![]() |
மாத்தளை இறத்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்வத்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி ஒருவர் பரிதாபகரமாக நேற்று முன்தினம் பலியாகியுள்ள அதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ மற்றும் பிட்டபெத்தர ஆகிய பகுதிகளில் மேலும் மூவர் மின்னல் தாக்கத்துக்கு பலியாகியிருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண கூறுகையில், இறத்தோட்டைப் பகுதியில் குறித்த நபர் தனது வீட்டிற்குப் பின்னால் உள்ள மரத்தடியில் நின்று கொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியதாகத் தெரியவந்துள்ளது. பலியானவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர எனும் இடத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த இரு பெண்களும் அக்குரஸ்ஸ அத்துரலிய பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஆணொருவருமாக மூவர் நேற்று மின்னல் தாக்கத்துக்கு பலியாகியுள்ளனர். இறத்தோட்டையில் பலியானவர் 60 வயதான வேலுப்பிள்ளை அருணாச்சலம் என தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் நேற்று புதன்கிழமை வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி 17 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம் முழுவதும் 51 பேர் இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டின் காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் மழை மற்றும் இடி, மின்னல் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம், இடியுடன் கூடிய மின்னல் வேளைகளில் பொது மக்கள் மைதானம் போன்ற திறந்த வெளிகளில் நிற்பதையும் கூடுமான வரை மின்னியல் உபகரணங்களின் பயன்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. _
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13069-2012-04-18-18-55-26.html
No comments:
Post a Comment