Wednesday, April 25, 2012

இலங்கையில் பனடோல் உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைப்பு



கிளாசோஸ்மித்கிளைன் (ஜிஎஸ்கே) நிறுவனத்தின் மூலம் 217 மில்லியன் ரூபா முதலீட்டில் இலங்கையில் முதலாவது பனடோல் வில்லைகள் உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதி நவீன வசதிகள் கொண்டமைந்த இந்த தொழிற்சாலையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர். இரத்மலானை பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையின் மூலம் பனடோல் வில்லைகள் உற்பத்தி செய்யப்படவுள்ளதுடன், இதர வில்லைகளை உற்பத்தி செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையானது இதுவரையில் இலங்கையின் மருந்தாக்கல் துறையில் ஆகக்கூடிய முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திட்டங்களில் ஒன்றாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த தொழிற்சாலையானது, ஜிஎஸ்கே நிறுவனத்தின் சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக, அதியுயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்டமைந்துள்ளதுடன், விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களைக் கொண்டியங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த தொழிற்சாலையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பனடோல் வில்லைகளின் தரம், அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பனடோல் வில்லைகளின் தரத்துக்கு நிகரானதாக அமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு ஜிஎஸ்கே கொன்சியுமர் ஹெல்த்கெயார் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரி.எஸ்.தயானந்த் கருத்து தெரிவிக்கையில், 'இந்த தொழிற்சாலையை, இலங்கை மக்களுடன் நாம் பேணும் தொடர்புக்கு மேலும் வலுவூட்டும் வகையில் நாம் நிறுவியுள்ளோம். அத்துடன் இலங்கையில் நாம் எமது நடவடிக்கைகளை நீண்ட கால நோக்கில் முன்னெடுத்துச்செல்வதை உறுதி செய்வதாகவும் இது அமைந்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக இலங்கையின் மருந்தாக்கல் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாமும் பங்களிப்பு வழங்குவதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறோம். ஜிஎஸ்கே நிறுவனம் சுமார் 500இற்கும் அதிகமான ஊழியர்களை வேலைக்கமர்த்தியுள்ளதுடன், சுமார் 200இற்கும் அதிகமாக தொழில் பங்காளர்களுடன் பணியாற்றி வருகிறது. இதன் மூலம் பெருமளவான மக்களின் வாழ்க்கையில் பங்களிப்பு செலுத்தியும் வருகிறது. எமது நோக்கமான, மக்களின் செயற்றிறனை அதிகரிப்பது, சுகமாக திகழச் செய்வது மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ்வது என்பதற்கு அமைவாக எமது செயற்பாடுகளை மேலும் முன்னெடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

கிளாசோஸ்மித்கிளைன் (ஜிஎஸ்கே) பற்றி :
கிளாசோஸ்மித்கிளைன் (ஜிஎஸ்கே) நிறுவனம், உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற மருந்தாக்கல் துறை மற்றும் சுகாதார பராமரிப்பு துறை சார்ந்த நிறுவனமாகும். சுமார் 117 நாடுகளில் தனது செயற்பாடுகளை இந்நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.
இலங்கையில் ஜிஎஸ்கே நிறுவனம், 60 ஆண்டுகளுக்கு மேலாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமங்களான பனடோல் (பரசிடமோல் வர்க்கம்), ஹோர்லிக்ஸ், வீவா, ஹலிபொரேன்ஜ் மற்றும் ஈனோ, அயடெக்ஸ், சென்சோடைன் போன்றனவற்றுடன் நோய்த்தடுப்பு வக்சீன் வகைகளும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் உள்ளடங்குகின்றன. (படங்கள்: கித்சிறி டி மெல்)







Source: http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/39875-2012-04-24-13-48-36.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator