புரையோடிப்போயுள்ள
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சாதக சமிக்ஞைகளைக் காட்டவேண்டியது
இலங்கை அரசின் பொறுப்பு. என வலியுறுத்தி உள்ளார் இந்திய நாடாளுமன்றக்
குழுவுக்குத் தலைமைதாங்கி இலங்கை வந்த சுஷ்மா சுவராஜ்.
"அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால்
இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவில் எட்டிவிடலாம்'' என்று ஜனாதிபதி
மஹிந்தவிடம் அவர் நேரில் தெரிவித்துள்ளார். நேற்றுக் காலை சுஷ்மா, அவரது
மகள், இந்தியத் தூதுவர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி
மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
அந்த சந்திப்பில், நாடாளுமன்றத்
தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா
அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் இந்த விடயத்துக்கு இந்திய நாடாளுமன்றக்
குழுவின் பங்களிப்பும் அவசியம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய
எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தீர்வு விடயம், தெரிவுக்குழு
விவகாரம், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட
சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும் ஜனாதிபதி இந்திய எதிர்க்கட்சித்
தலைவியிடம் விளக்கமளித்துள்ளார்.
உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு
இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவி சுஷ்மா சுவராஜ்
நேற்றுக்காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
காலை விருந்து போசனத்துடன்
அலரிமாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர்
அசோக் கே. காந்தா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும்
பங்குபற்றியிருந்தனர்.
இதன் போது தமது குழுவின் இலங்கை பயணம்
தொடர்பில் ஜனாதிபதி மஹிந்தவிடம் கருத்து வெளியிட்ட இந்திய எதிர்க்கட்சித்
தலைவி சுஷ்மா சுவராஜ், முக்கிய பல விடயங்கள் குறித்தும்
கலந்துரையாடியுள்ளார்.
வட பகுதிக்குப் பயணம் செய்தபோது தாம்
அங்கு கண்ட, கேட்டறிந்த குறைநிறைகளை அவர் ஜனாதிபதியிடம்
சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், மக்கள் முன்வைத்த கோரிக்கைகளையும்
ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தார் எனத் தெரியவருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய
தேசியக் கட்சி உட்பட இலங்கையின் அரசியல் கட்சிகளுடன் நடத்திய
சந்திப்பின்போது அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் முன்வைத்த
பிரச்சினைகளையும் சுஷ்மா சுவராஜ், ஜனாதிபதி மஹிந்தவிடம் எடுத்துரைத்தார்
என்றும் அறியமுடிகின்றது.
இதற்கிடையே கருத்து வெளியிட்ட ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ, முக்கிய விடயங்கள் குறித்தான இலங்கை அரசின்
நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
"தேசிய இனப்பிரச்சினைக்குத்
தீர்வுகாணும் முனைப்புடனேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, அதில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா
அழுத்தவேண்டும். இந்திய மத்திய அரசின் கவனத்திற்கு இந்த விடயத்தை நீங்கள்
கொண்டுசெல்லவேண்டும். இந்த விவகாரத்தில் இந்தியக் குழுவின் பங்களிப்பு
இன்றியமையாததாகும்'' என்றும் அவர் இந்திய எதிர்க்கட்சித் தலைவியிடம்
எடுத்துக்கூறியுள்ளார்.
அத்துடன், யுத்தத்திற்குப் பின்னர்
அரசு, வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி
நடவடிக்கைகள், நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்
நோக்கில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி மஹிந்த
இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார் என அறியமுடிகின்றது.
அதேவேளை, இலங்கை அரசு யுத்தத்தின்
பின்னரான காலப்பகுதியினுள் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில்
முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாராட்டத்தக்கதாகும் என
ஜனாதிபதியிடம் தெரிவித்த இந்திய எதிர்க்கட்சித் தலைவி, தமிழ்மக்களுக்கான
அரசியல் தீர்வின் முக்கியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு
உங்களுடைய அரசு தீர்வைக்காணும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது என்றும்
அதற்குச் சாதகமான சமிக்ஞைகளைக் காட்டவேண்டியது உங்கள் அரசின் பொறுப்பு
என்றும் அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு
செல்லுமாறு நாம் கூட்டமைப்பிடம் கேட்டுப்பார்க்கின்றோம் என்றும்
அச்சந்திப்பின் போது இந்திய எதிர்க்கட்சித் தலைவி ஜனாதிபதியிடம்
தெரிவித்துள்ளார்.
http://184.107.230.170/~onlineut/News_More.php?id=42242996521183739
http://184.107.230.170/~onlineut/News_More.php?id=42242996521183739
No comments:
Post a Comment