Saturday, April 21, 2012

பள்ளிவாசல் மீதான தாக்குதல் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது அமைச்சர் றிஷாத்

பாரம்பரியமாக முஸ்லிம்கள் வாழும் தம்புள்ள பிரதேசத்தில் தமது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை சமூகத்தினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையானதும், மத வழிபாட்டுத் தலம் சேதப்படுத்தப்பட்டதானதும்  மனித நேயம் கொண்ட எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தலைவரும், கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த  மிலேச்சத்தனமான செயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தம்புள்ள  ஜும்ஆ பள்ளிவாசலில் தமது ஜும்ஆ கடமையினை
வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் நிறைவேற்றுவதற்கு பௌத்த பிக்குகள் தடையேற்படுத்தியதுடன்,  பள்ளிவாசலுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தமது கடுமையான  கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அக் கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ;
இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முஸ்லிம்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு ஒரு வரலாற்றுப் பதிவாகும். பெரும்பான்மை சில சிங்கள மன்னர்களைக் கூட அன்று பாதுகாத்து  தமதுயிரை தியாகம் செய்தவர்கள் முஸ்லிம்கள். அவ்வாறு பெரும்பான்மையினருடன்  நெருக்கமாக வாழ்ந்த முஸ்லிம்களை  இந்த நாட்டில்  சுதந்திரமாக மதக் கடமைகளை செய்வதற்கு தடைகள் ஏற்படுத்தப்படுவதானது  ஆரோக்கியமானதொரு நிலையினை ஏற்படுத்தாது.
இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இன்று வரை இந்த நாடு பிளவுபட்டு விடக் கூடாது என்பதில் ஒருமித்த கருத்துடன் முஸ்லிம்கள் இருந்து வருகின்றனர். அதற்காக  தியாகங்களையும் செய்துள்ளனர்.
மதத்தலங்கள் புனிதமானவை. மக்களுக்கான நேர்வழியினை போதிக்கும் புனிதமிகு இடங்களாகும். அவற்றை அசுத்தப்படுத்த எடுக்கப்படும் செயற்பாடுகளால் இனங்களுக்கிடையில்  மன முறிவையே தோற்றுவிக்கும்.
இலங்கை முஸ்லிம்கள் எப்போதும்  மனச்சாட்சிக்கு விரோதமாக செயற்படுபவர்கள் அல்ல.  இஸ்லாத்தின் வழியில் தமது வாழ்வை நடத்துபவர்கள்.
இவ்வாறான வரலாற்று பின்னணியினைக் கொண்ட முஸ்லிம்களுக்கெதிராக சில பெரும்பான்மை இன சக்திகள் செயற்படுவது  கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் பெரும்பான்மை சமூகம் நேர்மையான  நோக்கைக் கொண்டு செயற்படுவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான  துரதிர்ஷ்ட நிலையேற்படாது தடுப்பதற்கான அடித்தளத்தினை இடுவதற்கு இவ்வாறான தீய சக்திகளுக்கு எதிராக பெரும்பான்மையினச் சமூகம் முஸ்லிம்களுடன் கைகோர்த்து செயற்படுவதற்கு முன் வர வேண்டுமென அழைப்பு விடுப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: http://www.thinakkural.com/

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator