Tuesday, April 24, 2012

அம்பாந்தோட்டையைப் பயன்படுத்த அனைத்துலக நிறுவனங்கள் ஆர்வமில்லை – சிறிலங்கா அரசு ஏமாற்றம்

அம்பாந்தோட்டையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிறுவியுள்ள துறைமும், மற்றும் விமான நிலையம் ஆகியவற்றைப் பயன்படுத்த அனைத்துலக கப்பல் மற்றும் விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டாதது சிறிலங்கா அரசுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் திறந்து வைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியுள்ள நிலையில் அங்கு குறிப்பிட்ட சில கப்பல்களே வந்துள்ளன.


துறைமுகத்தின் நுழைவாயிலில் காணப்பட்ட பாரிய கற்பாறைகளை அகற்ற பல மில்லியன் டொலரை சிறிலங்கா அரசு செலவிட்ட போதும், இங்கு போதிய கப்பல்கள் வராதது சிறிலங்கா அரசாங்கத்தை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தநிலையில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு கப்பல்களை அனுப்புமாறு பங்களாதேசுடன் சிறிலங்கா அரசு பேச்சுகளை நடத்தியுள்ளது.
வேறும் பல நாடுகளுடனும் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.

அதேவேளை கொழும்புத் துறைமுகத்தின் ஊடாக இறக்கப்பட்டு வந்த மீளப் புதுப்பிக்கப்பட்ட வாகனங்களை, அம்பாந்தோட்டை துறைமுகத்திலேயே இறங்க வேண்டும் என்று சிறிலங்கா அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் வாகன இறக்குமதியாளர்கள் விசனமடைந்துள்ளனர்.

அதேவேளை, அம்பாந்தோட்டையில் மத்தால என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வரும் சிறிலங்காவின் இரண்டாவது விமான நிலையம் இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்படவுள்ளது.

இதன் கட்டுமானப் பணிகள் 70 வீதம் முடிவடைந்துள்ளன.

இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்படவுள்ள இந்த விமான நிலையத்துக்கு சேவையை ஆரம்பிப்பதில் அனைத்துலக விமான நிறுவனங்கள் ஏதும் ஆர்வம் காட்டவில்லை.

ஆறு நிறுவனங்கள் சேவையை ஆரம்பிக்க முன்வந்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ள போதும், அது இன்னமும் உறுதியாகவில்லை.

இதனால் சீனா, ரஸ்யா போன்ற, தமக்கு நெருக்கமான நாடுகளிடம் சிறிலங்கா அரசு உதவி கோரிப் பேச்சு நடத்தவுள்ளது.

மத்தால விமான நிலையத்துக்கு சீனா, ரஸ்யாவில் இருந்து சேவைகளை நடத்த சிறிலங்கா அரசாங்கம் இந்த நாடுகளிடம் கோரவுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தால அனைத்துலக விமான நிலையம் ஆகியவற்றுக்கு சிறிலங்கா அரசு பல பில்லியன் டொலரை கொட்டிய போதும், அதன்மூலம் பெரும் வருவாயை ஈட்ட முடியாது என்று பொருளாதார நிபுணர்கள் பலரும் முன்னரே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Source:http://www.puthinappalakai.com/

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator