Tuesday, April 24, 2012

எழுத படிக்க தெரியாத பெண்ணின் நூதன மோசடி: ரூ.5 கோடிக்கு பணம், நகைகளை இழந்தவர்கள் புகார்

மலர்கொடி வீடு






கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது வாகையூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். இரண்டு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். அவ்வப்போது வாகையூருக்கு வருவார்கள்.

வாகையூரைச் சேர்ந்த 18க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநத்தம் காவல்நிலையத்தில் தங்களிடம் ரூ.5 கோடி அளவுக்கு ஏமாற்றிவிட்டார் என்று மலர்கொடி மீது புகார் கொடுத்துள்ளனர்.


புகார் குறித்து விஜயராணி, பனிமலர், தனம், தேவகி, வளர்மதி ஆகியோர் நம்மிடம் கூறியதாவது,


கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மலர்கொடி மகளிர் சுயஉதவிக்குழு ஆரம்பிக்கலாம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். நாங்களும் ஆசைப்பட்டு அதில் இணைந்தோம். எங்களிடம் நெருங்கி பழகிய மலர்கொடி, தேவையான உதவிகளை செய்து வந்தார்.





மலர்கொடியிடம் பணம் மற்றும் நகைகளை இழந்த பெண்கள்


மேலும் அருகில் உள்ள டவுனுக்கு சென்று வரும்போது மளிகை பொருட்களை குறைந்த அளவுக்கு வாங்கி வருவதாக கூறுவார். நாங்களும் அவரிடம் மளிகை பொருட்களை வாங்கினோம். பின்னர் ஆயிரம், இரண்டாயிம் என்று கடன் கேட்பார். உரிய நேரத்தில் கொடுத்துவிடுவார். இதேபோல் பலமுறை வாங்கியுள்ளார். உரிய நேரத்தில் சொன்னபடி கொடுத்தும் உள்ளார்.


ஆனால் ஒவ்வொருவரிடமும் பணம் வாங்கும்போது உங்களிடம் மட்டும் தான் பணம் வாங்கியிருக்கிறேன் என்று கூறினார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் மகளுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. ஆகையால் பணம் தேவைப்படுகிறது என லட்சங்களில் கேட்டார். இருப்பினும் நாங்கள் முன்பு வாங்கியிருந்ததை திருப்பி கொடுத்துவிட்டார் என்பதை நினைத்து கொடுத்தோம். மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க போகிறேன், உங்கள் செயினை கொடுங்கள் நான் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்றும் வாங்கிச் சென்றார். திரும்பி வரவேயில்லை. திடீரென ஒரு நாள் அவரது வீடு பூட்டியிருந்தது. என்னவென்று அக்கம் பக்கத்தில் விசாரித்தபோதுதான் எங்களைப்போல பலர் ஏமாந்திருப்பது தெரியவந்தது என்றவர்கள் ஏமாந்தவர்களின் பட்டியலை வாசித்தார்கள்.


விஜயராணி 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1,20,000
பனிமலர் 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ.11 லட்சம்
தனம் 11 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 லட்சம்
தேவகி ரூ.8 லட்சம்
வளர்மதி 8 பவுன் தங்க நகை
சங்கீதா ரூ.4 லட்சம்
தீபா ரூ.3 லட்சம்
பச்சையம்மாள் ரூ.12 லட்சம் மற்றும் 4 பவுன் தங்க நகை
லட்சுமி 4 பவுன் தங்க நகை
ராதா 3 பவுன் தங்க நகை
ராமலட்சுமி ரூ.3 லட்சம்
செல்வி ரூ.2 லட்சம்
செல்லம் ரூ.1 லட்சம்
சித்ரா ரூ.4 லட்சம்
சேகர் சித்ரா ரூ.2.80 லட்சம்
வசந்தா ரூ.1 லட்சம்
அம்சவள்ளி ரூ.2 லட்சம் மற்றும் 4 பவுன்
தைலம்மாள் ரூ.60 ஆயிரம்


இதேபோல் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. சுமார் ரூ.5 கோடி அளவுக்கு மலர்கொடி ஏமாற்றியுள்ளார் என்று அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.



இன்ஸ்பெக்டர் ரவிக்குமார்




இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் கூறுகையில், மலர்கொடியிடம் லட்சக்கணக்கில் ஏமாந்ததாக வாகையூர் கிராமத்தில் உள்ள பெண்கள் பலர் மாவட்ட எஸ்.பி., பகலவனிடம் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராமநத்தம் காவல்நிலையத்துக்கு உத்தரவிடப்பட்டது.

அந்த கிராமங்களில் உள்ள ஆண்கள் பெரும்பாலானோர் அரபு நாடுகளில் வேலை செய்கின்றனர். வீட்டில் இருக்கும் பெண்கள் அதிக வட்டி பணத்துக்கு ஆசைப்பட்டு கடன் கொடுத்துள்ளனர். ஏமாற்றியதாக கூறப்படும் மலர்கொடிக்கு வாகையூரில் ஒரே ஒரு வீடு மட்டுமே உள்ளது. அவரை தேடி வருகிறோம். மலர்கொடி எழுதப் படிக்க தெரியாதவர் என்று கூறப்படுகிறது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரையில் மலர்கொடியை கண்டுபிடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியவைகளை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
Source: http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74591

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator