Thursday, April 19, 2012

வீடொன்றை அமைக்க இந்தியா வழங்கியது 6 1/2 இலட்சம் ரூபா ஒப்பந்தக்காரர்கள் கட்டியது 1 1/2 இலட்சம் ரூபாவில் அமைச்சர் டக்ளஸ் , ஆளுநர் சந்திர சிறி குற்றச்சாட்டு

யாழ் நகர் நிருபர்

இந்திய அரசாங்கத்தினால் வீடுகள் அமைப்பதற்கு வழங்கப்பட்ட பணத்தில் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளே பொது மக்களுக்காக ஒப்பந்தக்காரர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும்  எஞ்சிய பணம் வீடமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்த நிறுவனங்களிடையே பங்கிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஆளுநர் சந்திர சிறியும் இணைந்து குற்றஞ் சாட்டியுள்ளனர். இந்திய வீடமைப்புத் திட்டமானது இலங்கை அரசாங்கத்தினால் அன்றி இந்திய  அரசாங்கத்தினாலே தொடர்ச்சியாக தாமதப்படுத்தப்படுவதாகவும் அவர்கள் இருவரும் இணைந்து குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய பாராளுமன்ற குழுவினர் வட மாகாண உயர் அதிகாரிகளை வியாழக்கிழமை காலையில் ஞானம்ஸ் ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். இச் சந்திப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துக் கூறும் போதே அவர்கள் இருவரும் இக்குற்றச் சாட்டை முன்வைத்தனர்.
இங்கு கருத்துக் கூறிய வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திர சிறி இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கு தேவையான சகல உதவிகளையும் இலங்கை அரசாங்கம் செய்து முடிநத்துள்ளது. பயனாளிகள் தெரிவு , மிதிவெடியகற்றல்  காணிகள் வழங்குதல் என அனைத்து நடவடிக்கைகளையும் நாம் செய்து முடித்து விட்டோம். தற்போது வீடுகள் அமைக்கும் பணிகளை இந்திய ஒப்பந்த நிறுவனங்களே மேற்கொண்டு வருகின்றன.
அவர்களாலேயே வீடுகள் அமைக்கும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன. தற்போது அமைக்கப்பட்ட வீடுகளை அமைக்க சுமார் 6 1/2 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்ட போதும் ஒப்பந்த நிறுவனத்தால்  அமைக்கப்பட்ட வீடுகள் வெறும் 1 1/2 இலட்சம் ரூபா பெறுமதியானவையாகும் எனக் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து கருத்து கூறிய பாரம்பரிய கைத் தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா,  இந்திய வீட்டுத் திட்டம் தாமதமாவதற்கு இந்திய அரசாங்கமே காரணமாகும். தாமதத்திற்கான காரணத்தை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். ஒப்பந்தத்தை யாருக்கு  வழங்குவது ? என்ற பிரச்சினையாலேயே தொடர்ச்சியாக புதிதாக அமைக்கப்படவுள்ள 1000 வீடுகளும் தாமதமடைகின்றன.
வீடுகள் அமைப்பதற்கு வழங்கப்பட்ட பணத்தை விட குறைந்த பெறுமதியிலேயே வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தினால் வீடுகள் அமைக்க வழங்கப்பட்ட பணம் ஒப்பந்த நிறுவனங்களுக்கிடையில் பங்கிடப்பட்டுள்ளது. மக்களுக்கான வீடுகள் அமைக்க ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட நிறுவனங்கள் அவை வேறு நிறுவனங்களுக்கு தமது ஒப்பந்தத்தை வழங்குகின்றன. இவ்வாறு பல நிறுவனங்களுக்கிடையில் ஒப்பந்தம் கைமாறுவதாலேயே இப் பணத்தை உரிய வாறு வீடுகள் அமைப்பதற்கு பயன்படுத்த முடியவில்லை.
எனவே வீடுகளை அமைக்க வழங்கப்படும் பணத்தை பொது மக்களுக்கே வழங்க வேண்டும்  என்று கோரிக்கை விடுத்துள்ளோம். பொது மக்களது கைகளில் பணம் செல்லும் போது அவர்கள் தாம் விரும்பிய வாறு வீடுகளை அமைத்துக்  கொள்வார்கள் மேலும் அவர்களிடம் மேலதிகமாக பணம் சேர்க்கும் வலு இருக்குமானால் அவர்கள் தாம் கட்டும் வீட்டையும் பெரிதாக கட்ட இது உதவும் எனவே இது தொடர்பில் பேசுகின்றோம் என்றார்.
Source: http://www.thinakkural.com/news/all-news/jaffna/13108-----6-12-----1-12---------.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator