Thursday, April 26, 2012

வடக்கில் சுகாதார ஊழியர் நியமனத்தில் பாரிய முறைகேடுகள் செல்வம் எம்.பி.முறைப்பாடு

மன்னார் நிருபர்
மன்னார் மற்றும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கு ஊழியர்களை நியமிப்பது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரி பணிமனை ஊழியர்களை நியமிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போதும் நேர்முகத் தேர்வு எவையும் இடம்பெறாத நிலையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் முறைகேடான நியமனம் வழங்கப்பட்டமை குறித்தும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திர சிறியின் கவனத்திற்குக் கொண்டு வந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்; மன்னார், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனைகளிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில் மன்னார், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். எனினும் விண்ணப்பித்த எவருக்கும் நேர்முகத்தேர்வுக்கான கடிதங்கள் வராத நிலையிலும் நேர்முகத்தேர்வு இடம்பெறாத நிலையிலும் 92 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் ஒருவரது சிபாரிசிலேயே இந்த 92 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் உரிய ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பித்த பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த முறைகேடான நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம். இப்படிப்பட்ட அநீதியான நியமனங்களைக் கண்டிக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்த அவர், தற்போது மன்னாரில் சிற்×ழியர்களை நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெற்று வருகின்ற போதும் அவையும் நீதியான முறையில் இடம்பெறுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13654-2012-04-26-18-42-07.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator