Wednesday, April 25, 2012

மாண்டு போன தாய், தந்தையும் சிறையில்: கேள்விக்குறியில் மெக்சிகோ குழந்தையின் நிலை

மதுரை: மதுரை அருகே கொல்லப்பட்ட மெக்சிகோ நாட்டு பெண் டெனிஸின் மகள் அடிலாவை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து மெக்சிகோ தூதரக அதிகாரி மதுரை எஸ்.பி. அஸ்ரா கார்க்கிடம் ஆலோசனை நடத்தினார்.

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த மார்ட்டின் மான்ரிக் (40) ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் ஆராய்ச்சி மாணவராக இருந்தார். அவரது 2வது மனைவி டெனிஸ் அகோஸ்டா (35) கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கலா மண்டலம் பல்கலைக்கழகத்தில் நடனம் கற்று வந்தார்.

அவர்களது மகள் அடிலா (5) தந்தையுடன் தங்கி இருந்து பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4ம் தேதி டெனிஸ் தனது கணவர், மகளை பார்க்க ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தார். அப்போது அடிலாவை தன்னுடன் அனுப்புமாறு அவர் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த மான்ரிக் மனைவியைக் கொன்று உடலை சூட்கேசுக்குள் அடைத்து, அதில் இடம் போதாதால் கையை தனியே வெட்டி அதில் திணித்தது தெரிய வந்தது.


உடலை போர்ட் பியஸ்டா காரில் வைத்து எடுத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சூட்கேசோடு எரித்து அதை கண்மாய் கரையில் வீசியது தெரிய வந்தது. இதையடுத்து மான்ரிக் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்ப்டடார். குழந்தையை மதுரையில் உள்ள விடியல் காப்பகத்தில் வைத்துள்ளனர்.

மெக்சிகோவில் இருந்து மான்ரிக்கின் தாய் மோனிகா, சகோதரி லொரைன் ஆகியோர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்து காப்பகத்தில் அடிலாவை சந்தித்தனர். அவர்கள் சிறுமியை தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதேபோன்று டெனிஸின் தாய் ரொனல்டோ பலிடோ மற்றும் சகோதரர்கள் ஆகியோரும் மதுரைக்கு வந்து குழந்தையை பார்த்தனர். இதற்கிடையே எரிந்த நிலையில் கிடைத்த உடல் டெனிஸுடையது தான் என்பதை எப்படி உறுதி செய்தீர்கள் என்று டெனிஸின் தாய் மற்றும் சகோதரர்கள் திருநகர் போலீசாரை போலீசாரைக் கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் டெனிஸ் எரிக்கப்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட தலைமுடி, ரத்தம் படிந்த மண், சாம்பல், மண்டை ஓடு, கருகிய நைட்டி, கால் எலும்பு ஆகியவற்றை வைத்து மரபணு சோதனை செய்ய முடிவு செய்தனர்.

இதையடுத்து அடிலாவுக்கு மரபணு சோதனை செய்ய மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து பிற்பகல் 3 மணிக்கு போலீசார் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரத்தமாதிரி எடுத்தனர். அதன் பிறகு சிறுமி காப்பகத்தில் விடப்பட்டார்.

இந்நிலையில் குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்து மெக்சிகோ நாட்டு தூதரக அதிகாரி குளோரியா கார்சியா மதுரை எஸ்.பி.அஸ்ரா கார்க்கிடம் ஆலோசனை நடத்தினார்.
Source: http://tamil.oneindia.in/news/2012/04/25/world-mexico-embassy-discusses-with-madurai-aid0128.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator