Saturday, April 21, 2012

பள்ளிவாசல் மீது தாக்குதல்; தம்புள்ளையில் பிக்குகள் அராஜகம்; வேடிக்கை பார்த்தனர் பொலிஸார்

தம்புள்ளையில் அமைந்துள்ள 60 வருடகால பழைமை வாய்ந்த ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் மீது 500இற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் பொலிஸாரின் முன்னிலையில் நேற்றுத் தாக்குதல் நடத்திக் கடும் சேதத்தை ஏற்படுத்தினர். 

 
பள்ளியில் ஜும் ஆ தொழுகைக்காக அமர்ந்திருந்தவர்களும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அப்பள்ளியில் ஜும்ஆ தொழுகை ரத்தானதோடு தம்புள்ளையில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டன.
 
பள்ளிவாசலின் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்த பொலிஸாருக்கு மேலதிகமாக 200 இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டே நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
 
பகல் 12 மணிமுதல் 2.30 மணிவரை நீடித்த இத்தாக்குதலால் பள்ளிவாசலுக்குக் கடும் சேதம் ஏற்பட்டது. பள்ளிவாசலைச் சூழ்ந்துநின்று பிக்குகள் கற்களாலும் கம்பு, தடிகளாலும் தாக்குதல் நடத்தினர் என்று பள்ளிவாசலில் அமர்ந்திருந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் கூறினர்.
 
இதனால் பள்ளிவாசலின் சுவர்கள் மற்றும் ஏனைய பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டது என்று அவர்கள் மேலும் கூறினர். இதனால் தம்புள்ளை நகரில் கடும் பதற்றம் நிலவியது. தம்புள்ளை பஸாரில் உள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமான கடைகள் மூடப்பட்டு பஸார் வெறிச்சோடிக் காணப்பட்டது.
 
தம்புள்ளை புனித பூமிக்குள் இந்தப் பள்ளிவாசல் அமைந்துள்ளது என்று தெரிவித்து அதை அங்கிருந்து அகற்றிவிடுமாறு கோரியே பிக்குகள் இந்தத் தாக்குதலை நடத்தினர். தம்புள்ளை ரஜமகா விஹாரையின் பீடாதிபதி கினாமுலுவ சிறி சுமங்கலதேரரே இதற்குத் தலைமைதாங்கினார்.
 
அந்தப் பள்ளிவாசலை உடைக்கப்போவதாகப் பிக்குகள் நேற்றுமுன்தினமே அறிவித்திருந்தனர். ஜும்ஆ தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது ஊர்வலமாக வந்து இத்தாக்குதலை நடத்துவதென்று அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அவ்வாறே செய்தனர்.
 
இதன்போது உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் அந்தப் பள்ளியில் ஜும்ஆ தொழுகையை நடத்தவேண்டாம் என்று மத்திய மாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரமுக பள்ளி நிர்வாகிகளிடம் கேட்டிருந்தார். தாம் தொழுகையை நிறுத்தமாட்டோம் என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் பிரமுகரிடம் தெரிவித்தனர்.
 
அதேவேளை, அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இப்பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தவேண்டாம் என்று பிக்குகளைக் கேட்டுக் கொண்டதோடு, வழமைபோல் தொழுகையை நடத்துமாறு பள்ளி நிர்வாகிகளிடம் கூறியிருந்தார்.
 
இந்த நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பள்ளிவாசலுக்கருகில் பெற்றோல்குண்டுத்தாக்குதல் ஒன்றும் நடத்தப்பட்டது என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் "சுடர் ஒளி'யிடம் தெரிவித்தனர்.
 
இதனால் அதிகாலையில் இருந்து பதற்றம் ஆரம்பமானது. பள்ளிவாசலின் பாதுகாப்புக்காகப் பொலிஸார் நிறுத்தப்பட்டனர். அத்தோடு, பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்படவிருக்கும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிவாசல் நிர்வாகிகள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும், கொழும்பில் உள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களிடமும் மகஜர்கள் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் இந்த விடயத்தைப் பிரதமர் டி.எம்.ஜயரட்ணவின் கவனத்திற்குக் கொண்டுவந்த போது பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தும் சதித்திட்டம் முறியடிக்கப்படும் என்றும், பள்ளிவாசலுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறியிருந்தார்.
 
அதேபோல், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்து தாக்குதல் நடவடிக்கையை முறியடிக்கப்போவதாகப் பள்ளி நிர்வாகிகளிடம் வாக்குறுதியளித்தனர்.
 
இவ்வாறு பள்ளியைப் பாதுகாக்கப்போவதாகப் பலரும் வாக்குறுதி வழங்கிய நிலையில்தான் பிக்குகள் பொலிஸாரின் முன்னிலையில் தாக்குதல் நடத்தினர்.
கொழும்பில் பல சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்திய பிக்குகள் மீது பல தடவைகள் கண்ணீர் புகைக்குண்டுத்தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டிய பொலிஸாரால் ஏன் இந்தப் பிக்குகளை விரட்ட முடியவில்லை என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
12 முதல் 2.30 மணிவரை பிக்குகளின் கட்டுப்பாட்டின் கீழேயே பள்ளிவாசல் இருந்தது என்றும் 2.30 மணிக்குப் பின்னர் இராணுவத்தினர் வந்தே பள்ளிவாசலை அவர்களிடமிருந்து மீட்டெடுத்தனர் என்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் "சுடர் ஒளி'யிடம் கூறினர்.
 
இந்த மாதம் 23 ஆம் திகதிவரை எவரும் பள்ளிவாசலுக்குள் நுழையக்கூடாது என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Source: http://184.107.230.170/~onlineut/Admin/news/Upload/News/1.jpg

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator