Thursday, April 19, 2012

சிறிலங்கா விரித்த ராஜதந்திர வலையில் மறுபடியும் விழுந்திருக்கிறது இந்திய அரசு - தினமணி தலையங்கம்

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கை அரசு வரவேற்றதன் காரணமே, ஐ.நா. சபையின் குழு எதுவும் இலங்கையைப் பார்வையிட வந்துவிடாமல் தடுப்பதற்காகத்தான். மனித உரிமைக் கழகத்தில் எங்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவே தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி எங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டது என்று சொல்லிக் கொள்வதற்காகத்தான். அதிபர் ராஜபட்ச விரித்த ராஜதந்திர வலையில் மறுபடியும் விழுந்திருக்கிறது இந்திய அரசு என்பதுதான் உண்மை.

இவ்வாறு தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளிதழ் தனது ஆசிரியர் கருத்தில் தெரிவித்துள்ளது. அதன் முழுவிபரமாவது,


இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு திங்கள்கிழமை இலங்கை சென்று சேர்ந்தவுடன், மாற்றியமைக்கப்பட்ட பயணத் திட்டத்தை வெளியிடுகிறது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம். புதிய பயணத் திட்டத்தின்படி, 21-ஆம் தேதி இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் சிற்றுண்டி உண்பதாக இருந்த திட்டம் மாற்றப்பட்டு, 20-ஆம் தேதி மாலை அவரைச் சந்தித்து உரையாடுவதாக மாற்றப்பட்டுள்ளது. திமுகவும், அதிமுகவும் இந்தப் பயணத்திலிருந்து விலகிக் கொண்டுவிட்டதால், இலங்கை அதிபர் ராஜபட்சவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் கேள்விகளை யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் மாற்றி அமைத்திருப்பார்களோ என்னவோ!

இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அதிமுக சார்பில் யாரும் இடம் பெறமாட்டார்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஏப்ரல் 11-ஆம் தேதி அறிவித்ததன் காரணமே, இந்த நிகழ்ச்சி நிரல் குறை கேட்கச் செல்வதாக இல்லை, விருந்து உண்ணச் செல்வதாக இருக்கிறது என்பதால்தான். "போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நேரிடையாகக் கலந்துரையாடவும், அவர்களது உள்ளக் குமுறலைக் கேட்டு அறியவும் வாய்ப்பு இல்லாமல் பயணத் திட்டம் அமைந்துள்ளது. விருந்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்குச் சாதகமான கருத்து இந்தியாவில் ஏற்படத் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் போன்று உள்ளது'' என்று இடம் பெறாததற்கான காரணத்தை முதல்வர் ஜெயலலிதா கூறி இருந்தார்.

அதிமுக இத்தகைய கருத்து மாறுபாடு தெரிவித்தவுடனேயே இந்தப் பயணத் திட்டத்தை மாற்றி அமைத்து, பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் அதிக நேரம் செலவிடுவதற்கும், அதிபர் ராஜபட்சவை நேருக்கு நேராக, பத்திரிகையாளர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் கேள்வி கேட்பதற்கும் இந்திய அரசு வகை செய்திருக்க வேண்டும். அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுகூடக் கோரவில்லை. அதிமுக வராவிட்டால் நல்லது என்கின்ற ரீதியில்தான் மத்திய அரசு செயல்பட்டது.

திடீரென்று இக்குழுவில் திமுக சார்பில் யாரும் இடம்பெற மாட்டார்கள் என்று ஏப்.15-ஆம் தேதி அறிவிக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. "எந்தப் பயனும் இல்லை என்பதற்கு பழைய கால உதாரணங்கள் இருக்கின்றன' என்பதுதான் அவர் தரும் விளக்கம். இது உண்மையென்றால், அவர் இந்தக் குழு அமைக்கப்பட்டபோதே இதைத் தெரிவித்திருக்கலாம். ஜெயலலிதா தனது முடிவை அறிவித்த பிறகு இதை அறிவித்திருக்க வேண்டியதில்லை.

மேலும், 2010-இல் திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் குழு இலங்கை சென்று முள்வேலிக்குள் இருக்கும் மக்களின் துயரங்களைப் பார்த்து வந்தது. இந்தக் குழுவில் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். நியாயமாகப் பார்த்தால், 2010-க்கும் 2012-க்கும் இடையிலான காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிய, முன்பு சென்ற இருவரில் யாரேனும் ஒருவரை அனுப்பி வைத்து, நிலைமையை ஒப்பிட்டு பார்ப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருந்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்பையும் தவற விட்டது திமுக தலைமை.

திமுகவும், அதிமுகவும்தான் தமிழகத்தைக் கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஆட்சி செய்துவரும் கட்சிகள். இந்த இரு கட்சிகள்தான் இலங்கைத் தமிழர் பிரச்னையில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்சிகள். இவர்கள்தான் உண்மை நிலையை நேரில் கண்டுவந்து ஈழத் தமிழர்களின் சார்பில் மத்திய அரசின் முன் குரல் கொடுக்க வேண்டியவர்கள். மத்திய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருக்குமேயானால், இந்தப் பயணக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு முக்கிய கட்சிகளான அதிமுகவும், திமுகவும் இடம்பெறுவதை உறுதி செய்திருக்க வேண்டும். அதை அவர்களும் செய்யவில்லை.

பாஜக சார்பில் சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ் இந்தப் பிரச்னை இருமுனை கத்தி என்பதை உணர்ந்தவர். நாளைக்கு மத்தியில் பாஜக அரசு அமையுமானால், அப்போது இலங்கையுடனான ராஜ்ஜீய உறவுகளை எப்படி எதிர்கொள்வது என்பதை மனதில் வைத்துக் கொண்டுதான் பேசுவார், கருத்து சொல்வார்.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்கள் கட்சித் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் ஒரு வார்த்தைகூடப் பேசப்போவதில்லை. கேள்வி கேட்கப் போவதும் இல்லை.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கை அரசு வரவேற்றதன் காரணமே, ஐ.நா. சபையின் குழு எதுவும் இலங்கையைப் பார்வையிட வந்துவிடாமல் தடுப்பதற்காகத்தான். மனித உரிமைக் கழகத்தில் எங்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவே தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி எங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டது என்று சொல்லிக் கொள்வதற்காகத்தான். அதிபர் ராஜபட்ச விரித்த ராஜதந்திர வலையில் மறுபடியும் விழுந்திருக்கிறது இந்திய அரசு என்பதுதான் உண்மை.

திமுகவும், அதிமுகவும் இல்லாத குழு, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் அவலத்தைப் பற்றிக் கேட்கப் போவதில்லை. அதிகபட்சம் போனால், இந்தியாவின் நிதியுதவி பயன்படுத்தப்படுகிறதா என்கிற புள்ளிவிவரங்களைக் கேட்டுப் பெறுவார்கள், அவ்வளவே!

இலங்கையிலிருந்து திரும்பி வரும் இந்தக் குழுவின் கைகளில் விருந்தின் மணம் இருக்குமே தவிர, ஆற்றொணாது அழுத ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைத்த ஈரம் இருக்கப் போவதில்லை.

அப்படியானால் அவர்தம் துயரங்களை எப்படித்தான் அறிந்துகொள்வது? பாரதி காட்டிய வழிதான்.....

"அவர் விம்மி விம்மி விம்மி அழும் குரல் கேட்டிருப்பாய் காற்றே. துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல் மீட்டும் உரைப்பாயோ...'

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator