Wednesday, April 25, 2012

தம்புள்ள புனித பிரதேசமே அல்ல! பள்ளிவாசலை அகற்றினால் விளைவுகள் பாரதூரமாகும்!அரசை எச்சரிக்கிறார் அமைச்சர் ஹக்கீம்


தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படக்கூடாது என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறது. பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றினால் அரசு சர்வதேச ரீதியாகவும், உள்நாட்டிலும் பெரும் விளைவுகளை, பாரதூரமான பிரச் சினைகளைச் சந்திக்க வேண்டிவரும். தம்புள்ளை புனிதப் பிரதேசத்திற்குள் பள்ளிவாசல் இருக்கிறது எனக் கூறப்படுவதை நான் முற்றுமுழுதாக நிராகரிக்கிறேன். அப்படி எந்த இடத்திலும் எழுதப்படவில்லை; வரையறுக்கப்படவுமில்லை. தம்புள்ளவில் இவர்கள் கூறும் இடம் புனிதப் பிரதேசமே அல்ல''
 இவ்வாறு நேற்று "உதய'னிடம் காட்டமாகக் கருத்து வெளியிட்டு அரசுக்கு முன்னெச்சரிக்கை விடுத்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப்ஹக்கீம். தம்புள்ளை பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படவேண்டுமென எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து கருத்துவெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 
அவர் மேலும் கூறியவை வருமாறு:
தம்புள்ளையில் பள்ளிவாசல் அந்த இடத்திலிருந்து அகற்றப்படுவதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. இந்த விடயத்தில் நாம் எமது சமூகத்தின் உணர்வுகளை நிலைநிறுத்தி தெளிவுடன் பிரதிபலிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
60 வருடகால பள்ளிவாசலை எதுவித அடிப்படைக் காரணங்களுமின்றி அகற்ற வேண்டுமெனக் கூறுவது எந்தவிதத்திலும் ஏற்க முடியாது. இது விடயமாக நான் சற்றுமுன்னர் கூட அமைச்சர் பஸில் ராஜபக்ஷவைத் தொடர்புகொண்டு கேட்டேன். அவசரப்பட்டுத் தீர்மானங்களை எடுத்து தேவையற்ற சிக்கல்களில் விழுந்துவிடாதீர்கள் என்று நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன்.
தம்புள்ளையில் இந்தப் பள்ளிவாசல் இருக்கும் இடம் இவர்கள் கூறும் புனித பிரதேசமே அல்ல. அப்படி எங்கும் குறிப்பிடப்படவுமில்லை. எந்தப் புத்தகத்திலும் இந்தப் பிரதேசம் புனித பிரதேசம் என்று குறிப்பிடப்படவில்லை. இதை நான் பொறுப்புடன், ஆதாரத்துடன் கூறிவைக்க விரும்புகின்றேன்.
அமைச்சரவையில் எதிர்ப்பேன்
அமைச்சரவையில் நான் இதனை வன்மையாக எதிர்ப்பேன். தம்புள்ளையில் உள்ள சிங்கள மக்கள், மதகுருமார்கள் பலர் இந்தப் பள்ளிவாசல் அங்கு இருப்பதை ஆட்சேபிக்கவில்லை. ஆனால் ஒருசில பிக்குமார் வெளியிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்து இந்தக் கைங்கரியத்தில் ஈடுபடுகின்றனர். 
இதற்குச் சில துவேஷம் மிக்க சிங்கள வானொலி துணைபோகின்றது. அதற்கும் மேலாக எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் இதனை நியாயப்படுத்துவது மிகவும் கொடுமையான விடயமாக இருக்கின்றது.
அமைச்சரவையில் நான் இதனைக் கடுமையாக ஆட்சேபிப்பேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் எமது தனித்துவத்தை விட்டுக்கொடுக்கமுடியாது. அந்தப் பேச்சுக்கே இடமில்லை. என்ன நினைத்துக்ad கொண்டு இவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள்? இந்த அரசுக்காக ஜெனிவாவில் போய் வக்காளத்து வாங்கினீர்களே? அதற்கு ஆட்சியாளர்கள் செய்யும் கைம்மாறு இதுதானா என்று கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.
 எல்லாவற்றிற்கும் ஒரு எல்லையுண்டு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.
விளைவு பாரதூரம்
பள்ளிவாசல் அங்கிருந்து அகற்றப்படக்கூடாது; உடைக்கப்படக்கூடாது என்பதில் எமது நிலைப்பாடு மிகவும் உறுதியானது. இந்தச் சந்தர்ப்பத்தில் அனைத்து முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் ஒன்றுபடவேண்டிய தேவையும், கட்டாயமும் இருக்கிறது. நாங்கள் எமது நிலைப்பாட்டை அரசுக்குத் தெளிவாகச் சொல்லிவிட்டோம். அதையும் மீறி அரசு செயற்படுமானால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்பதையும் சொல்லிவைக்க விரும்புகிறோம். அதனை அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.
 பலவீனமான சமுதாயத்தைப் பாதுகாக்க முடியாத அரசு பலமான அரசாக இருக்கமுடியாது. சமூகத்தின் நன்மை கருதி எந்தவிதமான தீர்மானத்திற்கும் செல்வதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம். அதில் வேறு பேச்சுக்கே இடமில்லை என்றும் குறிப்பிட்டார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.
Source; http://184.107.230.170/

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator