணுவ அதிகாரி ஒருவர்
அகழ்வு நடைபெற்ற தளங்களைப் பார்வையிடுவதற்கு எங்களுடன் துணை வந்தார்.
மண்
அகழ்வு நடைபெற்றிருந்த இடம் பேரழிவு படங்களில் காட்சி தருவதைப்போல பிளவு
பட்டுக் காணப்பட்டது. அதிகாரபூர்வமாக 3 அடிக்கு கீமே தோண்டக்கூடாது என்று
தடையுத்தரவு இருந்தபோதிலும், சகல அகழ்வுத் தளங்களிலும் கிட்டத்தட்ட 12
அடிவரை அகழப்படடிருந்தது.அது ஒப்பந்தத்தின் மற்றொரு நிபந்தனையான -
ஒப்பந்தகாரர் மரங்களை வீழ்த்தக்கூடாது - என்பதும் தேவைக்கும் மேலே
மீறப்பட்டிருந்தது.
அநேக
பெரிய மரங்கள் யாவும் விழுத்தப்பட்டு விலைமதிப்புள்ள மரத்துண்டங்கள்
யாவும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்பதற்கு ஏராளமான சாட்சிகள் உள்ளன,
அநேகமாக இச்செயல்களுக்காக அரசியல்வாதிகள் ஒப்பந்தகாரர்களுக்கு துணை
போகிறார்கள்.
“சிலவேளை
இந்தியர்களைத் தவிர மற்ற அனைத்து ஒப்பந்தகாரர்களையும் தேசிய மட்டத்திலுள்ள
அரசியல்வாதிகள் பின்தாங்குகிறார்கள். ஞ}யிற்றுக்கிழமைகளில் இராணுவத்தினர்
மண் அகழ்வதை தடுத்தாலும் அநேகமான உள்ளுர் மற்றும் தேசிய அரசியல்வாதிகள்
முயற்சி செய்து அதில் தலையிட்டு தீர்மானத்தை திரும்ப பெறும்படி செய்து
விடுகிறார்கள். இன்னும் எப்போதாவது உரிய அதிகாரிகள் தவறாக நடைபெறும்
செயல்களை தடுத்து நிறுத்த முயற்சித்தால் அவர்கள்மீது பாரிய அரசியல்
அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன” என்று அந்த அதிகாரி மேலும் சொன்னார்.
களக்
கண்காணிப்பாளர்களாக கடமையாற்றுபவர்களிடம் மரங்கள் கீழே
விழுத்தப்பட்டுள்ளன, நீங்கள் குறிக்கப்பட்ட ஆழத்தைவிட பலமடங்கு அதிகமாக
தோண்டி விட்டீர்கள் என்று சுட்டிக்காட்டினால்.அநேக சந்தர்ப்பங்களில்
அவர்கள் வெறுமே தோள்களைக் குலுக்கி நாணத்துடன் புன்னகை மட்டுமே
செய்கிறார்கள், என்று அளவற்ற கோபத்துக்கு ஆளாகி ஆனால் எதுவும் செய்யமுடியாத
எமக்கு அருகிலிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேவேளை
மண்ணகழும் இயந்திரங்கள் தொடர்ந்து மண்ணை தோண்டி டிப்பர்களில் தொடர்ந்து
நிரப்பிக் கொண்டேயிருக்கிறது அதனை மதுபோதையில் உள்ள சாரதிகள் செம்மண்
பாதையினூடாக புழுதியை கிளப்பியபடி வேகமாக ஓட்டிச்
சென்றுகொண்டேஇருக்கிறார்கள்.
“மண்ணை
டிப்பர்களில் ஏற்றிச் செல்லும்போது அந்த மண்ணை மூடிக் கொண்டு
செல்லவேண்டும் என்று அவர்களிடம் சொல்லப்பட்டுள்ளது, ஏனெனில் அவர்கள்
செல்லும் வழித்தடம் சனசந்தடி மிக்க பல பகுதிகளையும் கொண்டிருக்கிறது.
டிப்பர்கள் வேகமாக செல்லும் வழித்தடத்தில் அநேக பாடசாலைகள் ,சிறிய
பட்டினங்கள், இராணுவ முகாம்கள், காவலரண்கள் என்பன உள்ளன. இந்தியாவின்
இர்கோன் நிறுவனத்தை தவிர வேறுயாரும் இதைக் கடைப்பிடிப்பதில்லை.
“இறுதியாக
பதுங்கு குழிகள், பாடசாலைகள்,மற்றும் ஏனைய மக்கள் அடர்த்தியாக வசிக்கும்
இடங்கள் போன்ற பிரதேசங்களிலுள்ள பாதைகளை ஈரப்படுத்தலாம், என்று சொல்லி
அவர்களை ஓரளவு சமாளித்து அவர்களை இணங்க வைத்தோம், ஆனால் அப்படி அதை
நடத்துவதற்கே இராணுவம் பாரிய தலையீடு செய்யவேண்டியிருந்தது”
சுற்றாடலுக்கும் மக்களின் சுகாதாரத்துக்கும் பாரிய பாதிப்பு
ஏற்படுவதையிட்டு நியாயமான கவலையுள்ளதுபோல தோன்றும் அதிகாரி ஒருவர்
எங்களிடம் தெரிவித்தார்.
வளரும் மர மோசடி
மண்
அகழ்வுக்கு மேலதிகமாக வனவிலங்கு திணைக்களம் அநேகமான உள்ளுர்
வர்த்தகர்களுக்கு சரணாலயத்திலிருக்கும் சிறிய மரங்களை வெட்டுவதற்கும்
அனுமதி வழங்கியுள்ளது. இந்த மரங்களின் கிளைகள் சுற்றுப்புறங்களிலுள்ள
பிரதேசங்களில் இறால் பண்ணைகளை அமைக்க பயன்படுகிறது, அவை ஒவ்வொன்றும் ரூபா
150 படி விற்பனை செய்யப்படுகிறது.
“இதை
நடத்துபவர்கள் எங்களிடம் சொன்னது, அங்குள்ள அதிகாரிகளுக்கு ஒரு சிறிய
ஊக்கத்தொகை கொடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த உரிமங்கள் வழங்கப்படுகின்றன
என்று.அநேகமான நாட்களில் நூற்றுக்கணக்கான அத்தகைய மரங்கள் வெட்டி எடுத்துச்
செல்லப்படுவதை நாங்கள் கண்டிருக்கிறோம், மற்றும் இதை அனுமதிப்பது மூலம்
வனவிலங்கு அதிகாரிகள் மரமோசடிகளை தாங்களாகவே வரவேற்பது தவிர்க்கமுடியாத
ஒன்றாகிறது”என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
எனினும்
வனவிலங்கு திணைக்களத்தின் வவுனியா அலுவலகம், சரணாலயத்தினுள் தாங்கள் மரம்
வெட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதை ஒரேயடியாக நிராகரித்தார்கள்.
வடக்கு
மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள காடுகள் தனித்தன்மையான
சுற்றுச்சூழலுக்கும் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள காடுகளில்
காணமுடியாத விலங்குகளுக்கும் வீடாக விளங்குகிறது. அந்தப் பிரதேசங்களில்
உள்ள நீர்ப்பிடிப்பு உள்ள இடங்களில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்
நீர்வளங்கள் உள்ளன,அந்தப் பிரதேசங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள்
விவசாயிகள். மேலும் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டுப் போரினால்
சீரழிந்துபோன தங்கள் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் எதிhபார்ப்போடு
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எமது
நாட்டின் பெரும்பான்மையான பிரஜைகளின் எதிர்கால செழிப்பு எமது இயற்கை
வளங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளதுடன், சூழலின் முக்கியமான பிரதேசங்களுக்கு
திட்டமிட்டு நடத்தப்படும் அழிவுகள் மூலம் ஸ்ரீலங்கா அரசாங்கம் அவர்களின்
வாழ்வாதரங்களுக்கு நேரடியாகவே அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
தெற்கில்
உள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் அரசாங்கத்தை எதிர்த்து சவால்விட தங்கள்
அடிமட்ட நடவடிக்கைகள் மூலமாக ஒரு வாய்ப்பு உள்ளது, அதற்கான சமீபத்தைய
எடுத்துக்காட்டு நீர்கொழும்பு வாவியில் கடல் விமானத் திட்டத்தை
ஏற்படுத்தும் முயற்சியை தடுத்து நிறுத்திய மீனவர் சமூகத்தவர்கள், ஆனால்
வடக்கிலுள்ளவர்களுக்கு அப்படியான ஒரு தெரிவு சாத்தியப்படாது, மற்றும்
அப்படியான ஒரு அடக்குமுறை நாட்டுக்கு என்ன செய்தது என்பதையும் நாம்
கண்டோம்.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
Source: http://www.thenee.com/html/260412-2.html
No comments:
Post a Comment