அடுத்தடுத்த பூமியதிர்ச்சிகள் -சிறிலங்காவை மிரட்டிய சுனாமி ஆபத்து நீங்கியது |
![]() சிறிலங்காவில் கிழக்கு, தெற்கு மாகாணங்களை சேர்ந்த கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவில் இன்று பிற்பகல் 2.40 மணியளவில் (சிறிலங்கா நேரம் 2.10 மணி) றிச்டர் அளவுகோலில் 8.9 அளவுக்குப் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. ஆச்சே மாநில தலைநகர் பண்டா ஆச்சேவிலிருந்து 495 கிலோமீற்றர் தூரத்தில் கடலுக்கு அடியில் 33 கி.மீ ஆழத்தில் இந்த பூமிஅதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் கொழும்பு உள்ளிட்ட சிறிலங்காவின் பலபகுதிகளிலும் உணரப்பட்டது. கொழும்பில் தொடர்மாடி வீடுகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சிறிலங்காவின் கரையோரப் பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளுக்கான தொடருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கரையோரப் பகுதிகளுக்கான தனியார் பேருந்து சேவைகளும் 3 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, கரையோரப் பகுதி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், பணியாளர்களின் விடுமுறைகள் அனைத்தும் உடனடியாக ரத்துச் செய்யபட்டுள்ளன. இதற்கிடையே இன்று பிற்பகல் 4.30 மணியளவிலும், அதையடுத்து 5 மணியளவிலும் சிறியளவிலான நில அதிர்வு சிறிலங்காவில் உணரப்பட்டுள்ளது. திருகோணமலையிலும், கிரிந்தவிலும் கடலின் தன்மைகளில் மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது. கிரிந்தவில் கடல்நீர் உள்வாங்கியுள்ளது. சிறிலங்கா நேரம் பிற்பகல் 5 மணிக்கு பின்னர் இந்தோனேசியாவின் ஆச்சே பகுதியை 8.2 அளவுள்ள பூமியதிர்ச்சி தாக்கியுள்ளது. இதையடுத்து சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மீண்டும் சுனாமி எச்சரி்க்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகளிலும் பூமியதிர்ச்சியின் தாக்கம் உணரப்பட்டது. இதற்கிடையே இன்று மாலை 6.30 மணியளவில் சிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், சிறிலங்காவை சுனாமி தாக்கும் ஆபத்து நீங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. http://www.puthinappalakai.com/view.php?20120411105976 |