1987ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாக ராஜீவ்
காந்தியும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.
செல்லாக் காசுக்குச் சமனான அந்த இந்திய இலங்கை ஒப்பந்தம், பின்னாளில் ஒரு
நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் செயலிழந்தது.
பாகிஸ்தானை கிழக்கு மேற்காகப் பிரித்து வங்க தேசத்தை உருவாக்கிய இந்திரா காந்தி, இலங்கையில் அதைச் செய்ய முன்வரவில்லை.
இலங்கைத்
தமிழர்களின் இன்றைய அவல வாழ்வுக்குரிய முழுப்பொறுப்பையும் இந்தியா ஏற்க
வேண்டும். ராஜீவ் காந்தி காலத்திலிருந்து ஜெனிவாவரை இந்தியா எமக்குத்
துரோகம் மட்டுமே செய்கிறது.
ஜெனிவாவில் அமெரிக்கப் பிரேரணைக்கு
ஆதரவாக இந்தியா வாக்களித்தமை தொடர்பாக எவரும் பெருமிதம் கொள்ள முடியாது.
ஏற்கனவே பலவீனமான நிலையிலிருந்த பிரேரணையின் வாசகங்களை மேலும்
பலவீனமானதாக்கி இலங்கை அரசைக் காப்பாற்றுவதில் இந்தியா வெற்றி
கண்டிருக்கின்றது.
இதனை இலங்கை அரசும் புரிந்து
கொண்டிருக்கின்றது. ஆனால் உள்நாட்டில் உள்ள இனவாதிகளைக்
குளிர்விப்பதற்காகவும், சீனாவின் பக்கம் தான் மேலும் சாய்வதை
நியாயப்படுத்துவதற்காகவும் இந்தியா மீது கோபம் கொண்டிருப்பதாக இலங்கை அரசு
நாடகம் ஆடுகின்றது.
இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா
காந்தி அம்மையார் இலங்கை அரசைத் தனது காலடியில் விழ வைப்பதற்காக 1980களில்
தமிழ்ப் போராளிகளுக்கு ஊக்கமும், உதவிகளும் வழங்கினார். அவர் இலங்கைத்
தமிழ் மக்கள் மீது உண்மையான பாசம் வைத்திருப்பாரேயானால் 1983இல் இடம்பெற்ற
இனக்கலவரத்தின் போது தீர்க்கமான முடிவை எடுத்திருப்பார்.
1971ஆம் ஆண்டு அப்போதைய கிழக்குப்
பாகிஸ்தானில் வாழ்ந்த வங்காள மொழி பேசும் முஸ்லிம் மக்கள் மேற்குப்
பாகிஸ்தானின் ஆளும் வர்க்கத்தினால் ஏவிவிடப்பட்ட இராணுவத்தால் சொல்லொணாக்
கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்திய இராணுவத்தினர் அதில் தலையிட்டு
புதிய வங்காள தேசம் உருவாக்கியதெல்லாம் வரலாறுகள்.
அப்போது இந்திராகாந்தி அம்மையாரே
இந்தியப் பிரதமராக இருந்தார். ஆனால், 1983இல் அத்தகையதொரு நடவடிக்கையை
இலங்கையில் மேற்கொள்வதற்கு அவர் துணியவில்லை. அடுத்த ஆண்டே இந்திரா தமது
சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சீக்கியர்களின் புனித
பொற்கோவிலுக்குள் இந்திய இராணுவம் நுழைந்ததற்கு இந்திராவின் உயிர்
விலையாயிற்று.
அவரது மறைவுக்குப் பின்னர் எல்லாமே
தலைகீழாக மாறிவிட்டன. தாயின் வழியில் பிரதமர் பதவியை ஏற்ற ராஜீவ்
காந்தியின் திடீர்க் கோபமும், அவசரபுத்தியும், அனுபவமின்மையும்,
தீர்க்கதரிசனமற்ற போக்கும் இலங்கைத் தமிழர்களைப் படுகுழிக்குள்
தள்ளிவிட்டது.
ராஜீவ் இலங்கைத் தமிழர்களிடத்தில் ஒரு
போதுமே அக்கறை செலுத்தியவர் அல்லர். மாறாகத் தமிழ்ப் போரõளிகளைப்
பலவீனமாக்கி அவர்களை இல்லாதொழிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தார்.
1987ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் மக்களின்
விருப்பத்துக்கு மாறாக ராஜீவ் காந்தியும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும்
ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர். செல்லாக் காசுக்குச் சமனான அந்த இந்திய
இலங்கை ஒப்பந்தம், பின்னாளில் ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம்
செயலிழந்தது.
இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு
மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. தமிழர் தாயகமும் துண்டாடப்பட்டது. ஒரு
முக்கியமான ஒப்பந்தத்தின் சட்டவலுவை ஆராய்வதற்குக்கூட இந்தியாவுக்கு அக்கறை
இருக்கவில்லை.
இலங்கையில் 2009ஆம் ஆண்டு வன்னியில்
உருவானதைப் போன்றதொரு நிலையை உருவாக்குவதற்கு 1987இல் இங்கு நுழைந்த
இந்தியப் படைகளும் முயன்றன என்பதை மறந்துவிடலாகாது. அப்போது அவர்களால் அது
முடியவில்லை.
அமைதிப்படை என்ற பெயரில் இங்கு வந்த
இந்திய இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் ஏராளம்.
இந்தியாவையும், இலங்கைத் தமிழர்களையும் பகைவர்களாக்கிக் குளிர்காய்ந்த
ஜே.ஆரின் நரித்தனமான சூழ்ச்சிக்குள் அனுபவமில்லாத ராஜீவ் இரையானது ஒரு
துன்பியல் நிகழ்வாகப் பின்வந்த காலங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு
அமைந்துவிட்டது.
1991இல் ராஜீவின் மரணத்துக்குப்
பின்னர் இந்தியா இலங்கைத் தமிழர்களை முற்றாகவே கைகழுவி விட்டது. ராஜீவின்
கொலைக்குப் பழிவாங்க வேண்டுமென்ற எண்ணமே இந்தியாவிடம் தலைதூக்கி நின்றது.
இதற்கொரு சரியான சந்தர்ப்பமும்
வாய்த்தது. 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரை இந்தியா தனக்குச்
சாதகமாக்கிக் கொண்டது. இந்திய மத்திய அரசில் பங்காளியாக இருந்த அப்போதைய
தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதி இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு மறைமுக
ஆதரவு வழங்கினார். ஆனால் பகிரங்கமாக நாடகம் ஆடினார்.
இறுதிப்போரின் இறுதி நாள்கள் இலங்கைத்
தமிழர்களைப் பொறுத்தவரை மிகவும் கொடுமையானவை. சீனா, இந்தியா, பாகிஸ்தான்
உள்ளிட்ட பல நாடுகளின் உதவியுடன் போர் விதிமுறைகளையெல்லாம்
தூக்கியெறிந்துவிட்டு வெறித்தனம் ஆடியது. இந்தியாவின் ஆசீர்வாதம் அப்போது
இலங்கைக்கு முழு அளவில் கிடைத்தது. புலிகளும் அகற்றப்பட்டனர்.
அந்த இறுதி நாள்களில் நிகழ்ந்த
அச்சமூட்டும் சம்பவங்கள் மெல்ல மெல்லக் கசிந்தபோது இந்தியா விழித்துக்
கொண்டது. இலங்கையின் போர்க் குற்றங்களில் தன்னையும் பங்காளியாக்கி
விடுவார்களோ என்ற அச்ச உணர்வு அதனுள் ஏற்பட்டது. அதன் காரணமாகவே பல
வழிகளிலும் இலங்கையைக் காப்பதற்கு அது முயன்றது.
இதன் உச்சக் கட்டமாக ஜெனிவாவில்
இடம்பெற்ற 19ஆவது மனித உரிமைகள் சபையின் அமர்வுகளின்போது அமெரிக்காவினால்
பிரேரிக்கப்பட்ட தீர்மானத்திலுள்ள முக்கிய சில சரத்துக்களை நீக்குவதற்கு
முயன்றது. அதில் வெற்றியும் கண்டது.
சிலர் கூறுவது போன்று நீர் மோர்
போன்றிருந்த ஜெனிவாத் தீர்மானத்தை வெறும் நீராகவே இந்தியா மாற்றியது.
இதனால் இலங்கையும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இந்தியாவும் தப்பிப்
பிழைத்துக் கொண்டது.
உண்மையில் சொல்லப்போனால் இலங்கைத்
தமிழ் மக்களுக்கு இந்தியா ஜெனிவாவில் பெரும் துரோகத்தைத்தான் இழைத்தது.
அமெரிக்கத் தீர்மானத்தில் மாற்றமெதுவும் மேற்கொள்ளாமல், இந்தியா அதனை
ஆதரித்திருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ஒரு
நீதி கிடைக்கும் வாய்ப்பாவது தோன்றியிருக்கும். ஆனால் இந்தியா அதனையும்
தட்டிப் பறித்துவிட்டது.
சுருக்கமாகக் கூறினால் இலங்கைத்
தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியாவின் துரோகச் செயல்களே அவர்களைப் பெரிதும்
பாதித்துள்ளன. இதற்குப் பல உதாரணங்களைக் கூற முடியும்.
எல்லாவற்றையும் இழந்து ஏதிலிகளாக வாழும் நிலைக்கு ஈழத்தமிழர்கள் தள்ளப்பட்டமைக்கு இந்தியாவே முழுப் பொறுப்பையும் கொண்டிருக்கிறது.
Source: http://184.107.230.170