Thursday, April 19, 2012

வடக்கின் அபிவிருத்தி, நலன்புரித் திட்டங்கள் தொடர்பில் இந்தியக் குழு அரசுக்கு நன்றி தெரிவிப்பு _

  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்றக் குழு வடக்கு அபிவிருத்தி மற்றும் நலன்புரித் திட்டங்களை அவதானித்ததன் பின்னர் அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்திருப்பதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

வடக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களைப் பார்வையிடுவதற்கும் அதே நேரம் இந்திய நிவாரணங்களை பகிர்ந்தளிப்பதற்குமான இந்தியப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கை வந்துள்ள குழு நேற்று புதன்கிழமை வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டதன் பின்னரே இவ்வாறு நன்றி தெரிவித்திருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்றக் குழு தனது வடக்கிற்கான விஜயத்தின் போது வவுனியா செட்டிகுளத்தில் அமைந்துள்ள கதிர்காமம் நிவாரணக் கிராமத்தில் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட வேலைத்திட்டம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் யுத்தம் இடம்பெறற பிரதேசங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலை குறித்தும் கவனம் செலுத்தியிருந்தது.

இதே சந்தர்ப்பத்தில் மேற்படி குழுவிடம் வடக்கு மக்கள் அங்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நலன்புரித் திட்டங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்திய நிவாரண வீட்டுத் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவில் நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் பொது மக்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, அங்கு மேலும் 250 வீடுகளை நிர்மாணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞர்கள் 150 பேருக்கு துவிச்சக்கர வண்டிகளையும் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களையும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் மேற்படி பாராளுமன்றக் குழு அன்பளிப்புச் செய்தது.

இது இவ்வாறிருக்க எதிர்காலத்தில் வடக்கின் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்காக இந்திய அரசின் உதவி பெற்றுத் தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. ___
Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37666

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator