Sunday, April 8, 2012

ஜெனிவாவில் இலங்கையை ஆதரித்த நாடுகளின் நிலையை இந்தியா விரைவில் மாற்றும்: ப.சிதம்பரம்

திருச்சிராப்பள்ளி: ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்த 15 நாடுகளையும் அடுத்த கட்டத்தில் இந்தியா தமது ராஜதந்திரம் மூலமாக தம் பக்கம் மாற்றும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பு, இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு மற்றும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு பாராட்டு என மூன்று விஷயங்களை உள்ளடக்கி முப்பெரும்விழாவை காங்கிரஸ் கட்சி நடத்தியது.


இக்கூட்டத்தில் பங்கேற்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசியதாவது:

இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் பொறுப்புகள் உள்ளன. அதைக் காங்கிரஸ் மதித்து நடக்கிறது.

எஸ்.எம்.கிருஷ்ணா அறிக்கை

இலங்கையும் இறையாண்மை பெற்ற நாடு. எனவே, அயல்நாடு தொடர்பான பிரச்னையில் ஒவ்வொரு கட்டமாகத்தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதன்படி, முதல்கட்டமாக கவனமாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வெளியிட்டார். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தியா முடிவெடுக்கும் எனப் பின்னர் அறிவிக்கப்பட்டது.

பிரதமர் மன்மோகன் அறிக்கை

பின்னர் மார்ச் 19-ல் ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டது, அதைப் பிரதமர் வெளிட்டார். மிகுந்த கவனத்தோடு அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கை இந்தியாவுக்கு மட்டுமல்ல. 46 நாடுகளுக்கும் விடுக்கப்பட்ட செய்தி. சில நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையே அது.

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை 24 நாடுகள் ஆதரித்தன; 15 நாடுகள் எதிர்த்தன; 8 நாடுகள் நடுநிலை வகித்தன. இந்தியா தமது அறிக்கையை கவனமாகத் தயாரித்திருக்காவிடில் ஆதரவு, எதிர்ப்பு நிலை மாறியிருக்கும். எனவேதான் மிகுந்த ராஜதந்திரத்தோடு இந்த விஷயம் கையாளப்பட்டது.

எதிர்ப்பு நாடுகள்

மொரீஷியஸ், ரஷியா, பாகிஸ்தான், சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இந்த தீர்மானத்தின் மீதான அடுத்த நிலையில், இந்த நாடுகளையும் தமது பக்கம் இழுக்கும் ராஜதந்திரத்தையும் இந்தியா கையாளும் என்றார் அவர்.

இக்கூட்டத்தில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், அகில இந்திய காங்கிரஸ் செயலர் சாகர் ரெய்கா, முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Source: http://tamil.oneindia.in/news/2012/04/08/tamilnadu-chidambaram-defends-india-over-us-sponsored-resolution-aid0216.html

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator