Saturday, April 7, 2012

ஆழ்மனதின் அற்புத சக்திகள்

உயர் உணர்வு நிலைக்கு இரண்டாம் பயிற்சி-மனமும் நீங்களல்ல
பிரபஞ்ச சக்தியின் அங்கமாக உங்களை எண்ண முடிவது எல்லா சமயங்களிலும் உங்களுக்கு சாத்தியமாகா விட்டாலும் பயிற்சி செய்யும் அந்த சில நிமிடங்களிலாவது சாத்தியமாகிய பின், அது உண்மை என்று ஆழமாக உணர ஆரம்பித்த பின் மட்டுமே அடுத்த பயிற்சிக்குச் செல்ல வேண்டும். ஒரு வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின் மட்டுமே ஒரு மாணவன் அடுத்த வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவது போலத் தான் இதுவும். அடுத்த நிலைப் பாடங்களைப் புரிந்து கொள்ளவும், பயிற்சி செய்து தேறவும் முதல் நிலைப்பாடங்களைக் கற்று தேர்ச்சி பெற்றவருக்கே முடியும் என்பதை மறந்து விடக்கூடாது.



முதல் பயிற்சியில் நான் என்று எண்ணும் போது உடலையே நானாக எண்ணும் வழக்கத்தை விட்டொழிக்கப் பழக ஆரம்பித்திருப்பீர்கள். அடுத்ததாக நான் என்று சொல்லும் போது மனதை நினைக்கும் வழக்கத்தையும் விட்டொழிக்கும் சிந்தனைகள் மற்றும் பயிற்சிகளைப் பார்ப்போம்.

நம் கட்டுப்பாட்டில் இருக்கையில் மனம் ஒரு சிறந்த சேவகன். அதன் கட்டுப்பாட்டில் நாம் இருக்கையில் மனம் ஒரு மோசமான எஜமானன். ஒரு உடலைத் தேர்ந்தெடுத்து நாம் இங்கு வந்தது போலவே மனநிலையையும் நாமே தேர்ந்தெடுத்து உருவாக்கிக் கொள்கிறோம். அது நாம் உருவாக்கிக் கொள்வது தான் என்றாலும் அதையே நாம் என்று அடையாளம் காண ஆரம்பிக்கும் போது அதன் பிடியில் சிக்கிக் கொள்கிறோம். பின் அது நம்மை அலைக்கழிக்க ஆரம்பிக்கிறது.

இந்த இரண்டாவது பயிற்சிக்கு முன்பு அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். அமைதியாக இருக்கும் மனதில் வர ஆரம்பிக்கும் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் ஒரு பார்வையாளனாகக் காண ஆரம்பியுங்கள். கோபம், வெறுப்பு, ஆசை, ஏமாற்றம், பொறாமை என்று நூற்றுக் கணக்கில் எழும் உணர்ச்சிகளோடு கூடிய எண்ணங்களை ஒவ்வொன்றாக ஆராயுங்கள். அது எப்படி எழுந்தது, ஏன் எழுந்தது, என்ன தெரிவிக்கிறது என்றெல்லாம் ஒரு விஞ்ஞானி மைக்ராஸ்கோப்பில் ஆராய்ச்சி செய்வது போல செய்யுங்கள். சரியாக நீங்கள் அலசியிருந்தால் அதன் ஆரம்பத்தையும், காரணத்தையும், வளர்ச்சியையும், முடிவையும் கூட நீங்கள்
வெளியாளாக நின்று காண முடியும்.

ஒரு காலத்தில் உங்களிடம் இல்லாமல் இருந்து, பின் உருவாகி, சில சமயங்களில் உங்கள் மனநிலையில் பிரதான இடம் பிடித்து, ஆட்டுவித்து, பின் தணிந்து மடியும் அந்த உணர்ச்சிகளின் வரலாறை நீங்கள் பார்வையாளனாகப் பார்க்க முடியும். உங்களுடையது என்றால் அது என்றுமே உங்களிடம் இருந்திருக்கும். இடையே வந்து போவது என்றால் அது எப்படி உங்களுடையதாக முடியும். அதை எப்படி நீங்களாகவே உங்களால் அடையாளம் காண முடியும்?

எத்தனையோ எண்ணங்கள் ஒரு காலத்தில் மிக முக்கியமாக இருந்து இக்காலத்தில் நீங்கள் அலட்சியப்படுத்துவனவாக இருந்திருப்பதை நீங்கள் காண முடியும். இன்று முக்கியமாக இருப்பவைக்கும் நாளை அதே கதி நேரலாம். ஒரு காலத்தில் இது தான் நான் என்று நீங்கள் நினைத்ததெல்லாம் இன்று யாராவது சுட்டிக் காட்டினால் உங்களை தர்மசங்கடப்படுத்துவதாகக் கூட இருக்கலாம். நேற்றைய நான் வேறு, இன்றைய நான் வேறு என்பது எப்படி உண்மையாக முடியும்? இதெல்லாம் தத்துவமாகத் தோன்றலாம். ஆனால் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் மனம் என்பது கூட மாறிக் கொண்டே இருப்பது, அதனால் அதுவும் நீங்கள் இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் சுலபமாக வரலாம்.

அறிவுபூர்வமாக இதைப் புரிந்து கொள்ள முடிந்தாலும் அதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்வது அவ்வளவு சுலபமல்ல. இதைத் தினமும் திரும்பத் திரும்ப சிந்தித்து உணர்ந்து உங்களுக்குள் மீண்டும் மீண்டும் பதிய வைக்க முயன்றால் ஒழிய அறிவுக்கு எட்டிய இந்த செய்தி அனுபவத்தில் வந்து உதவாது. எனவே இந்த உண்மையை உங்கள் மனதில் ஆழமாகச் சிந்தித்து பதிய வைத்துக் கொண்டு அடுத்த பயிற்சிக்குத் தயாராகுங்கள்.

1) முதல் பயிற்சியைப் போலவே இதற்கும் அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள்.

2) உங்களுக்கு ஏற்ற ஏதாவது ஒரு தியானத்தைச் செய்து முடியுங்கள்.

3) நீங்கள் எல்லையில்லாத பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கம் என்ற நினைவை முதல் பயிற்சியில் குறிப்பிட்டது போல உங்கள் மனதில் பிரதானப்படுத்துங்கள். அதை உணர்வு பூர்வமாக உணர முயற்சி செய்யுங்கள்.

4) இந்த உடலும், மனமும் உங்களது கருவிகள் என்பதை உறுதியாக உங்களுக்குள் பிரகடனப்படுத்துங்கள். ”நான் பிரம்மாண்டமான பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கம். நான் உடலல்ல. மனமும் அல்ல. நான் அந்த இரண்டையும் இயக்கும் எஜமான். நான் உடலையும், உள்ளத்தையும் சார்ந்தவன் அல்ல. அவற்றால் தீர்மானிக்கப்படுபவனும் அல்ல, இயக்கப்படுபவனும் அல்ல. அவற்றை தேவைப்படும் போது, தேவைப்படும் விதத்தில் நான் பயன்படுத்த வல்லவன்”. (வார்த்தைகள் இப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. அவற்றின் மீது நீங்கள் சக்தி செலுத்தவும், இயக்கவும் வல்லவர் என்ற செய்தியைத் தெளிவாகச் சொல்லும்படியாக இருத்தலே அவசியம்)

5) மேலும் சொல்லிக் கொள்ளுங்கள். “உடலையும், உள்ளத்தையும் என் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நான் என்னுள்ளே என் இயல்பான எல்லையில்லாத சக்தியை உணர்கிறேன். எல்லையில்லாத அமைதியை உணர்கிறேன். இந்த மகாசக்தியும், பேரமைதியும் என் பிறப்புரிமை. உலக நடப்பின் தோற்றங்களில் நான் இவற்றை இழந்து விட மாட்டேன்”

இப்படி உங்களுக்குள் சொல்லிக் கொள்ளும் போது அது உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அவை நம்பிக்கையுடன் மிக உறுதியாக சொல்லப்பட வேண்டும். அப்போது தான் இந்தப் பயிற்சி முடிக்கையில் உங்களுக்குள் சக்தியையும், அமைதியையும் நன்றாகவே உங்களால் உணர முடியும். மேலோட்டமாக, எந்திரத்தனமாகச் சொல்லப்படுபவை எந்த தாக்கத்தையும் உங்களுக்குள் ஏற்படுத்தப் போவதில்லை.

இந்தப் பயிற்சியையும் விடாமல் பொறுமையாக தினமும் செய்யுங்கள். நீங்கள் ஆத்மார்த்தமாக தினமும் செய்தால் சில நாட்களில் உங்களிடம் மாற்றத்தை உணர ஆரம்பிப்பீர்கள். அத்தோடு திருப்திப்பட்டு பயிற்சியை நிறுத்தி விடாதீர்கள். மேலும் தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் அந்த மாற்றம் மேலும் மெருகு பெற்று நீடித்து உங்களிடம் தங்க ஆரம்பிக்கும்.

ஒருவன் உடலுக்கோ, மனதிற்கோ அடிமையாக இருந்து கொண்டு ஆழ்மன சக்திகளை தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர முடியாது. ஆளுமை சக்தி அடிமைத்தனத்திற்குக் கிடைத்து விடாது. அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீளவே இந்த இரண்டு பயிற்சிகளும் சொல்லப்பட்டுள்ளன. இந்த இரண்டு பயிற்சிகளையும் மட்டுமே தொடர்ந்து நம்பிக்கையோடு உணர்வு பூர்வமாகச் செய்தால் ஒருவன் வெற்றியாளனாகவும், அமைதி கொண்டவனாகவும் மாறுவது உறுதி.

ஆழ்மன சக்திகளை அடைய உதவும் அடுத்த கட்டத்திற்குப் போவோமா?

மேலும் ஆழமாகப் பயணிப்போம்....

(தொடரும்)

என்.கணேசன்
Source: http://enganeshan.blogspot.in/2010/10/50.html

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator