Tuesday, April 24, 2012

இலங்கைதென் கொரியா இடையே மூன்று உடன்பாடுகள் கைச்சாத்து

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் தென்கொரிய ஜனாதிபதி லீ மயூங் பங் ஆகியோர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளனர். தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கும் தென்கொரியாவின் அரச நிர்வாக மற்றும் பாதுகாப்பு விவகார அமைச்சுக்கும் இடையிலான தகவல் தொழில்நுட்ப பரிமாற்றம் சம்பந்தமான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சுக்கும் தென்கொரிய குடியரசின் திட்டமிடல் மற்றும் நிதி அமைச்சுக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையில் இருநாட்டு அரச தலைவர்களும் கைச்சாத்திட்டுள்ளனர்.
இது தவிர நாட்டின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் தென்கொரிய அறிவு விருத்தி மற்றும் பொருளாதார விவகார அமைச்சுக்கும் இடையில் மின்சக்தி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை வலுவான முதலீட்டுக்கான ஒரு தளமாக திகழ்வதாக இதன்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கொரியாவின் முன்னணி வர்த்தகர்கள் சிலரை நேற்று சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இந்தக் கருத்தினைத் தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பானதும் ஸ்திரமானதுமான முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதற்கும் இலங்கை தயாராக இருக்கின்றது என்று பெரும்பாலான முதலீட்டாளர்கள் புரிந்துகெண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முதலீட்டுக்கான தீர்மானங்களின் போது இலங்கை முதலீட்டுச் சபை திட்டங்களைத் தெரிவு செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்குவதுடன் அந்தச் சந்தர்ப்பங்களின் ஊடாக பயனைப் பெற்றுக்கொள்ளுமாறு தென்கொரிய வர்த்தகர்களிடம் ஜனாதிபதி கேட்டுள்ளார்.
source: http://www.thinakkural.com/news/all-news/local/13513-2012-04-24-19-04-55.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator